அண்மையில் நியூசீலாந்தில் இரு மசூதிகளில் தொழுகைகளில் ஈடுபட்டிருந்த அப்பாவிப் பொதுமக்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொன்றதுடன், அதனை இணையத்தில் நேரடி ஒளிபரப்பும் செய்திருக்கின்றான் நிறவெறி பிடித்த ஆஸ்திரேலிய வெறியனொருவன். எல்லா மதங்களிலும், மொழிகளிலும், இனங்களிலும் வெறியர்களிருக்கின்றார்கள். அதற்காக அவ்வெறியர்களின் இன, மத மற்றும் மொழி மக்களை ஒட்டுமொத்தமாகக் குற்றஞ்சாட்டுவதா? அதுதான் முஸ்லிம் மக்கள் விடயத்தில் நடந்துள்ளது. இவ்விதமான தொடுக்கப்படும் வன்முறைகள் கண்டு அஞ்சி விடாமல், தலை நிமிர்ந்து தம் நம்பிக்கைகளின் வழி பெருமையுடன் தொடர்ந்து பயணிப்பதே இவ்வெறியர்களுக்குக் கொடுக்கப்படும் தகுந்த பதிலடியாகும்.
இன்றைய தாக்குதல்களில் பலியாகிய மற்றும் காயமடைந்த முஸ்லிம் மக்கள அனைவருக்கும் எமது அஞ்சலி! அவர்களையிழந்து வாடும் உற்றார், உறவினர்கள் & நண்பர்கள் அனைவருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்.
முகநூலும், எழுத்தாளர்களும்!
பொதுவாக தமிழ் இலக்கிய உலகிலுள்ள வளர்ந்த, இளம் எழுத்தாளர்களின் நிலை அல்லது செயற்பாடுகள் ஒருவரையொருவர் அங்கீகரிப்பதும், தூக்கி விடுவதுமாகவிருக்கும். இதனை நாம் ‘முதுகு சொறிதல்’ என்போம் . 🙂 இவ்விதமான அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்கள் என்பவர்கள் பலருடன் உரையாடுகையில் அல்லது இவர்களது நேர்காணல்களில் முகநூல் பற்றிய பதிலொன்று பெரும்பாலும் ஒரே கருத்துள்ளதாக அமைந்திருப்பதைக் காண்கின்றேன். அவர்கள் கூறுவார்கள்: ‘முகநூலா நான் அப்பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை. அது வெட்டிப்பேச்சு பேசுபவர்களின் இடம். அங்கு இலக்கியம் படைக்க முடியாது.’
இவர்கள் ஏன் முகநூலைக் கண்டு பயப்படுகின்றார்கள்? அடிப்படைக்காரணம்: அச்சூடகங்களில் இவர்கள் எழுதும் எதற்கும் இவர்களுக்கெதிரான எதிர்வினைகள் உடனடியாக வெளியாவதில்லை. வெளிவருகையிலும் எல்லாம் வெளியாவதில்லை. தணிக்கைக்குள்ளாகியே வெளியாவதுண்டு. எனவே இவர்களது கூற்றுகளுக்கு, நிலைப்பாடுகளுக்கு எதிரான எதிர்வினைகள் அதிகம் வெளிவராத நிலையில் இவர்களது இடம் தக்க வைத்துக்கொள்ளப்படுகின்றது. ஆனால் முகநூலில் இதற்கான சாத்தியங்களில்லை. இவர்களது படைப்புகளுக்கு, அல்லது கூற்றுகளுக்கான எதிர்வினைகள் உடனடியாகவே பதியப்படுகின்றன. ஆதரவான, எதிரான எதிர்வினைகள் அனைத்துமே உடனடியாகவே முகநூலில் புரியப்படுகின்றன. ஒருவேளை அவற்றின் காரம் காரணமாக அப்படியானவர்களைத் தடை செய்தாலும், அவ்விதம் எதிர்வினை புரிபவர்கள் தம் எதிர்வினைகளைத் தம் பக்கத்தில் தொடர்வார்கள். ஆக ஒருபோதுமே உடனடியாக எழும் எதிர்வினைகளைத் தடுப்பதென்பது சாத்தியமிலை. இதனால்தான் இதுவரை அச்சூடகங்களில் முடி சூடா மன்னர்களாகக் கோலோச்சிக்கொண்டிருந்தவர்களுக்குத் தம் ஆட்சியினை ஆட்டங்காண வைத்து விடுகின்றது முகநூல் என்பதால்தான் முகநூல் பக்கமே வர நடுங்குகின்றார்கள். இலக்கிய உலகில் ஆஸ்தானப் படைப்பாளிகளாகத் தொடர்வதற்கு, எவ்விதக் கேள்விகளுமற்றுத் தொடர்வதற்கு முகநூல் தடையாக இருக்கின்றது என்பதால்தான் இவர்களுக்கு முகநூல் வேப்பங்காயாகக் கசக்கின்றது. ஒன்றைக் கவனிக்கவேண்டும்.