என்னுடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சேர்ந்து எனது எண்பதாவது பிறந்த நாளை அமோகமாக சிட்னியில் கொண்டாடினார்கள். என் மூத்த பேத்தி மாதுமையும் மூத்த பேரன் கபிலனும் கேக் வெட்டியபபின் என்னைப் பற்றி சிறு சொற்பொழிவு ஆற்றி என்னையும் எல்லோரையும் மகிழ்வித்தார்கள்.
பேரன் கபிலன், “அப்பம்மாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த பூமியில் எண்பது வருடங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் அப்பம்மா, இது மிக நீண்டகாலம் ஒரு சாதனை எனச் சொல்லலாம். 1938 இல் இந்த உலகைச் சுற்றி வர நாலு நாள் எடுத்தது. அந்தக் கால கட்டத்திலே ஒருவரின் வருடாந்தச் சம்பளம் $1700 ஆக இருந்தது. அவுஸ்திரேலியாவில் ஒரு கட்டிப் பாண் ஒன்பது சதம், நீங்கள் பிறந்த வருடத்திலே தான் சவுதி அரேபியாவில் எண்ணை கண்டுபிடிக்கப்பட்டது. நம்புகிறீர்களோ இல்லையோ அது சர்வாதிகாரர்களின் காலம், சகாப்தம். ஸ்டாலின், முசலோனி, ஹிட்லர் ஆகியோர் அதிகாரத்தில் இருந்த காலம். இப்படிச் சரித்திர முக்கியத்துவமான காலத்தில் பிறந்திருக்கிறீர்கள். பேரப் பிள்ளைகளான எங்களுக்கு பெருமையாகவிருக்கிறது. அதுமட்டுமா, ஹிட்டலர் யூத மக்களை கொடுமைப் படுத்தியகாலமும் அதுதான்.” எனக்கூறியதோடு தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது பள்ளி விடுதலை நாட்களில் என்னோடு கழித்த இன்பமான நினைவுகளைப் பகிர்ந்து என்னையும் எல்லோரையும் மகிழ்வித்தான்.
இந்தச் சொற்பொழிவு என்னை பின்னோக்கி சிந்திக்க வைத்தது. என் நினைவு தெரிந்த நாள் முதல் இந்த எண்பது வயது வரை கண்ட மாற்றங்களோ ஆயிரம் ஆயிரம். அந்த நினைவுகள் என் நெஞ்சினிலே திரும்பி எழ மனதிலே சொல்லமுடியாத ஏக்கமும் தாபமும் எழுந்தது.
இரண்டாவது மகா யுத்தம் தொடங்குவதற்கு மூன்று வருடங்களுக்கு முன், ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்தி எட்டில், தாய் தந்தையருக்கு எட்டாவது குழந்தையாக இந்தப் பூமியில், கொக்குவில் கிராமத்தில் இருந்த எனது பாட்டா பாட்டி வீட்டில் பிறந்தேன். எனக்கு சிந்தாமணி எனப் பெயரும் வைத்தார்கள். எனக்கு ஆறு வயதாக இருக்கும் போது, ஏன் எனக்கு இந்த பழங் காலத்துப் பெயரை சூட்டினீர்கள் என பெற்றோரிடம் கேட்டதற்கு, ஐம் பெருங் காப்பியங்களில் ஒன்றான சிந்தாமணி சினிமாப் படமாக 1937 ஆம் ஆண்டில் வெளிவந்து மக்களிடையே புகழ் பெற்றிருந்தது, அம்மாவிற்கும் அந்தப் பெயர் பிடித்திருந்ததால், அந்தப் பெயரை எனக்கு வைத்தார்களாம்.