மானுடத்தை அடிப்படையாக கொண்டு படைக்கப்படுவது சென்ரியு. ஹைக்கூவிலிருந்து தோற்றம் பெற்ற புதிய இலக்கிய வகையான சென்ரியு, ஹைக்கூவின் இயற்கை, ஜென்தத்துவம், உயர்ந்த நடை, குறிக்கோள் போன்ற கட்டுப்பாடுகளை துறந்து சுதந்திரமாக செயல்படும் போக்கினைக் கொண்டிருக்கின்றது. ஹைக்கூவும் சென்ரியுவும் மூன்றடிகளை உடைய கவிதைகளாக இருப்பினும் கருத்தளவில் இரண்டும் வெவ்வேறானவை. மானுடத்தினை நடைமுறையில் மனிதன் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டு வெளிப்படையாகப் படைக்கப்படுகின்ற சென்ரியுவின் இத்தகையத் தன்மையே பிற கவிதை இலக்கியங்களிலிருந்து சென்ரியு கவிதை வேறுபடக் காரணமாகின்றது. சென்ரியுவின் உள்ளடக்கங்களாக உண்மையை உரைத்தல், அங்கதம், நகைச்சுவை, வேடிக்கை, விடுகதை, பொன்மொழி ஆகியவற்றை இக்கட்டுரையின் வாயிலாக விரிவாக காணலாம்.
உண்மையை உரைத்தல்
சென்ரியு கவிதைகள் உண்மையினை வெளிப்படையாக உள்ளபடியே உரைத்திடும் கவிதை இலக்கியமாகும். மானுட நடத்தைகளை பாடுபொருளாகக் கொண்டு உண்மைத்தன்மையுடன் சென்ரியு படைக்கப்படுவதால் கற்பனை, வர்ணனை ஆகியவற்றிற்கு இடம் தராது கூறவந்த செய்தியை வெளிப்படையாக உண்மைத்தன்மையுடன் எடுத்துக்கூறும் தன்மைக் கொண்டது. இதனை,
‘பேச்சாளரின் பேருரை
கேட்டுக்கொண்டே இருக்கலாம்
நல்ல உறக்கம் வரும் வரை ‘1
என்னும் கவிதை வரிகள் அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. இன்றைய காலக்கட்டத்தில் பேச்சாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நற்சிந்தனைகளுடன் மக்களை மகிழ்விக்கும் வகையில் பேசுவதில்லை என்பதனை இக்கவிதை வரிகள் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.