யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்புச் செயற்குழுத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய த.விமலேஸ்வரனை நினைவூட்டிய முகநூல் உரையிது. இதனை முகநூலில் முகநூல் நண்பர் Sam Mer பகிர்ந்திருந்தார். இந்த உரையினை யாழ் பல்கலைக்கழக வணிக பீட மாணவனான மட்டக்களப்பைச் சேர்ந்த அ.விஜிதரன் கடத்தப்பட்டபோது அவரது விடுதலைக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். பாத யாத்திரை மேற்கொண்டார்கள். சாகும் வரையிலான உண்ணாவிரதமிருந்தார்கள். யாழ் நகரிலிருந்து வெளியான பத்திரிகைகளிலெல்லாம் விஜிதரனின் கடத்தலும், அவரது விடுதலைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களும் முக்கிய இடத்தைப்பிடித்தன.
மாணவன் விஜிதரனுக்காக நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் த.விமலேஸ்வரனும் ஒருவர். அப்போராட்டத்தின்போது விமலேஸ்வரன் ஆற்றிய உரையாக இதனை முகநூலில் பதிவு செய்த Sam Mer குறிப்பிட்டிருக்கின்றார். இந்த உரைக்கான ஆதாரத்தையும் குறிப்பிட்டிருந்தால் அது ஆவணச்சிறப்பு மிக்கதாகவிருந்திருக்கும்.
இவ்வுரை விமலேஸ்வரன் என்னும் ஆளுமையினை நன்கு வெளிப்படுத்துகின்றது. இவரை நான் நேரில் அறிந்ததில்லை. ஆனால் பத்திரிகைச் செய்திகள் வாயிலாக, நண்பர்கள் கூற்றுகள் மூலமே அறிந்திருக்கின்றேன். 1963இல் பூநகரியில் பிறந்தவர். ஆரம்பத்தில் காலம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயற்பட்டிருக்கின்றார். தொடர்ந்தும் சமூக, அரசியற் செயற்பாடுகளில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்தி வந்திருக்கின்றார். இவரைப்போன்ற மானுட உரிமைப்போராளிகளை நினைவு கூரவேண்டிய காலகட்டமிது. நினைவு கூர்வோம்.