நீலகிரி எனும் உயிர்ச்சூழல் மண்டலம் உணவுச் சங்கிலிக்கும், உணர்வு சங்கிலிக்கும் ஒத்திசைத்து நிற்கும் அட்சயப்பாத்திரம். ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்ற தொல்காப்பி.யரின் கூற்று பொருட்களுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்களுக்கும் பொருந்தும். பொருட்களுக்கு இடப்படும் பெயர்கள் அப்பொருட்கொண்ட குணத்தின் அடிப்படையில் காரணமாகவோ, இடுகுறியாகவே அமையும். பெரும்பாலும் இயற்கைசார்ந்த பொருட்கள் இடுகுறிப்பெயராகவே அமைவன. வாழ்களத்தைச் சுற்றியுள்ள இயற்கையைப் புரிந்துக்கொண்டு, அதன் கொடைகளான செடி, கொடிகளைப் பயன்பாட்டு மற்றும் குறியீட்டு நோக்கில் அதற்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்கள் பொதுவாக காரணப்பெயராகவே விளங்குகின்றது.
நீலகிரியில் வாழ்கின்ற படகரின மக்கள் ‘பாம்பெ உல்லு’ என்று அழைக்கும் காரணப்பெயர் கொண்ட ஒரு புல்வகை சூழல், பண்பாடு, பயன்பாடு போன்ற பல்வேறு பரிமாணங்களில் தன்னை முன்னிறுத்தும் போக்கு சூழலியல் நோக்கில் காணத்தக்கதாகும். தேவை, தேர்வுக்கருதி இவர்களின் வழக்காறுடன் ஒன்றியப் பொருளாகவும், முடிமுதல் அடிவரை பயன்பாட்டு நிலைக்கொண்டதாகவும் இந்த ஓரறிவு உயிர் விளங்குகின்றது.
உயிரிகளின் தொகுப்பாக விளங்கும் இப்புவியில் ஆறறிவு உயிரியான மனிதனின் வாழ்வில் சடங்குகள் புரிதலாலும், பண்பாட்டாலும் கட்டமைக்கப்பட்டவை. சடங்குகள் சார்ந்த புழங்குபொருட்களும் காரணகாரிய அடிப்படையில் அமைக்கப்படுபவை. படகரின மக்களின் பெரும்பாலான சடங்குகளில் பல்வேறு பண்புகளைக்கொண்ட தாவரங்கள் இடம்பெறுகின்றன. அத்தாவரங்களுள் ‘பாம்பெ உல்லுவும்’ ஒன்று.