தமிழ் கவிதை இலக்கியம் காலந்தோறும் புதுப்புதுப் மாற்றங்களைப் பெற்று வருகின்றது. ஹைக்கூ கவிதை வடிவத்திலிருந்து பிரிந்து சப்பானில் மாபெரும் கவிதைவடிவமாகச் சென்ரியு கவிதைகள் வளர்ச்சி நிலை அடைந்துள்ளன. இக்கவிதை வடிவமானது, தமிழில் புதிய கவிதை வடிவமாக தோற்றம் பெற்று தொடக்ககால வளர்ச்சி நிலையினை அடைந்துள்ளது. ஆகையால், எந்த ஒரு இலக்கியத்தை எடுத்துக்கொண்டாலும் அதற்கான தோற்றம், வரலாறு மற்றும் அறிமுகம் இன்றியமையாதது. ஆகையால், தமிழில் சென்ரியு கவிதைகளின் தோற்றம் வளர்ச்சி குறித்து சென்ரியு சொற்பொருள் விளக்கம், சென்ரியு கவிதையின் தோற்றம், காரை சென்ரியு வரலாறு, சென்ரியு வரையறை, ஹைக்கூ சென்ரியு வேறுபாடு, சென்ரியு கவிதையின் வளர்ச்சி நிலை ஆகிய தலைப்புகளின் வாயிலாகக் காணலாம்.
சென்ரியு சொற்பொருள் விளக்கம்
சென்ரியு கவிதை ஜப்பானிய இலக்கிய வடிவமாகும். மானுடம் சார்ந்த சமூகம், பொருளாதாரம், அரசியல், மனித நடத்தை என உண்மை நிகழ்வை நகை உணர்வு தோன்ற வெளிப்படுத்துவது சென்ரியு கவிதையாகும். சென்ரியு என்னும் பெயர் காரை ஹச்சிமோன் என்னும் கவிஞரின் புனைப்பெயராகும். இவர் கி.பி 18ம் நூற்றாண்டில் இக்கவிதை இலக்கியத்தை அறிமுகம் செய்தார். பின்னர், கவிஞரின் புனைப்பெயரே இக்கவிதை வகைகளுக்குப் பெயராயிற்று. சென்ரியு என்னும் சொல்லானது சப்பானிய மொழியில் ஆற்றோரத்து வில்லோ மரம் என்று பொருள் தரும்.
சென்ரியு பெயர்க்காரணம்
மாக்கூ சுகே என்னும் முன்ஒட்டு கவிதைக்கு எழுதப்படும் தொடர் கவிதைகளை தேர்ந்தெடுப்பதில் திறம் பெற்றவராக காரை சென்ரியு விளங்கினார். ஆகையால், காரை சென்ரியு பெயரில் உள்ள சென்ரியு என்னும் சொல்லே இக்கவிதைகளுக்குப் பெயராக வழங்கப்படுகின்றது. இதனையே வில்லியம் ஜெ.ஹிக்கிசன் என்பவர் தனது ஹைக்கூ பருவங்கள் என்ற நூலில் சென்ரியு பெயர்காரணத்தைப் பற்றி பின்வறுமாறு கூறுகிறார். ‘சென்ரியு என்பது ஒருவருடைய இயற்பெயர் என்றும் அப்பெயரே இவ்வகை கவிதைக்கு பெயராயிற்று ’1 என்று கூறுகிறார்.