காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 2017 டிசம்பரில் சுகுமாரனின் ‘பெருவலி’ நாவல் வெளிவந்த காலப் பகுதியிலேயே நூல் கையில் கிடைத்திருந்தும் அதை வாசிக்கத் தொடங்குவதற்கு நானெடுத்த கால நீட்சியின் கழிவிரக்கத்தோடேயே அதை அண்மையில் வாசித்து முடித்தேன்.
இந்திய சரித்திரத்தில் மாபெரும் நிகழ்வுகளைக்கொண்டது மொகலாய அரசர்களின் ஆட்சிக் காலம். அதில் பதினேழாம் நூற்றாண்டு மிகவும் தனித்துவமானது. மிக ஆழமாய் இன்றெனினும் அக் காலப் பகுதியின் சரித்திரம் வாசகனின் அறிதலில் தவறியிருக்க வாய்ப்பில்லை. வெகுஜன வாசிப்பில் பெரிதும் பேசப்பட்ட அனார்க்கலி – சலீம் காதல் அக்பர் கால சரித்திரத்தின் முக்கிய நிகழ்வாகவும் கொண்டாடப்பட்டது. தீவிர வாசகர்களின் கவனத்தையும் அக்பர் காலம் வேறு காரணங்களில் வெகுவாக ஈர்த்திருந்தது. அக்பர் காலம் தொடங்கி ஜஹாங்கீர், ஷாஜகான் ஈறாக ஐந்து பேரரசர்களின் ஆட்சிபற்றிய விதந்துரைப்பில்லாத மொகலாய சரித்திரம் அதுகாலவரை எழுதப்பட்டிருக்கவில்லை; கதைகளும் தோன்றியிருக்கவில்லை. அத்தகு காலக் களத்தில் கதை விரித்த நாவல் ‘பெருவலி’.
இரண்டு பாகங்களாய் 167 பக்கங்களில் அமைந்த இந் நாவலின் முதலாம் பாகம் ஷாஜகானின் ஆட்சியை மய்யப்படுத்தியது. அன்றைய அரசியல் நிலபரம் விளக்கமாகும்படி அக்பர் முதற்கொண்டு தொடர்ந்த பேரரசர்களின் ஆட்சியும், வாழ்வும்பற்றி அளவான விவரிப்பை நாவல் கொண்டிருப்பினும், அது ஷாஜகான் – மும்தாஜின் முதிர் காதலுக்கு குறிப்பாய் அழுத்தம் தந்திருக்கும்.
தக்காணத்து அரசதிகாரியாயிருந்த ஷாஜகான் (அப்போது குர்ரம்) பதவியிலிருந்து நீக்கப்பட்டு அங்கேயே நிஜாம்சாஹியென்ற இடத்தில் தங்கவைக்கப்படுகிறார். அரசியல் சதுரங்கத்தின் காய் நகர்த்தல்களுடன் கதை அங்கிருந்துதான் ஹிஜ்ரா பானிபட்டின் பார்வையிலிருந்து ஆரம்பிக்கிறது. கதைசொல்லியும் அவ்வப்போது அவனை இடைவெட்டி கதையை நகர்த்திச் செல்வார். எவரது பார்வையிலிருந்து கதை விரிகிறதென்ற மயக்கம் வாசகனுக்குத் தோன்றாதபடி கதையை நகர்த்தும் படைப்பாளியின் சாதுர்யம் சிறப்பு. நாவலில் ஒரு மீள்பார்வை நிகழ்கிறபோதுதான் இந்த கதைசொல்லிகளின் மாற்றம்கூட வாசகனுக்குப் புலனாகிறது.