ரத்தக்காட்டேரிகளின் வரலாற்றுச்சுருக்கம்

- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -

ரத்தக்காட்டேரிகள் பசியோடு உலவிக்கொண்டிருக்கும்.
நிலவும் அமைதியை அவற்றால் அங்கீகரிக்க
முடியாது.
அவற்றைப் பொறுத்தவரை
வெறுப்பும் விரோதமுமே வாழ்வியல்பு.

தலைகள் அறுபட்டு விழுந்தால்தான் அவற்றைப்
பொறுக்கியெடுத்து சூனி்யக்காரர்களின் வசியத்திறத்தோடு
அவற்றை ஆட்டியாட்டிக் காட்டி
அக்கம்
பக்கத்திலிருப்பவரை அச்சத்திலாழ்த்தி
தினமுமான குறையாத தீனிக்கு
வழிசெய்துகொள்ள முடியும்.

ரத்தக்காட்டேரிகள் நாவறள உலவிக்கொண்டிருக்கும்.
நிலவும் அமைதியை ஏற்றுக்கொள்ள முடியாமல்.
அது பயத்தால் விளைந்தது என்று
நாளும் சொல்லிச்சொல்லி உருவேற்றப்பார்க்கும்.

Continue Reading →

சிறுகதை: குறி

 - சுப்ரபாரதிமணியன் -குப்பென்று வீசிய முகப்பவுடர் வாசம் தன் பக்கத்தில்  அதே இருக்கையின் ஒரு  பகுதியில் உட்கார்ந்திருப்பவளிடமிருந்து  ஊடாடியதை உணர்ந்தான் அவன்..காலி இருக்கையில் யாரோ பெண் உட்கார்கிறார் என்பது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. யார் என்று கூர்ந்து பார்ப்பது நாகரீகமாக இருக்காது என்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பி வெளிக்காட்சியைப் பார்த்தான், குமரன் நினைவு மண்டபத்தைக் கடந்து  பேருந்து அண்ணாவையும் பெரியாரையும் ஒருங்கே காட்டியபடி நகர்ந்தது. அதீத பவுடர் வாசமும் இன்னொரு உடம்பு வெகு அருகிலிருப்பதும் உடம்பைக்கிளர்ச்சி கொள்ளச்செய்தது அவனுக்கு.

பாலம் ஏறும் போது பேருந்துத் திரும்பியதில் அவளின் உடம்பு அவனுடன் நெருங்கி வந்த போது கிளர்ச்சியாக இருந்தது. அந்த முகத்தைக் கூர்ந்து கவனித்தான் .  முகச்சவரம் செய்யப்பட்டு பவுடர் இடும்போது தன் முகம் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது. இன்னும் கூர்ந்து கவனிப்பதை அவளும் பார்த்தாள்.

அது திருநங்கையாக இருந்தது. அவன் உடம்பின் கிளர்ச்சி சற்றே அடங்குவதாக இருந்தது.   ஆனால் அந்த உடம்பின் நெருக்கமும் உடம்பு வாசனையும் அவனுக்குப் பிடித்திருந்தது. நெருக்கமாக்கிக் கொண்டான்.

நெருப்பரிச்சல் பகுதியில்  திருநங்கைகள் அதிகம் இருப்பதைக் கவனித்திருக்கிறான். பிச்சையெடுக்கிற போது அவர்களின் அதட்டல் மிகையாக இருந்திருக்கிறது, பிச்சை கிடைக்காத போது உடம்ப்பின் பாகங்களைக் காட்டியும் உடலை பகிரங்கப்படுத்தியும் செய்யும் சேஷ்டைகளோ பிரதிபலிப்புகளோ அவனை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.பிச்சை கேட்டு கொடுக்காத ஒருவனைத் தொடர் வண்டிப்பெட்டியிலிருந்து  தள்ளிக் கொன்ற சம்பவம் சமீபத்தில் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

பெரிய கட்டிடங்கள் மின்விளக்குகளை பொருத்திக்கொண்டு தங்களை அழகாக்கிக் கொண்டிருந்தன. பேருந்தின் வேக இயக்கத்தில்  அவள் வெகு நெருக்கமாக தன் உடம்பைப் பொருத்திக் கொள்வது தெரிந்த்து.. அவனுக்கும் இசைவாக இருப்பது போல் இருந்தான்.பயணம் ரொம்பதூரம் தொடர வேண்டும் என நினைத்தான்.

Continue Reading →

வெளிநாட்டுக் கலாச்சாரங்களில் வாஸந்தியின் நாவல்கள்

கட்டுரை: வெளிநாட்டுக் கலாச்சாரங்களில் வாஸந்தியின் நாவல்கள்“சென்றிடுவீர் எட்டு திக்கும்
கல்விச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர் “

என்பதற்கேற்ப இன்றைய நாளில் நம் நாட்டு மக்கள் பல நாடுகளுக்கும் தங்கள் கல்வி அறிவைக் கொண்டு செல்கிறார்கள்.பல நாடுகளுக்குப் படிக்கவும் செல்கிறார்கள்.சிலர் குடியுரிமை பெற்று அங்கேகே தங்கிவிடுகிறார்கள். சிலர் திரும்பி வருகிறார்கள். இப்படி வெளிநாடுகளுக்குச் செல்வதும் வருவதும் இன்றைய நாளில் சுலபமாகி விட்டது.அதனால் வெளிநாட்டுக் கலாச்சாரங்கள் நம் நாட்டுக் கலாச்சாரங்களுக்குள் நுழைந்து பல நவீனத் தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பது கண்கூடு. வெளிநாட்டுக் கலாச்சாரத்தால் பல மாற்றங்களை அடைந்திருந்தாலும் பண்பாடு என்ற ஒன்றால் நம்முடைய அடையாளங்கள் நமதாகக் காக்கப் படுகின்றன.அதனைச் சொல்வதில் நாவல்கள் முக்கிய இடம்பெறுகின்றன.

மனிதனின் அறிவு வளர வளர சிந்தனைகளும் தேடல்களும் அதிகமாகி அவனுடைய மனத்தை விரியச் செய்கின்றன. குறுகிய வட்டத்திற்குள் சுழன்று கொண்டிராமல் அடுத்தடுத்துச் சென்று பல்வேறு பரிமாணங்களை அடைந்து முழுமனிதனாக வேண்டும் என்பது நம் மண்னின் மகிமையாக சுடர்விடுகிறது. எங்கு சென்றாலும் நம் மண்ணின் வேர் அங்கும் பிடித்து நின்று நம்மை வேறுபடுத்திக் காட்டுகின்றன. அதற்கு வாஸந்தியின் நாவல்கள் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளன.

பத்திரிக்கையாசிரியரும் எழுத்தாளருமான வாஸந்தி பல ஊர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லும் வாய்ப்புக் கிடைத்ததால் அதனால் கிடைத்த அனுபவங்களைத் தமது நாவல்களில் பகிர்ந்துள்ளார்.வெளிநாட்டுக் கலாச்சாரங்களைச் சொல்வதில் தனக்கென்று தனியிடத்தைப் பெற்றுள்ளார். பல நாவல்கள் அதற்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன. அவற்றில் ‘சந்தியா’; ‘காதல் என்னும் வானவில்’ ஆகியவற்றை சிறந்த எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

Continue Reading →

வாழ்வை எழுதுதல் அங்கம் – 04: வழிகாட்டி மரங்கள் போன்று நகராமலிருக்கும் வாழ்க்கையில்தான் எத்தனை அவலங்கள் ? எழுச்சியும் வீழ்ச்சியும் புத்துயிர்ப்பும் சொல்லும் கதைகள் !!

முருகபூபதிநீண்ட காலத்திற்குப்பின்னர் அவன் என்னைப்பார்க்க வந்தான்.  அவனை     “ அவர்  “ என்று அழைக்காமல் மரியாதைக் குறைவாக   “அவன்  “ என்று அழைப்பதாக வருந்தவேண்டாம். அவன் பிறப்பதற்கு முன்னர் – நூறாண்டுகளுக்கு முன்பு நான் பிறந்தமையால், அவ்வாறு அழைக்கின்றேன்.

பல முன்னோர்களையும்  “ அவன்  “ என்றுதானே விளிக்கிறார்கள். ஏன்… சில சந்தர்ப்பங்களில் எம்மைப்படைத்த ஆண்டவனைக்கூட “ அவன்  படைத்தான்  “ எனத்தானே சொல்கிறார்கள்.

நான், அவன் அப்பன் பிறப்பதற்கு முன்பே பிறந்திருக்கின்றேன். என்னைப்படைத்தவர்களினால்   என்னிடம் வந்து செல்பவர்களுக்காக  உருவாக்கப்பட்ட  குழந்தைகள் வந்து திரும்பிய  அக்காலத்தில், அவன் பாட்டன் பிறந்த ஊர்க்காரர்கள் கல்லெறிந்து  என்னைக் களைக்கப்பார்த்தார்கள்.

அவனது பாட்டி அந்தக்கதைளை அவனிடம் அவனது சிறுவயதில் சொல்லியிருக்கிறாள். நீண்ட காலத்திற்குப்பின்னர் என்னை அன்று பார்க்க வந்திருந்த அவன், எனது மேனியை தொட்டுப்பார்த்து பரவசமடைந்தான்.

அவனுக்கு அந்தநாள் நினைவுகள் வந்திருக்கவேண்டும். அவனை  அன்று அழைத்துவந்தவர்கள், என்னிடத்தில் விட்டுச்சென்றுவிட்டார்கள். அவன் என்னிடமிருந்து விடைபெற்றுச்செல்வதற்கு இன்னும் பல நிமிடங்கள் இருந்தன. அதனால்,  என்னருகில் வந்து எனது அங்க இலட்சணங்களை ரசித்தான். இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் கதைகள் இருக்கின்றன. அதுபோன்று எனக்கும் ஒரு கதை நீண்ட வரலாறாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 1902 ஆம்  ஆண்டில் பிறந்த எனக்குள்ளும் ஆயிரக்கணக்கான கதைகள் இருக்கின்றன.  நான் பல தடவைகள் செத்துப்பிழைத்திருக்கின்றேன். அன்று என்னைப்பார்க்க வந்திருந்த அவன் அறிந்துவைத்திருக்கும் ஒருவரின் மகனும் எழுத்தாளன்தான். கவிதையும் எழுதியிருக்கின்றான். அவனுக்கு அன்று என்னைப்பார்த்ததும் அந்த அன்பரின் மகன் எழுதிய கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.

Continue Reading →