இந்த ஞாலம் பல்நிலை உயிர் திரட்சிகளின் தொகுப்பு. உயிரிகளின் மூலம் இயக்கம். இயங்குநிலையின் மூலம் தேவை. உயிரிகளின் அடிப்படைத்தேவை ஆற்றல். ஆற்றலுக்கு அடிப்படை உணவு.
மனித உடலில் இயற்கையாக அமைந்துள்ள ஆற்றலின் நிலைப்பாட்டிற்கு உணவின் மூலம் கிடைக்கும் ஆற்றல் அடிப்படையானது. உயிரிகள் தன் ஆற்றல் கொணர்விற்கு உட்கொள்ளும் இயற்கை மூலங்கள் காற்று, நீர், உணவு ஆகியவை (குறள் 941). இவற்றைத் தன்னைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலிலிருந்து உயிரிகள் தன்னிறைவுச் செய்துக் கொள்கின்றன.
மானுடர்களின் உணவுநிலை பண்பாட்டின் முக்கியக் கூறுகளுள் ஒன்றாகும். மனிதனின் மனப்பக்குவத்தை அறிந்துக் கொள்ளும் நிலைகளனாகவும் மனிதனின் உணவு வரலாறுத் திகழ்கின்றது. உணவினைப் பச்சையாக உண்ட ஆதிமனிதன், உணவினை வேகவைத்து உண்ட பழங்குடியின மனிதன், உணவினைப் பக்குவப்படுத்தி முறைவயின் உண்ட வேளாண்யுக மனிதன், உணவினைப் பதப்படுத்தி உண்ணும் தற்கால மனிதன் என்று மனிதனின் மனப்பக்குவத்தினை வெளிக்காட்டும் ஆதாரங்களாக உணவுமுறைகள் திகழ்கின்றன.
உணவுசார் செய்முறை காலந்தோறும் பல மாற்றங்களைக் கண்டிருந்தாலும் அதன் உறுபொருள் இயற்கையின் பாற்பட்டதேயாகும். மக்களின் உணவு முறையானது காலச்சூழல், இடச்சூழல், கலாச்சாரச்சூழல் என்ற பன்முகப் பரிமாணங்களை உட்செறித்தது. ஒவ்வொரு இனமக்களுக்கும் இம்மேற்காண் அடிப்படையில் உணவுமுறையானது வேறுபடுகின்றது.
இத்தகு உணவுமுறை படைக்கப்படுகின்ற இடத்தினைப் பொறுத்து பல்வேறு நம்பிக்கைகளையும், வழக்காறுகளயும் உட்கொண்டது. நாட்டுப்புறம் சார்ந்த கலாச்சார கூறுகளுள் ‘விலக்கு’ (tabo) என்பதும் ஒன்று. ‘விலக்கு என்ற சொல் புனிதம் புனிதமற்றது என்ற இரண்டு மாறுபட்ட பொருளைக் கொண்டது’ (தே.ஞானசேகரன்.2010).