” இசை வெறும் உணர்ச்சியைத்தரக்கூடிய போதையல்ல. அது நலிந்துபோன இதயத்திற்கு நம்பிக்கையை ஊட்டுகிறது. மனிதனின் தத்துவார்த்த வாழ்வை வளப்படுத்தும் வலிமை அதற்குண்டு. எனவே மனித நாகரீகத்தின் செல்வமான இசையின் உயிரை அகற்றி, அதன் வெறும் சடலத்தை மாத்திரம் காட்டும் நிலையை இசையமைப்பாளர்கள் கைவிடவேண்டும். மக்கள் கவிஞன் பாரதி கூறியதைப்போலவே இசையின் வாயிலாக நவரசங்களை பிரதிபலிக்கச்செய்யவேண்டும். அதைச்செய்ய முன்வரும் இசையமைப்பாளர்களையும் மக்களையுமே நான் விரும்புகின்றேன்.”
இவ்வாறு பாரதி நூற்றாண்டு காலகட்டத்தில் இலங்கை வந்திருந்த இந்திய இசைமேதை எம்.பி. ஶ்ரீநிவாசன் ( மானாமதுரை பாலகிருஷ்ணன் ஶ்ரீநிவாசன்) வீரகேசரி வாரவெளியீட்டிற்கு ( 20-12-1981) வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.
இவரை பேட்டிகண்டவர் வீரகேசரி பத்திரிகையாளர் சுபாஷ் சந்திரபோஸ்.
யார் இந்த ஶ்ரீநிவாசன்…?
ஒரு கால கட்டத்தில் சென்னையில் இடதுசாரி கலை இலக்கியவாதிகள் கூட்டாக இணைந்து தயாரித்து வெளியிட்ட பாதை தெரியுது பார் திரைப்படத்தின் இசையமைப்பாளர். இந்தப்படத்தில் சில காட்சிகளில் ஜெயகாந்தனும் வேண்டா வெறுப்பாக தோன்றி நடித்திருந்தார். எனினும் படத்தின் நீளம் கருதி அதனை சுருக்கும்பொழுது தான் வரும் காட்சிகளை ஜெயகாந்தன் நீக்கச்சொன்னார்.
ஜெயகாந்தனின் அருமை நண்பரான எம்.பி.ஶ்ரீநிவாசன், தமிழ், மலையாளம், வங்காளம் உட்பட சில இந்திய மொழிகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருப்பவர்.