காலங்கள் செய்யும் கோலங்கள்

முருகபூபதிதொழில் நுட்ப வளர்ச்சியினால் நன்மைகளும் தீமைகளும் ஏற்படுவதை அவதானித்துவருகின்றோம். கால மாற்றம் நமக்களித்த வரப்பிரசாதங்கள் அநேகம். அதேசமயம் அந்த வரப்பிரசாதங்களை புரிந்துகொள்ளமுடியாமலும் அனுபவிக்கமுடியாமல் திணறுபவர்களையும் அன்றாடம் காணமுடிகிறது. நான் வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் வெள்ளீய அச்சு எழுத்துக்கள் கோர்க்கப்பட்டு, பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுத்தான் பத்திரிகைகள் வெளியாகின. அச்சுக்கூடங்களும் கொம்பசிட்டர் என்ற அச்சுக்கோப்பாளர்ளை நம்பித்தான் இயங்கின. சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், எழுத்தாளர் விந்தன் ஆகியோர் தமது வாழ்வை அச்சுக்கூடத்தின் கொம்பசிட்டர்களாகத்தான் தொடங்கினார்கள். ஜெயகாந்தன் அச்சுக்கூடங்களில் ஒப்புநோக்காளராக (Proof Reader) இருந்தவர்.  

1988 இற்குப்பின்னர் வீரகேசரி அச்சுக்கூடத்தில் திடீரென்று எதிர்பாராத மாற்றங்கள் நேர்ந்து, பல அச்சுக்கோப்பாளர்கள் தொழிலை இழக்கநேரிட்டது. கணினியின் அறிமுகம் அவர்களை அங்கிருந்து அந்நியப்படுத்தியது. அச்சமயத்தில் நான் அவுஸ்திரேலியாவிலிருந்து அங்கு தொழிலை இழந்தவர்களுக்காக வருந்தினேன். அவர்களுக்கு தெரிந்த ஒரே தொழில் அச்சுக்கோர்ப்பதுதான். திடுதிப்பென அவர்கள் தொழிலை இழந்தபோது மிகவும் சிரமப்பட்டார்கள். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறதல்லவா? சிலர் வெளிநாடுகளுக்கு பறந்தனர். சிலர் வேறு தொழில்களுக்கு சென்றனர். சுமார் பதினொரு வருடங்களின் பின்னர் இலங்கை திரும்பி, குறிப்பிட்ட அச்சக்கோப்பாளர்களின் நிலையை ஆராய்ந்தேன். ஒருவர் எழுதும் ஆற்றலும் விளையாட்டுத்துறை பற்றிய தகவல்களும் தெரிந்தவராயிருந்தமையால், வீரகேசரி ஆசிரியபீடத்திலேயே விளையாட்டுத்துறை நிருபராகியிருந்தார்.

மற்றும் ஒருவருக்கு ஒளிப்படத்துறையில் அனுபவம் இருந்தமையால், தொடர்ந்து திருமணங்கள் மற்றும் பிறந்த தினக்கொண்டாட்டங்களுக்குச்சென்று படம்பிடித்து வாழ்க்கையை ஓட்டினார். பின்னாளில் சொந்தமாகவே ஒரு ஸ்ரூடியோவை அமைத்துக்கொண்டதுடன், வீடியோ தொழில் நுட்பத்திலும் தேர்ச்சிபெற்றார். அத்துடன் நில்லாமல், தனது மகளை கணினி தொழில் நுட்ப பயிற்சிகளுக்கு அனுப்பி, தேர்ந்த பக்க வடிவமைப்பாளராக்கிவிட்டார். அந்த யுவதி கொழும்பில் ஒரு பிரபல அச்சகத்தில் தனது பணியை மிகவும் சிறப்பாக தொடருகின்றார். பல எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் இதழ்களையும் அழகாக வடிவமைக்கின்றார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 332: ‘ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்’ என்னும் அனோஜன் பாலகிருஷ்ணனின் கட்டுரை பற்றி…

அனோஜன் பாலகிருஷ்ணன்‘ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்’ என்னுமொரு கட்டுரையை அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதியிருக்கின்றார் (https://www.jeyamohan.in/119092… ) அதனை எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைப்பதிவில் மறுபிரசுரம் செய்து தட்டிக்கொடுத்திருக்கின்றார். இளம் எழுத்தாளரைத் தட்டிக்கொடுத்து ஆதரிப்பது நல்ல விடயமே. அக்கட்டுரையின் ஆரம்பத்தில் அவர் எழுதிய பின்வரும் கருத்துகளைக் கவனியுங்கள்:

“தனிப்பட்ட வாழ்கையில் அலைக்கழிப்பும் துயரம் நிறைந்த அனுபவமும் இருந்தால் நல்ல இலக்கியம் பிறக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. டால்ஸ்டாய், ஜெயமோகன்,ஷோபாசக்தி, மிலன் குந்தேரா, ஹனீப் குரேஷி வரை அதற்கான முன்னோடிகள் இருக்கிறார்கள்தான்.”

ஷோபாசக்தி, ஜெயமோகன் ஆகியோர் தமிழ் இலக்கிய உலகில் முக்கிய படைப்பாளிகள். ஆனால் அவர்களை டால்ஸ்டாயுடன் ஒரே தட்டில் வைத்து ஒப்பிட முடியுமா? சிறிது அதிகமாகத்தெரியவில்லையா?

இலக்கியமென்பது அலைக்கழிப்பு உள்ளவர்களாலும் . அவ்விதமில்லாதவர்களாலும் படைக்க முடியும். அவர்களை வரிசைப்படுத்துகையில் அவர்களது படைப்புகளின் சிறப்பின் அடிப்படையில் குறிப்பிடுவதே சிறந்தது. வெகுசனப்பத்திரிகையில் பல்வேறு வாழ்க்கைப்போராட்டங்களில் சிக்கி,உழைப்புக்காக மர்மக்கதைகள்படைக்கும் எழுத்தாளர் ஒருவரையும் டால்ஸ்டாய்க்குப் பக்கத்தில் வைத்து இவ்விதமான கூற்றின் அடிப்படையில் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?

தனிப்பட்ட வாழ்க்கையில் அலைகழிப்பும் துயரமும் நிறைந்த அனுபவமும் இருந்தால் நல்ல இலக்கியம் பிறக்கும் என்பதை மட்டும் காரணமாக வைத்து இவ்விதமாக ஒப்பிட முடியுமா? இதனை வாசிக்கும் ஒருவருக்குக் கட்டுரையாளர் இந்த ஒரு விடயத்துக்காக மட்டும் இவ்விதமொரு வரிசையைச் சுட்டிக்காட்டுகின்றார் என்பது புலப்படாது. டால்ஸ்டாய் என்னும் படைப்பாளியின் படைப்புகளூக்கு ஈடாக ஏனைய படைப்பாளிகளும் ஒப்பிடப்பட்டிருக்கின்றார்கள் என்றுதான் புலப்படும்.

Continue Reading →

வாடிக்கையாகிவிட்ட பாலியல் வன்முறை – வெட்கக்கேடு!

வாடிக்கையாகிவிட்ட பாலியல் வன்முறை – வெட்கக்கேடு!பொள்ளாச்சியில் பல வருடங்களாக நடந்துவந்திருப்பதாகத் தற்போது அம்பலமாகியிருக்கும் பாலியல் வன்முறைச் செய்தி அளிக்கும் அதிர்ச்சியும், ஆதங்க மும் சொல்லுக்கப்பாலானவை. நாளும் நாளிதழ்களில் 4 வயதுப் பெண்குழந்தை முதல் பல்வேறு வயதுகளிலான பெண்கள் இவ்வாறு வன்முறைக்கு ஆளாகும் செய்திகளைப் படிக்கவேண்டியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு கடலூர் பக்கத்தில் கல்லூரிகளுக்குப் புதிதாகச் சேரும் மாணவிகளை அந்தக் கல்லூரிகளின் சீனியர் மாணவிகளைக் கொண்டே சினிமா, ஹோட்டல் என்று சுதந்திர வாழ்க்கையை அறிமுகப்படுத்துவதாய் பொறியில் சிக்கவைத்து, சிகரெட், போதைமருந்து போன்ற பழக்கங்களுக்கு உட்படுத்தி, பின், விபச்சாரத்தில் தள்ளிவிடும் நாசகார கும்பலொன்று பற்றிய செய்தி வந்தது. ஆனால், இத்தகைய செய்தி வெளிவந்தால் கல்லூரியின் பெயர் கெட்டுவிடும் என்று இத்தகைய செய்திகளை மறுப்பதும், முடக்குவதுமே பெரும்பாலான கல்லூரி நிர்வாகங்களின் அணுகுமுறை யாக இருந்தது; இருந்துவருகிறது. கல்லூரிகளில் இத்தகைய சமூகச் சீர்கேடுகளிருந்து மாணாக்கர்களைப் பாதுகாக்க ஏதேனும் விழிப்புணர்வூட்டல் சார் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா தெரியவில்லை. படித்த பெண்கள், படிக்காத பெண்கள் என்று எல்லோரும் பாதிப்புக்காளாகும் இத்தகைய அக்கிரமங்களை அனைத்து ஒலி-ஒளி ஊடகங்களும் தங்கள் அரசியல் பிறவேறு சார்புகளுக்கு அப்பால் தோலுரித்துக்காட்டுவது அவசியம். அதேசமயம், ஒவ்வொரு சேனலும் தங்கள் செய்தி சேனலில் பெண்விடுதலையைப் போற்றிக் கொண்டே தங்கள் எண்டர்டெயின்மெண்ட் சேனலில் மிக மிகப் பிற்போக்கான பெண் பிம்பங்களை சீரியல்களிலும், விளம்பரங்களிலும் முன்வைத்துக்கொண்டேயிருப்பது தடுக்கப்படவேண்டும்.

இணையதளங்களில் இன்று 10 செகண்ட் போர்னோ படங்களுக்கு இருக்கும் வரவேற்பும், அதற்கான காணொளிகள் எப்படியெப்படியெல்லாம் தயாரிக்கப் படுகின்றன என்பதும் அதிர்ச்சியூட்டுகிறது. இந்தவிதமாய் பணம் ஈட்டுவதற்காகவே அப்பாவிச் சிறுமிகள், அநாதரவான பெண்களை – பரிச்சயமானவர்கள், உறவுக் காரர்கள் என பலதரப்பினரும் ஏமாற்றுவதும், அச்சுறுத்துவதும் நடக்கிறது என்பதை செய்தித்தாள்களில் நாளும் வரும் இத்தகைய தகவல்கள் புலப்படுத்துகின்றன. முன்பெல்லாம் காதலித்து ஏமாற்றுவது என்றால் கல்யாணம் செய்துகொள்ளாமல் போய்விடுவது என்பதாக மட்டுமே இருந்தது. இப்பொழுது காதல் என்ற பெயரில் வேறு என்னவெல்லாமோ நடக்கிறது. இது குறித்த sensitization வளரிளம்பருவத்தினருக்குக் கிடைக்க பள்ளி, கல்லூரி, சமூகவெளிகளில் வழிவகை செய்யப்படுகிறதா என்று தெரியவில்லை.

Continue Reading →