ஆய்வு: சென்ரியு கவிதைகளின் உள்ளடக்கங்கள்

ஆய்வு: சென்ரியு கவிதைகளின் உள்ளடக்கம்.மானுடத்தை அடிப்படையாக கொண்டு படைக்கப்படுவது சென்ரியு. ஹைக்கூவிலிருந்து தோற்றம் பெற்ற புதிய இலக்கிய வகையான சென்ரியு, ஹைக்கூவின் இயற்கை, ஜென்தத்துவம், உயர்ந்த நடை, குறிக்கோள் போன்ற கட்டுப்பாடுகளை துறந்து சுதந்திரமாக செயல்படும் போக்கினைக் கொண்டிருக்கின்றது. ஹைக்கூவும் சென்ரியுவும் மூன்றடிகளை உடைய கவிதைகளாக இருப்பினும் கருத்தளவில் இரண்டும் வெவ்வேறானவை. மானுடத்தினை நடைமுறையில் மனிதன் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டு வெளிப்படையாகப் படைக்கப்படுகின்ற சென்ரியுவின் இத்தகையத் தன்மையே பிற கவிதை இலக்கியங்களிலிருந்து சென்ரியு கவிதை வேறுபடக் காரணமாகின்றது. சென்ரியுவின் உள்ளடக்கங்களாக உண்மையை உரைத்தல், அங்கதம், நகைச்சுவை, வேடிக்கை, விடுகதை, பொன்மொழி ஆகியவற்றை இக்கட்டுரையின் வாயிலாக விரிவாக காணலாம்.

உண்மையை உரைத்தல்
சென்ரியு கவிதைகள் உண்மையினை வெளிப்படையாக உள்ளபடியே உரைத்திடும் கவிதை இலக்கியமாகும். மானுட நடத்தைகளை பாடுபொருளாகக் கொண்டு உண்மைத்தன்மையுடன் சென்ரியு படைக்கப்படுவதால் கற்பனை, வர்ணனை ஆகியவற்றிற்கு இடம் தராது கூறவந்த செய்தியை வெளிப்படையாக உண்மைத்தன்மையுடன் எடுத்துக்கூறும் தன்மைக் கொண்டது. இதனை, 

‘பேச்சாளரின் பேருரை
கேட்டுக்கொண்டே இருக்கலாம்
நல்ல உறக்கம் வரும் வரை ‘1

என்னும் கவிதை வரிகள் அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. இன்றைய காலக்கட்டத்தில் பேச்சாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நற்சிந்தனைகளுடன் மக்களை மகிழ்விக்கும் வகையில் பேசுவதில்லை என்பதனை இக்கவிதை வரிகள் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

Continue Reading →

ஆய்வு: தமிழ் இலக்கியச் செய்யுட்களைப் பாரதக்கதையோடு தொடர்புபடுத்தும் முறைமை

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -இவர் பாஞ்சால நாட்டரசன் யாகசேனனின் மகள் பாஞ்சாலி எனவும் குறிக்கப்படுவாள்; இவளைப் பஞ்ச கன்னியரில் ஒருத்தி என்றும் கூறுவர்; அகலிகை, திரெளபதி, சீதை, தாரை, மண்டோதரி என்பவர்கள் பஞ்ச கன்னியர்களாகக் கூறப்படுகிறார்கள். இவள் யாகசேனன் வளர்த்த வேள்வித் தீயினில் தோன்றியவள். இவள் முற்பிறப்பில் நளாயினி என்னும் பெயர் உடையவளாக இருந்து மெளத்கல்ய முனிவரைக் கணவராகப் பெற்றிருந்தாள். அவர் மெளத்கல்ய முனிவர் நளாயினியின் கற்புடைமையைச் சோதித்தறிய விருப்பம் கொண்டார். குட்ட வியாதி கொண்டவர் போல் நடந்தும் நளாயினியின் கற்புடைமையைக் கண்ட முனிவர் மனம் மகிழ்ந்து உனக்கு வேண்டியது என்ன? என்று கேட்க, அவள் நின் நீங்காத அன்பே வேண்டும் என்று கேட்டாள். நளாயினி இப்பிறப்பு முடிந்து இறந்தாள். பின் இந்திரசேனை என்னும் பெயருடன் மறு பிறப்பை அடைந்து மெளத்கல்ய முனிவரையே சார்ந்தாள். அவர் இல்வாழ்வைத் துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். எனவே, இந்திரைசேனையின் கருத்திற்கு இணங்காமல் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யும்படி கூறினார் சிவபெருமான். சிவபெருமான் இவள் முன் தோன்றி அருள் செய்தபோது, ‘எனக்குக் கணவனைத் தருவீராக’ என்று ஐந்து முறை வேண்டினாள். இவர் முற்பிறப்பில் இவள் தன் கணவனின் ஐந்து வடிவங்களோடு இன்பம் நுகர்ந்தமையைக் கருத்தில் கொண்டு அவ்வாறே ஆகுக என்றார்; சிவபெருமானால் பிலத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திரர்கள் ஐவரையும் பார்த்து ‘நீவிர் இந்திர சேனைக்குக் கணவர் ஆகுங்கள்’ என்றார். அவ்வாறே அந்த ஐவரும் நிலவுலகத்தில் பாண்டவர்களாகப் பிறந்து திரெளபதியைத் திருமணம் செய்தார்கள் என்று ஒரு புராதனக்கதை கூறப்படுகிறது. இக்கதை முற்பிறப்புடன் தொடர்புபடுத்திக் கூறப்படுவதாகும்.

யாகசேனன் நடத்திய சுயம்வரத்தில் அர்ச்சுனனால் வெற்றிபெற்றுக் கொண்டுவரப்பட்ட திரெளபதி குந்தியின் கட்டளைப்படி ஐவரையும் மணக்க வேண்டியவளானாள். அப்போது வியாசர் திரெளபதியின் முற்பிறப்பை யாகசேனனிடம் எடுத்துச்சொல்லி இத்திருமணத்தை நடத்துக என்றார். தெளமிய முனிவர் தருமனுக்கு முறைப்படி திருமணச்சடங்குகளை நடத்திப் பின் முறைப்படி மற்றைய நால்வருக்கும் திருமணம் நடந்தது. பாண்டவர்கள் செய்த இராசசூய வேள்விக்கு வந்திருந்த துரியோதனனை இவள் இகழ்ந்து நகைத்தற்காக அவன் சினங்கொண்டான். துரியோதனன் பாண்டவர்களைச் சூதாட்டத்திற்கு அழைத்து அவர்களின் நாடு நகரங்களை இழக்கச் செய்து அடிமைப்படுத்தினான். அவன் திரெளபதியைத் தன்தொடையின்மீது அமரச்சொல்லியும் தன்னைக் கணவராக ஏற்றுக்கொள்ளும்படியும் துன்புறுத்தினான். திரெளபதி மறுத்ததால், அவன் துச்சாதனனை ஏவி அவளது துகிலை உரியச் சொன்னான். கிருட்டிணன் அருள்பெற்றுத் துகில் வளரப்பெற்றாள். மறுபடியும் சூதாடி அடிமையிலிருந்து விடுபட்டுச் சபதங்கள் பல செய்து அவள் பாண்டவருடன் வனவாசம் சென்றாள்.

வனவாசத்தின் இறுதியாண்டில் மறைந்து வாழ்வதற்காக விராடநாட்டினைப் பாண்டவர்கள் அடைந்தனர். விராடன் மனைவி சுதேட்டிணைக்கு வண்ணமகளாக விரதசாரிணி என்ற பெயரில் திரெளபதி மறைந்து வாழ்ந்தாள். கீசகன் என்பவன் இவளை அடைய முற்பட்டபோது வீமன் (பீமன்) அவனை வதம்செய்து கொன்றான். பாண்டவர்கள் வெளிப்பட்டுத் தங்கள் உரிமைகளுக்காகப் பாரதப்போரில் ஈடுபட்டுத் துரியோதனனை அழித்தனர். அவன் அழிவிற்குப் பின்னரே தன்னுடைய அவிழ்ந்த கூந்தலைத் திரெளபதி முடிந்து கொண்டாள். திரெளபதிக்கும் பாண்டவர்களுக்கும் தோன்றிய குழந்தைகள் உபபாண்டவர்கள் எனக் குறிக்கப்பட்டனர். தருமனுக்குப் பிரதிவிந்தனும் பீமனுக்குச் சுருதசோமனும் அர்ச்சுனனுக்குச் சுருதகீர்த்தியும் நகுலனுக்குச் சதாநீகனும் சகாதேவனுக்கு சுருதசேனனும் பிறந்தனர். பாரதப்போரின் முடிவில் உபபாண்டவர்களைப் பாண்டவர்கள் எனத் தவறுதலாகக் கருதி அசுவத்தாமன் கொன்றான். திரெளபதியைத் திரெளபதியம்மன் என்ற பெயரில் கருநாடகத்திலும் தமிழ்நாட்டிலும் தெய்வமாக வணங் கப்படுகிறாள். கும்பகோணத்தில் உள்ள திரெளபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் சிலையும் அரவான் சிலையும் இருக்கின்றன. சில இடங்களில் விழாவின் போது தீமிதித்தல் முக்கிய நிகழ்ச்சியாக இடம்பெறுகிறது (பாலுசாமி, 2009: 607 – 608).

Continue Reading →