சென்னை ஐஐடியில் மானுடவியல் துறையில் முதுகலையில் படித்துக்கொண்டிருந்த கேரளாவைச்சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் அங்கு பணி புரியும் பேராசிரியர்கள் சிலரின் பாரபட்சம் மற்று துன்புறுத்தல்கள் காரணமாகத் தற்கொலை செய்துள்ள விபரம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பாத்திமா தன் அலைபேசியில் தனது தற்கொலைக்குக் காரணமான பேராசிரியர்கள் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார், பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரன், மற்றும் இன்னுமொருவர் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இப்பேராசிரியர்களை நிச்சயம் சட்டம் தண்டிக்க வேண்டும். இதில் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மாணவி பாத்திமாவின் பாடமொன்றுக்கு முதலில் குறைந்த புள்ளிகளை இட்டிருக்கின்றார். பின்னர் மாணவி மீளாய்வு செய்யக்கூறியதும் அதிகரித்துள்ளார். இம்மாணவியின் தற்கொலை பற்றிய இந்தியா டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்கட்டுரையில் இவ்விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சகல பாடங்களிலும் உயர் பெறுபேறுகளைப்பெற்று வந்துள்ள மாணவி பாத்திமா இவ்விதமானதொரு முடிவினைத் தேர்ந்தெடுக்கத் தூண்டிய சென்னை ஐஐடி கல்வி நிறுவனப்பேராசிரியர்களால் அந்நிறுவனத்திற்கே அவமானம்.