மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு!

முருகபூபதி(  வெட்ட வெட்ட தழைக்கும் வாழை மரம்  போன்று காலத்துக்குக் காலம் சோதனைகள் – வேதனைகளைச்  சந்தித்தாலும்  மீண்டும் மீண்டும் புத்துயிர்ப்புடன் மலர்ந்துகொண்டிருப்பதுதான் யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகை.   இலங்கையில் அதிபர் தேர்தல் அமளிகளுக்கு மத்தியில்  யாழ்.  ஈழநாடு பிரைவேட்  லிமிட்டட்  நிறுவன இயக்குநரும் டான் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவருமான மூத்த ஊடகவியலாளர் எஸ். எஸ். குகநாதன்,  இந்த வாரம் யாழ். ஈழநாடு வார இதழை  யாழ்ப்பாணத்தில்  வெளியிட்டுள்ளார். லண்டன் நாழிகை இதழ் ஆசிரியர் மாலி மகாலிங்கசிவம், அதிபர் தேர்தல் வேட்பாளர் சிவாஜிலிங்கம், ஈழநாடு ஸ்தாபக இயக்குநர் டொக்டர் சண்முகரட்ணத்தின் புதல்வர் எஸ். ரட்ணராஜன் ஆகியோருட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். முருகபூபதி எழுதி,  அண்மையில் வெளியான இலங்கையில் பாரதி என்னும் ஆய்வு நூலில், முன்னைய ஈழநாடு குறித்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரை இங்கு பதிவாகின்றது. )

”  கே.சி.தங்கராஜா, கே.சி.சண்முகரத்தினம்  ஆகிய  இரு சகோதரர்களின்  உள்ளத்தில் முகிழ்த்த பிராந்தியப் பத்திரிகை ஒன்றின் உருவாக்கத்துக்கான சிந்தனை 1958 இல் யாழ்ப்பாணத்தில், கலாநிலையம் என்ற பதிப்பகமாக வித்தூன்றப்பட்டு, 1959 பெப்ரவரியில் முளைவிட்டு வாரம் இருமுறையாக “ஈழநாடு” என்ற பெயரில்  வெளிவரத்  தொடங்கி,  நாளும் பொழுதும்  உரம்பெற்று வளர்ந்து,  ஈற்றில் 1961இல் முதலாவது பிராந்தியத் தமிழ்த் தினசரியாக  சிலிர்த்து  நிமிர்ந்தது. அன்று தொட்டு இறுதியில் யாழ் மண்ணில்  தன் மூச்சை நிறுத்திக்கொள்ளும் வரை அதன் இயங்கலுக்கான போராட்டம்  ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றுடன்  பின்னிப் பிணைந்ததாகவே  நகர்ந்துவந்துள்ளது. ஜுன் 1981இல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தையும், பூபாலசிங்கம் புத்தகசாலையையும் கொழுத்திய பேரினவாதத்தின் கண்களுக்கு ஈழநாடு காரியாலயமும்  தப்பிவிடவில்லை. அதன் பின்னர் ஈழப் போராளிகளின் குண்டுத் தாக்குதலுக்கும் இலக்காகி, 1988 பெப்ரவரியில்  தன்னைக் காயப்படுத்திக் கொண்டது. பின்னர் தொடர்ச்சியான பத்திரிகைச் செய்தித் தணிக்கைகள், அச்சுறுத்தல்கள், பொருளாதார நெருக்கடிகள் என்று சுற்றிச் சூழ்ந்த நிலையில்  தொண்ணூறுகளின்  ஆரம்பத்தில்  தன்  இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.” இவ்வாறு யாழ்ப்பாணத்தில் ஈழகேசரியின் மறைவிற்குப்பின்னர் உதயமாகிய ஈழநாடு பத்திரிகையின் தோற்றத்தையும் அஸ்தமனத்தையும் லண்டனில்  வதியும் நூலகர் நடராஜா செல்வராஜா ” ஈழநாடு என்றதோர் ஆலமரம்” என்னும் கட்டுரையில் உணர்வுபூர்வமாகவும்  அறிவார்ந்த  தளத்திலும்  பதிவுசெய்துள்ளார்.

Continue Reading →

முகநூல்: பாரதி கவிதைச் சமர் !

- ஜவாத் மரைக்கார் -– முகநூல் எனக்கு வழங்கிய நண்பர்களில் இவரும் ஒருவர். இவர் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்துவரும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர்தான் மதிப்புக்குரிய ஜவாத் மரைக்கார். இவரது முகநூற் பதிவுகள் இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிய அரிய தகவல்களை உள்ளடக்கியவை. அண்மைக்காலமாக இவர் பதிவு செய்துவரும் கவிதைச் சமர் பதிவுகள்  அவ்வகையானவை. ஐம்பதுகளில் பேராசிரியர் கைலாசபதி ஆசிரியராகவிருந்த காலகட்டத்தில் கவிஞர்கள் சில்லையூர் செல்வராசன், முருகையன் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற கவிதைச் சமர் இது. அச்சமர் பற்றிய பதிவுகள் அவை. வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட வேண்டிய பதிவுகள் இவை. – பதிவுகள் –


பாரதி கவிதைச் சமர் – 1

1950 களின் இறுதிப் பகுதி . தினகரனின் பிரதம ஆசிரியராக கலாநிதி க .கைலாசபதி கடமையாற்றிக் கொண்டிருந்த காலம். பாரதியார் நினைவு நாளையொட்டி , ஞாயிறு தினகரனில் ஒரு கவிதை வெளிவந்தது. கவிதையின் தலைப்பு ” சூட்டி வைத்த நாமங்கள் சொல்லுந் தரமாமோ? “. கவிதையை எழுதியிருந்தவர் , ‘தான்தோன்றிக் கவிராயர்’.

பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராசன் அங்கதக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதும் தான்தோன்றிக் கவிராயர் என்ற புனைபெயரிலேயே அவர் தனது கவிதைகளை எழுதுவது வழக்கம் என்பதும் இலங்கை இலக்கிய உலகில் பிரசித்தம்.

மேற்குறிப்பிட்ட கவிதையைப் பிரசுரித்ததோடு கைலாசபதி நின்றுவிடவில்லை . முருகையன், மஹாகவி போன்ற பிரபல கவிஞர் பலருடன் தொடர்பு கொண்டு ஒரு கவிதா மோதலையே ஏற்படுத்தினார். இம்மோதலில் பிரசவமான கவிதைகள் “பாரதி கவிதைச் சமர்” என்ற பெயரில் தொடர்ச்சியாக வெளிவந்தன. இச்சமரில் முதலாவது மறுப்பு , ” நீர் கண்ட தோற்றம் நிசமல்ல , தான்தோன்றீ ! ” என்ற தலைப்பில் கவிஞர் இ .முருகையனால் எழுதப்பட்டது. அதற்கு தான்தோன்றிக் கவிராயர், “ஏலே முருகையா ! ஏன் உமக்கு இந்தலுவல் ? ” என்று பதில் கவிதை எழுத நீலாவணன் , மஹாகவி , மு.பொ ., ராஜபாரதி போன்ற பல கவிஞர்கள் உள்ளே நுழைந்து தமக்குள்ளேயே மோதிக்கொள்ள …..கடைசியில் முருகையனும் தான்தோன்றிக் கவிராயரும் ஓரணியில் நின்று ஏனையவர்களைச் சாட…… கவிதைப் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

இக்கவிதைச் சமரைச் சுவைத்திராதவர்களுக்காகவும் சுவைத்து மறந்தவர்களுக்காகவும் எனது அடுத்த பதிவிலிருந்து தொடர்ச்சியாக அவற்றைத் தர எண்ணுகின்றேன்.


Continue Reading →