இலங்கையின் பெரும்பான்மையின மக்கள் தமது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சவைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். அதே சமயம் சிறுபான்மையின மக்கள் சஜித் பிரேமசாசாவைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
இன, மத மற்றும் மொழிரீதியாகப் பிளவுண்ட இலங்கையில், ஓரினத்தின் ஜனாதிபதியாக கோத்தபாயா ராஜபக்ச வென்றிருக்கின்றார். சிறுபான்மையின மக்களுட்பட நாற்பத்தொரு வீத மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். அதே சமயம் 52.51 வீத மக்கள் (6,883,620) அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். இனவாதத்தை அள்ளி வீசி, தென்னிலங்கையில் சிங்கள மக்களை இனரீதியாகத் தூண்டி பெரு வெற்றியினைக் கோத்தபாயா பெற்றிருக்கின்றார். இலங்கையின் பெரும்பான்மையின மக்களைப்பொறுத்தவரையில் இலங்கையில் அவர்கள் இனரீதியாக ஒடுக்கப்பட்டு வாழ்பவர்களல்லர். அவர்களில் பலர் சிறுபான்மையினர் அடையும் துன்பங்களை இன்னும் அறிய முடியாதிருப்பது துரதிருஷ்ட்டமானது. தமிழர்களுக்கு அதிக உரிமைகளைப்பெற்றுக் கொடுத்து விடுவார் சஜீத் என்று இனவாதத்தைக் கக்கித் தென்னிலங்கையில் அமோக வெற்றி பெற்றிருக்கின்றார் கோத்தபாயா ராஜபக்ச. இவரது வெற்றி இனவாதத்துக்குக் கிடைத்த வெற்றி. அதே சமயம் 41.7% வீத மக்கள் (5,467,088) இனவாதத்துக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். அதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.