எழுத்தாளர் எஸ்.பொ.வின் நினைவு தினம் நவம்பர் 26. அவர் நினைவாக..
ஈழத்தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க ஆளுமை எஸ். பொன்னுத்துரை ஆவார். தமிழிலக்கியத்ததின் அனைத்துத் துறைகளையும் இவர் தொட்டவர். நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளைப் படைத்துள்ளார். இவரது படைப்புகள் தமிழுலகில் பேசப்படும் ஆகச் சிறந்த இலக்கியங்களாகும். இவை காலங்கடந்தும் நிலைத்து நின்று இமாலய வெற்றி பெறும் என்பதை ஆராய்ந்து இந்நூலில் நிறுவியுள்ளார்.
எஸ்.பொ.அவர்களின் படைப்புகளான சிறுகதை, புதினம், நாடகம்;, கவிதை, உரைநடை, காவியம், வரலாறு மற்றும் மொழிபெயர்ப்புகள் என ஒவ்வொன்றையும் தீவிரமாகப் படித்து, அலசி ஆராய்ந்து, ‘இலக்கியப்போராளி எஸ்.பொ. படைப்பாளுமையும் பன்முகப் பார்வையும்’ என்ற தலைப்பில் நூலாக்கம் செய்தவர் முனைவர் நா.நளினிதேவி. இவரது பல சிறந்த ஆக்கங்களில் இந்நூல் குறிப்பிடத்தக்கது.
2014ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே எஸ்.பொவின் நூல்கள் முழுமையும் நளினிதேவி ஆய்வுக்குட்படுத்தியதை அறிந்த எஸ்.பொ. மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்று, இக்கட்டுரைகளை மித்ர பதிப்பகத்திலேயே நூலாக்கம் செய்யலாம் என்பதை மகிழ்வோடு தெரிவித்தார்.
நளினிதேவி அவர்கள் எஸ்.பொ.வின் ஒவ்வொரு படைப்புகளையும் படித்ததோடு உடனுக்குடன் ஐம்பதுஃஅறுபது பக்கங்களுக்கு மிகாமல் எழுதி ஞானிஅய்யாவிற்கு அனுப்பிவிடுவார். எஸ்.பொ.வின் அனைத்துப் படைப்புகளையும் குறைந்தது அறுநூறு பக்கங்களுக்கு மேல் எழுதியிருந்தார். அக்கட்டுரைகளை ஒளியச்சு செய்வதற்காக வாங்கிச் சென்ற நபர் எந்த தொடர்பும் கொள்ளமுடியாமல் போனதால், கையெழுத்துப் பிரதிகள் எதுவும் கைக்குக் கிட்டவில்லை. மிகுந்த மனவருத்தம் கொண்டார் நளினிதேவி. எஸ்.பொ. ஆசுரேலியா சென்றுவிட்டார். உடல்நலம் குன்றிவிட்டார். எஸ்.பொ.அவர்கள் தன்கட்டுரையைப் பார்த்துவிடவேண்டும் என்று அதி விரைவாகச் செயல்பட்டார் நளினிதேவி.