நூல் அறிமுகம்: ஒரு புது வெளிச்சம்

போருக்குப் பின்பான ‘படகு மனிதர்’ வாழ்வு சொல்லும் ’உயிர்வாசம்.’தாமரைச் செல்விகாலம் செதுக்கிய சிற்பி தாமரைச் செல்வி.  வன்னி மண் கடைந்தெடுத்துத் தந்த காலத்தின் கண்ணாடி. அவர் கடதாசிக்காலத்திலும், கணனிக்காலத்திலும் வன்னியின் வாழ்வைச் செவ்வனே செதுக்கும் கைதேர்ந்த கதைச்சிற்பி என அறியப்படுபவர். வன்னியின் போருக்கு முன் – போர் காலம் – போருக்குப் பின் – என்ற பெரு  மாற்றங்கள் நிகழ்ந்த முக்கிய காலகட்டத்தின் தவிர்க்க முடியாத இலக்கியப் பிரதிநிதி.

வயலும் வாழ்வும்; காடும் களனியும்; உழைப்பும் உறுதியும்;  தன்மானமும் அடங்காத் தன்மையும்; வன்னி மண்ணின் தனித்துவமான அழகு. அது யுத்தத்திற்கு முன்பும்; யுத்த காலத்தின் போதும்; யுத்தத்தின் பின்பும்; எவ்வாறாகத் தன்னை அடையாளப்படுத்தியதோடு தக்கவைத்தும் கொண்டிருந்தது; இருக்கிறது என்பதை இவரது படைப்புகளை மாத்திரம் பார்க்கும் ஒருவர், நேர்த்தியாகவும் தொடர்ச்சியாகவும் சலிக்காத வகையிலும் கலைத்துவத்தோடு உணர்ந்து கொள்ளலாம்.

அவை கதைப்புலங்களைக் கொண்டிருந்தாலும் ஆவணத்தன்மை கொண்ட வரலாற்றுத் தார்ப்பரியங்களை உள்ளே கொண்டுள்ளவை. அதன் வழியே தாமரைச்செல்வி ஒரு ’காலச் சிற்பி.’ காலத்தை மொழியால் செதுக்கியவர். அவைகளை வாசிப்பது என்பது இருந்த இடத்தில் இருந்த படி காலங்களைக் கடக்கும் ஒரு பயண அனுபவம்.

அதன் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் இன்று வெளிச்சத்திற்கு வருகிறது போருக்குப் பின்பான ‘படகு மனிதர்’ வாழ்வு சொல்லும் ’உயிர்வாசம்.’

இந் நாவல், ஊர்வாழ்வில் இருந்து தப்புதலும் மண்ணை இழத்தலின் வலிகளும், படகுப்பயண அனுபவங்களும் பயங்கரங்களும், புதியநாட்டின் வரவேற்புகளும் இங்குள்ள நிலைகளும் எனப் பயணித்தலின் வழி அகதி மாந்தர்களின் ஒரு புதிய வாழ்வியல் நெருக்கடிகளை பதிவு செய்கிறது. அவர்கள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தோடு கப்பல் ஏறிய சமான்யர். அந்த அபாயகரமான கடல் பயணத்தில் மாண்டு போனவர்கள் போக, உயிர் தப்பியவர்கள் வந்துவிட்டோம் என்று மூச்சுவாங்க முடியாமல் ‘எண்ணைக்குத் தப்பி நெருப்புக்குள் விழுந்த கதையாக’ ஆகிப்போன நிலையினை சொல்லுமிடங்கள் மிகுந்த வலி மிக்கவை; தமிழுக்குப் புதிதானவை; மேலும், ஏனைய தமிழர்கள் அனுபவிக்காதவையும் கூட.  இவர்களின் அனுபவங்கள் ஈழ/ புகலிட தமிழ் இலக்கியத்திற்குக்  கிட்டிய  புது வரவு; புது வெளிச்சம்; புதுப் பார்வை என்று துணிந்து கூறலாம்.

Continue Reading →