நாமலின் அரசியல் முதிர்ச்சியும், கோ.ரா.வின் அரசியல்முதிர்ச்சியின்மையும்.

நாமல் ராஜபக்சஜனாதிபத்தேர்தல் முடிந்த கையோடு மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்சவின் கருத்துகளை உள்ளடக்கிய பதிவொன்றினை இணையத்தில் வாசித்தேன். அதிலவர் கூட்டமைப்பின் பேச்சையும் மீறித் தம் கட்சிக்கு வாக்களித்த தமிழ் மக்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாகவிருந்தது. அரசியல் முதிர்ச்சியுள்ள தலைவர் ஒருவரே இவ்விதம் கூறக்கூடும். சென்ற தடவையை விட இம்முறை தம் கட்சிக்கு வாக்குகள் குறைந்திருப்பினும், அதனை நோக்காது, கிடைத்த வாக்குகளை மையமாக வைத்து ஆரோக்கியமாக அணுகிய நாமலின் ஆளுமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் அடுத்து அநுராதபுரத்தில் பதவியேற்ற கோத்தபாயா ராஜபக்சவோ , பதவியேற்பு வைபவத்தில் தான் சிங்கள பெளத்த வாக்குகள் மூலம் மட்டுமே வெற்றிவாகை சூடியதாகக் கூறியதாக இணையச் செய்திகள் தெரிவித்தன. தமிழ் மக்களும் தம்முடன் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் கூடவே கூறியிருந்தார். கோ.ரா.வின் அரசியல் முதிர்ச்சியின்மைக்கு இக்கூற்றுகள் எடுத்துக்காட்டுகளாகும்.

தமது பதவியேற்பு வைபவத்தில் கோ.ரா செய்த முக்கியமான தவறுகளாக நான் கருதுவது:

1. அநுராதபுரத்திலிருந்து அரசாண்ட தமிழ் மன்னனான எல்லாளனைப்போரில் கொன்ற துட்டகாமினி கட்டிய தூபியான ரூவன் வெலிசாயவில் தனது பதவியேற்பு வைபவத்தை நடத்தியது. இதன் மூலம் அவர் கூற விழைவதுதானென்ன? நவீன துட்டகாமினி தானென்று கூறுகின்றாரா? நவீன எல்லாளனான வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போரில் கொன்று வெற்றிவாகை சூடியதைக் குறிக்குமொரு குறியீடா மகாதூபி ரூவன்வெலிசாய. கோ.ரா.வும் அவர் கீழிருந்த இராணுவத்தளபதிகள் பலரும் யுத்தத்தில் யுத்தக்குற்றங்கள் பலவற்றைப் புரிந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சமயத்தில் தமிழ் மக்களை எள்ளி நகையாடும் நோக்கில் இவ்வைபவத்துக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டதா?

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 355: புதுமைலோலனின் ‘தடுப்புக் காவலில் நாம்’

எழுத்தாளர் புதுமைலோலன் அவர்களைச் சில தடவைகள் யாழ் பிரதான சந்தைக்கண்மையிலுள்ள அவரது புத்தகக்கடையான ‘அன்பு புத்தகசாலை’யில் சந்தித்திருக்கின்றேன். ஆனால் அப்பொழுது நான் பதின்ம வயதை நெருங்கிக் கொண்டிருந்த சிறுவன. மாணவன். எழத்தில் ஆர்வம் மிகுந்து குழந்தைகளுக்கான சஞ்சிகைள், பத்திரிகைகளில் வெளியாகும் சிறுவர் பகுதிகளுக்கு ஆக்கங்களை அனுப்பத் தொடங்கியிருந்தேன். புதுமைலோலன் அவர்கள் எழுத்தாளர் செங்கை ஆழியானின் அண்ணன் என்று அக்கடையில் பணிபுரிந்த இளைஞர் (பெயர் மறந்துவிட்டது) கூறியிருந்தார். அவ்விளைஞரே எனக்கு அக்காலகட்டத்தில் தன்னிடமிருந்த மார்க்சிக் கார்க்கியின் ‘தாய்’ நாவலைத் தந்தவர். எழுத்தாளர் ரகுநாதனின் மொழிபெயர்ப்பில் வெளியான நாவல்.

அண்மையில் ‘நூலகத்’தில் புதுமைலோலன் எழுதிய ‘தடுப்புக் காவலில் நாம்’ என்னும் நூலினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல். 1961இல் யாழ் கச்சேரிக்கு முன்பாகத் தமிழரசுக் கட்சியினர் ‘சத்தியாக்கிரக’மிருந்தனர், பெண்களும் அதில் பங்குபற்றியிருந்தனர். அதனை அன்றிருந்த ஶ்ரீமா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசு படைபலம் கொண்டு அடக்கியது. தமிழ் அரசியல்வாதிகளுட்பட ஏனைய சத்தியாக்கிரகிகள் யாவரும் தாக்குதல்களுள்ளாகிக் கைது செய்யப்பட்டு பனாகொடை இராணுவ முகாமில் அடைக்கப்பட்டனர். அவர்களில் எழுத்தாளர் புதுமைலோலனும் ஒருவர். அவர் 18.4.1961 தொடக்கம் 26.7.1961 வரை பனாகொடை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தனது தடுப்புக் காவலிலிருந்த சமயம் தம்  அனுபவங்களைத் தன் மகள் அன்பரசிக்குக் கடிதங்களாக எழுதினார். அக்கடிதங்கள் ‘சுதந்திரன்’ பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.  அக்கடிதங்களின் தொகுப்பே மேற்படி நூலான் ‘தடுப்புக் காவலில் நாம்’.

Continue Reading →