இக்கட்டுரை சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகளின் புதுப்பிக்கப்பட்ட வடிவமாகும். மார்க்சிய சமூகவிஞ்ஞானம் கண்டறிந்த சமூக முடிவுகள் மனிதகுல வரலாற்றில் முப்பெரும் பிரிவுகளாக அறியப்படுகின்றது.
1. வர்க்கங்கள் தோன்றாத சமூகம்
2. வர்க்கச் சமூகங்கள்
3. எதிர்காலத்தில் அமையவுள்ள வர்க்கமற்ற பொதுவுடைமை சமூகம்
1.வர்க்கங்கள் தோன்றாத சமூகம்
மனித மூதாதையர்கள் வாழ்ந்த வர்க்கங்கள் தோன்றாத சமூகம். அதாவது, தனிச்சொத்துடைமை தோன்றாத சமூகம். இதனை ஆதிப் பொதுவுடைமை சமூகம் அல்லது புராதன பொதுவுடைமைச் சமூகம் என்பர். இக்காலக்கட்டத்தில் மனிதர்களுக்குள் வர்க்கப்பிரிவு தோன்றியிருக்கவில்லை. அதாவது, உழைப்பவர்கள், பிறர் உழைப்பைச் சுரண்டுபவர்கள் என்கின்ற பிரிவு தோன்றியிருக்கவில்லை. தாய் தலைமையில் காடு சார்ந்த பொருட்களைச் சேகரித்து வாழ்ந்தார்கள். வேட்டை, கால்நடை வளர்ப்பு, விவசாயம் ஆகியன கரு வடிவில் தோன்றியிருந்தன. பல லட்சம் ஆண்டுகளாக மனிதர்கள் இத்தகைய வர்க்கமற்ற புராதன பொதுவுடைமை சமூகத்திலேயே வாழ்ந்தார்கள்.