– பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் —
– பேராசிரியர் எச்.முஜீப் ரஹ்மான் உலக இலக்கியம், இலக்கிய கோட்பாடுகள், அறிவியற் கோட்பாடுகள், கலை, இலக்கிய ஆளுமைகள் என ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடான கட்டுரைகளை மற்றும் கவிதைகளை எழுதிவருபவர். நட்சத்திரவாசி என்னும் புனைபெயரில் இவர் அன்று பதிவுகள் இணைய இதழில் எழுதிய கவிதைகளிவை. இவரது வலைப்பதிவு: நட்சத்ரவாசியின் தளம் (https://natchathravasi.wordpress.com/). –
பதிவுகள் டிசம்பர் 2010 இதழ் 132
கடைசி வேட்டை –
ஆறு கடல்களுக்கு அப்பால் தனியொரு தீவில் தனித்தலைகிறேன்\
பளிங்கு மண்டபத்தில் என் உயிர் கிளியாய் சிறை வைக்கப்பட்டிருக்கிறது
யாரவனோ இப்படியொரு விதி செய்து மாயத்தை புரட்டுகிறான்
மெல்ல தென்றல் வீசுகையில் நான் நினைவுகளில் என்னை காண்கிறேன்
எனது தேசத்தில் எனக்கிருந்த வீடும்,ஊரும் இல்லாமல் போயிற்று
என்னை ஆண்ட காதலியவளின் முகமும் கூட
ஒரு மின்னல் வெட்டென வந்து போகிறது அவ்வப்போது நினைவுகள்
எனது குழந்தைகளிடன் நான் கொண்ட பாசம் கண்ணீராய்
வானத்தில் ஊர்ந்து போகிறது வெண்ணிற மேகக் கூட்டமாய்
அது எங்கோ மழையாய் பெய்யக் கூடும் என் சோகம் சொல்லி
எனினும் வறண்ட பாலையில் தூசிக்காற்றாய் சுழலும்
உயிரின் பொடிதுகள்கள் உயிராக வேண்டி தியானிக்கின்றன
அவனோ ஏழு வானங்களுக்கு மேல் இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுக்கிறான்
அவனுக்கு தெரியாததல்ல தனிமையும்,உவர்ப்பும்
மந்திரத்தால் அவனை வசியம் செய்து எனதுயிரை என்னிடம்
சேர்க்கும் வல்லமையுடையவன் யாரோ எப்போது வர கூடுமோ
எனினும் நான் காத்திருக்கிறேன்
எனது ஊரின் ரம்மியமான பொழுதுகளை குடித்து
காதல் போதையை கிரகித்து ஊன் அழிய சிதிலமாய்
போகுமிந்த உயிர்கூட்டில் கடைசி வேட்டை எப்போதோ சொல்லிவிடு
அதற்கு முன்னால் எனக்கொரு சேதியனுப்பவேண்டும்.