(மீள்பிரசுரம்) தமிழ் நாடக மேடைக்கு லடீஸ் வீரமணியின் பங்களிப்பு கூழாங்கற்களும் அவர் கைகளில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களாகும்

லடீஸ் வீரமணி“இலங்கையின் தமிழ் நாடக உலகில் மறக்கமுடியாத ஒரு பேசும் பொருளாக மறைந்த லடீஸ் வீரமணி திகழ்கிறார். அவரின் படைப்புகளையும் ஆளுமைகளையும் முறையாக ஆய்வு ரீதியாகவும் பதிவு செய்தால் தமிழ் நாடகத்துறைக்கு அவர் ஆற்றிய வீரியமிக்க பணி வெளிப்படும். அவர் தமிழ் நாடக மேடைக்கு அளித்த பங்களிப்பு என்ற தலைப்பில் உரையாற்ற வந்திருக்கும் அந்தனி ஜீவா சுறுசுறுப்பானவர் காத்திரமான தகவல்களை தேடி அவற்றை மக்களிடையே வெளிக்கொணர்வதில் மிகவும் சமர்த்தர். சில நேரங்களில் அவற்றை ஆத்திரமாகவும் வெளிப்படுத்த அஞ்சாதவர்”.

கொழும்புத் தமிழ்ச் சங்கம் வாராந்தம் புதன்கிழமைகளில் நடத்தும் அறிவோர் ஒன்றுகூடலில் ‘தமிழ் நாடக மேடைக்கு லடீஸ் வீரமணியின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் அந்தனிஜீவா உரையாற்றிய கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசும் போதே இவ்வாறு கூறினார்.

கடந்த மே மாதம் 26ம் திகதி இந் நிகழ்வு நடைபெற்றது. பேராசிரியர் சு. வித்தியானந்தன் போன்றவர்கள் தமிழ் நாடகம் பற்றிய முழுக்கவனம் செலுத்தியதுடன் வந்தாறுமுல்லை செல்லையா போன்ற நாட்டுக்கூத்து கலைஞர்களையும் அவர்களின் கூத்துக்களையும் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வந்து அவற்றை மேடை ஏற்றி அவர்களின் திறமைகளை வெளிகொணந்தவர். பின்னர் வந்த பல்கலைக்கழக மட்ட ஆய்வாளர்கள் அவரின் செயல்பாடு களை பின் பற்றினாரா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்று தனது உரையில் மேலும் தெரிவித்தார் சபாஜெயராஜா.

அந்தனிஜீவா உரையாற்றுகையில் தலைநகரில் தமிழ் நாடக மேடையில் விஸ்வரூபதரிசனம் தந்தவர் நடிகர் லடீஸ் வீரமணி என்றார்.

“தலைநகரில் தமிழ் நாடக வரலாறு தமிழ் நாடக மேடையின் முன்னோடி யும் முதல்வருமான இராஜேந்திரம் மாஸ்டர் அவர்களிடமிருந்தே தொடங்குகிறது.

இந்தியாவில் தூத்துகுடியிலிருந்து வந்து கொழும்பு மத்தி ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் குடியேறிய கத்தோலிக்க குடும்பத்தில் கலையார்வமிக்க இளைஞர் ஒருவருக்கு இசைக்கருவிகளை வாசிப்பதிலும், கத்தோலிக்கக் கூத்துக்களிலும் ஈடுபாடு இருந்தது. ஈழத்து தமிழ் நாடக வரலாறு கலையரசு சொர்ணலிங்கத்துடன் தொடங்குவதைப் போல் கொழும்பு தமிழ் நாடகமேடையின் வரலாறு இராஜேந்திரம் மாஸ்டர் என்ற கலையார்வமிக்க இளைஞனுடனே தொடங்குகிறது. டவர் ஹோல் நாடக அரங்கின் முன்னோடிகளான ஜோன் டி சில்வா, டொன் பாஸ்ரியான், சார்ள்டயஸ் ஆகியோரின் நாடகங்களும் கொழும்பில் வாழ்ந்த இராஜேந்திரன் மாஸ்டர் என்ற கலைஞரை ஊக்குவித்தன.

ஜோன் டி சில்வா என்ற கலைஞரு டன் தொடர்பு கொண்டிருந்த இராஜேந் திரம் மாஸ்டர், அவரோடிருந்த டபிள்யூ. சதாசிவத்தின் தூண்டுதலால், ஜோன் டி சில்வா அவரது மகன் பீட்டர் சில்வா ஆகியோரின் நாடக மேடை ஏற்றத் திற்குத் திரைக்குப் பின்னால் இருந்து பல பணிகளில் ஒத்துழைப்பு வழங்கி யுள்ளார். இதனால் நாடகங்களை அனுபவ ரீதியாக கற்று அறிந்து கொண்டவர்.

Continue Reading →

மறைந்த நண்பர் அ. ந. க.

எழுத்தாளர் அ.ந.கந்தசாமிஎழுத்தாளர் செ.கணேசலிங்கன்எழுத்தாளர் அறிஞர் அ.ந.கந்தசாமி மறைந்து இன்றுடன் ஐம்பத்தொரு வருடங்களாகிவிட்டன. இன்றும் தமிழ் இலக்கிய உலகு அவரை மறந்து விடவில்லை. அவரது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் , நாவல் , மொழிபெயர்ப்பு ஆகியவை இணையத்தில் அவ்வப்போது வெளியாகிக்கொண்டுதானுள்ளன. இதுவரையில் அவரது படைப்புகளில் ‘மதமாற்றம்’ (நாடகம்), ‘வெற்றியின்  இரகசியங்கள்’ (உளவியல் நூல்) ஆகியவையே நூலுருப்பெற்றுள்ளன. ஏனைய படைப்புகளும் விரைவில் நூலுருப்பெறுமென எதிர்பார்ப்போம்.

1967 ஆம் ஆண்டினை அ.ந.க.வின் ஆண்டு என்று காவலூர் ராஜதுரை அ.ந.க பற்றி கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாண்டில்தான் அவரது ‘மனக்கண்’ தினகரன் (இலங்கை) பத்திரிகையில் தொடராக வெளியாகி பெரும் வரவேற்பினைப்பெற்றது. அவரது ‘மதமாற்றம்’ நாடகம் கொழும்பில் லடீஸ் வீரமணி இயக்கத்தில் நான்கு தடவைகள் மேடையேறிப் பெரும் வரவேற்பைபெற்றது. இவ்விதம் அவ்வாண்டில் எழுத்துலகில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தவர் பெப்ருவரி 14, 1968  அன்று , தனது நாற்பத்து நான்காவது வயதில் அவரைத்தாக்கியிருந்த நோய்களின் தாக்கத்தால் மரணித்தது துயரகரமானது.

அ.ந.க.வின் இறுதிக்காலத்தை அவரது நண்பர்களிலொருவராக விளங்கிய எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவரது குமரன் சஞ்சிகையில் எழுதிய ‘மறைந்த நண்பர் அ. ந. க.’ என்னும் கட்டுரையில் நினைவு கூர்ந்திருந்தார். கொழும்பு ஆஸ்பத்திரியில் நோயின் தீவிரம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அ.ந.க.வைப்பற்றி அங்கிருந்தவர்கள் யாருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. இந்நிலையில் அவருக்குப் போதிய கவனிப்புகள் கிடைக்கவில்லை. இதனைக்கண்டு மனம் நொந்த செ.க உடனடியாக உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவரைக் கவனிக்க ஏற்பாடுகள் செய்தார். அவரது இறுதிக்காலத்தில் அவருக்கு உறுதுணையாக விளங்கிய அ.ந.க.வின் கலையுலக நண்பர்களான எழுத்தாளர் ஏ.இக்பால், லடீஸ் வீரமணி தம்பதியினர் செய்த அரிய உதவிகளையெல்லாம் இக்கட்டுரையில் பதிவு செய்திருக்கின்றார் செ.க.

அ.ந.க இளமையிலேயே தன் உறவுகளை விட்டுப்பிரிந்து தனித்துத் தன் வாழ்வினைக் கொண்டு நடாத்தியவர், தொழிலாளர் போராட்டங்கள், இலக்கியமென்று , ஊடகத்துறைப்பங்களிப்பு எனத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்த அவருக்கு இறுதிவரை உறுதுணையாக நின்றவர்கள் அவரது கலை, இலக்கிய உலக நண்பர்களே. இவ்விதமான நண்பர்களைப்பெற்ற அவர் உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும். மேலும் இறுதிக்காலத்தில் அ.ந.க.வைப்பராமரித்த எழுத்தாளர் செ.கணேசலிங்கன், லடீஸ் வீரமணி தம்பதியினர், கவிஞர் ஏ.இக்பால் போன்றவர்களைத் தமிழ் இலக்கிய உலகம் எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரும்.

இக்கட்டுரையின் இறுதியில் செ.க. “நண்பர் தமது திறமை பற்றி கடைசி நாட்களில் கற்பனை செய்ததுபோல இலக்கிய வரலாற்றில் அவர் மதிப்புப் பெறாதுபோக நேரினும் நாடகத்துறையில் இந் நாடகம் அவருக்கு ஒர் அழியாச் சின்னமாக நிலைத்து நிற்கும் என்று துணிபாசுக் கூறுவேன்.” என்று கூறுவார். ஆனால் அ.ந.க.வின் படைப்புகள் அனைத்துமே அழியாச்சின்னங்களாக நிலைத்து நிற்பதைக் காலம் இதுவரையில் நிரூபித்திருக்கின்றது. இனியும் நிரூபிக்கும் என்று துணிந்து கூறுவேன். வ.ந.கி, ஆசிரியர், பதிவுகள் –

Continue Reading →

(கீற்று.காம்) ‘ஈழத் தமிழ் நாவல் இலக்கிய முன்னோடி’ செ.கணேசலிங்கன்

செ.கணேசலிங்கன்“கலை, இலக்கியம், நாடகம், வெகுசன ஊடகம், தீண்டாமை, சுரண்டல், வன்முறை, சித்திரவதை, சிறுவர் மீதான கொடுமை, பெண்கள் மீதான கொடுமை, ஆதிக்கம், தேசிய இனப் பிரச்சினையால் தமிழ் மக்கள் குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் தோன்றியுள்ள அவலங்கள். தொழில்மயமாக்கலும், நகரமயமாக்கலும், நவீனமயமாக்கலும் தோற்றுவித்துள்ள மாறுதல்களும், பிரச்சினைகளும், மனித பலவீனங்களை வளர்த்துச் சுரண்டும் சந்தைப் பொருளாதார வியாபாரங்கள். நுகர்வுப் பண்பாட்டின் மனித விரோதப் போக்கு, பன்னாட்டு நிறுவனங்களின் மேலாதிக்கம், நவீன ஏகாதிபத்தியச் சுரண்டலின் பன்முகப் பரிமாணங்கள், உலகமயமாதல் என்ற பெயரில் நடைபெறும் அராஜகம். இப்படியான பல்வேறு விடயங்கள் பற்றிய விளக்கங்களாகவும், விமர்சனங்களாகவும் செ.கணேசலிங்கன் எழுத்துக்கள் அமைந்துள்ளன ” எனப் பேராசிரியர் சி.தில்லைநாதன் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

“மனிதனைப் பிணைத்திருக்கின்ற அடிமைச் சங்கிலியைத் தகர்த்தெறிவதற்கான எழுச்சி நசுக்கப்பட்டு, மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு, அவர்களது விடுதலைக்கான போராட்ட உணர்வைத் தட்டி எழுப்பி உத்வேகப்படுத்தும் பண்பு மானிட நேயப்படைப்பாளிகளிடமுண்டு. சமூக, பொருளாதார அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை ஒரு பெரும் சக்தியாக திரட்டுவதற்கு மக்களுக்கு உத்வேகத்தைக் கொடுப்பவனே மானிடநேயப் படைப்பாளி. தோல்வியிலும், அடிமை மனப்பான்மையிலும் நீண்டகாலமாகப் பீடிக்கப்பட்டு, விரக்கியடைந்த நிலையிலுள்ள மக்களின் ஆத்மாவைத் தட்டி எழுப்பி விழிப்படையச் செய்து போராட்டப் பாதையில் அவர்களை இட்டுச் செல்லும் வல்லமை படைத்தவனே மனிதநேயப் படைப்பாளி. ”

மேலும், “ மனித குலத்திற்கு விசுவாசமாக நடப்பது, மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூறுவது, கசப்பான உண்மையானாலும் அதனைத் துணிவுடன் கூறுவது, மனிதர்களின் உள்ளத்திலே எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை ஊட்டி அதனை உறுதிப்படுத்துவது, அதைக் கட்டுவதிலே அவர்களுக்குள்ள ஆத்மசக்தியைப் பலப்படுத்துவது, உலக சமாதானத்துக்கும், சாந்திக்குமாகப் போராடுவது, எங்கெல்லாம் சமாதானத்துக்கான குரல் ஒலிக்குமோ அங்கெல்லாம் சமாதான வீரர்களை அந்தரங்க சுத்தியுடன் ஆதரிப்பது. முன்னேற்றத்திற்கான உண்மையான நேர்மையான முயற்சியில் மக்களை ஒன்று திரட்டுவது இதுதான் மானிடநேயனின் கடமை. ” என்று ‘ டான் நதி அமைதியாகப் பாய்கின்றது’ என்ற உலகப் புகழ்பெற்ற நாவலைப்படைத்த மிகையில் ஷொலகோ கூறியதை உள்ளத்தில் ஏற்று இலக்கியம் படைத்தவர் செ.கணேசலிங்கன்.

செ.கணேசலிங்கன் இலங்கையில் யாழ்ப்பாணம் அருகில் உள்ள உரும்பிராய் என்னும் கிராமத்தில் 09.03.1928 ஆம் தேதியன்று, க. செல்லையா-இராசம்மா தம்பதியரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

தமது ஆரம்பக் கல்வியை உரும்பிராய் கிராமத்து கிறிஸ்துவப் பள்ளியில் கற்றார்.  சந்திரோதய வித்தியாசாலையில் ஆறாவது வகுப்பு பயின்றார். பின்னர், யாழ்ப்பாணம் பரமேசுவரக் கல்லூரியில் சேர்ந்து எச். எஸ்.சி. பயின்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார். மேலும், இவர் லண்டன் மெட்ரிகுலேசன் தேர்விலும் தேர்ச்சியடைந்தார். நாள்தோறும் காலையில் வயலில் விவசாய வேலைகளை செய்த பின்னர், கல்லூரிக்கு நடந்தே சென்று படித்தார்.  இவர் கல்வியில் மிகத் திறமை பெற்ற மாணவராக விளங்கியதால் சிறப்பு வகுப்பேற்றம் ( னுடிரடெந யீசடிஅடிவiடிn) செய்யப்பட்டார்.

எச்.எஸ்.சி. எனும் தேர்வில் தேர்ச்சியடைந்த பின் 1950 ஆம் ஆண்டு இலங்கை அரசின் பாதுகாப்புத்துறையில் எழுத்தராக பணியில் சேர்ந்து கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில்  1981 ஆம் ஆண்டுவரை பணியாற்றினார்.

மகாத்மா காந்தி 30.01.1948 அன்று படுகொலை செய்யப்பட்டதையொட்டி தமது உரும்பிராய் கிராமத்தில்  நண்பர்களுடன் இணைந்து நினவேந்தல் கூட்டம் நடத்தினார். அந்த நினைவேந்தல் கூட்டத்தில், “ மகாத்மா காந்தியின் உடல் யமுனா நதிக்கரையில் இப்போது எரியூட்டப்பட்டிருக்கும், அவர் மறைந்தாலும் அவரது கொள்கைகளை நாம் கடைபிடிப்பதனால் இங்கே நிலவும் சாதிவெறி ஒழிக்கப்பட வேண்டும். இங்குள்ள கோவில்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கூறப்படும். மக்களுக்குத் திறந்துவிடப்பட வேண்டும். ” என்று தீவிரமாக உரையாற்றினார்.

Continue Reading →