இன்று வெளியான ‘காலைக்கதிர்’ பத்திரிகைச் செய்தி என் கவனத்தை ஈர்த்தது. .கூடவே துயரினையும் தந்தது. பழம்பெரும் பத்திரிகையாளர் ‘பெருமாள்’ அவர்கள் தனது எண்பத்தியாறாவது வயதில் மறைந்த செய்தியே அது. ‘காலைக்கதிர்’ செய்தியின்படி அவர் ஈழநாடு செய்தி ஆசிரியராகவும், பின்னாளில் உதயன் பத்திரிகையின் ஆசிரியபீடத்திலும் பணியாற்றியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தன் உடலை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கையளிக்க வேண்டுமென்ற அவரது விருப்பத்துக்கேற்ப் அவரது உடல் கையளிக்கப்பட்டதாகவும் மேற்படி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூத்த பத்திரிகையாளர் பெருமாள் அவர்களின் மறைவு என் நினைவுகளை அசை போட வைத்து விட்டது. என் இலக்கிய வாழ்க்கையில் அவரை நான் ஒருபோதுமே மறக்க மாட்டேன். என் எழுத்துலகத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் என்னை ஊக்குவித்த பத்திரிகையாளர்களில் அவர் முதலிடத்திலிருப்பவர். இவ்வளவுக்கும் இன்றுவரை அவரை நான் ஒரு தடவை கூடச் சந்தித்ததில்லை. அவர் எப்படியிருப்பார் என்பது கூடத் தெரிந்திருக்கவில்லை. இருந்தும் எப்பொழுதும் என் நெஞ்சில் அவருக்கு எப்போதுமோரிடமிருக்கும்.
அக்காலகட்டத்தில்தான் நான் சிறுகதைகள் எழுதத்தொடங்கியிருந்தேன். சிரித்திரன் சஞ்சிகையில் என் முதலாவது சிறுகதை வெளியாகியிருந்தது. அப்பொழுது நான் யாழ் இந்துக்கல்லூரியில் கல்விப்பொதுத் தராத உயர்தர வகுப்பில் , விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். அதன்பின் நான் எழுதிய சிறுகதை ‘அஞ்சலை என்னை மன்னித்து விடு’. அது வீட்டு வேலைக்காரியாகப்பணிபுரியும் ஏழைச்சிறுமியிருத்தியைப்பற்றிய சிறுகதை. அதுவே ஈழநாடு பத்திரிகையில் வெளியான எனது முதற்சிறுகதை. அப்பொழுது ஈழநாடு வாரமலர் ஆசிரியராகக் கடமையாற்றிக்கொண்டிருந்தவர் பெருமாள் அவர்கள். அதன்பின் எனது சிறுகதைகளான ‘இப்படியும் ஒரு பெண்’ , ‘மணல் வீடுகள்’, ‘பல்லி சொன்ன பாடம்’ ஆகியவை ஈழநாடு வாரமலரில் வெளியாகின. இவற்றைத்தொடர்ந்து ‘நியதி’ என்னும் உருவகக் கதை, நல்லூர் ராஜதானி நகர அமைப்பு பற்றிய கட்டுரைகள் இரண்டு, புத்தாண்டுக் கவிதையொன்று, யாழ்நகரிலுள்ள பழமையின் சின்னங்களைப்பேணப்படுதலின் அவசியம் பற்றிய கட்டுரை ஆகியவை ஈழநாடு வாரமலரில் வெளியாகியன. அவற்றை வெளியிட்டு என்னை ஊக்குவித்தவர் பெருமாள் அவர்கள்.