என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’
அத்தியாயம் பதினாறு
பெரும்பாலான பகல்நேரங்களை நாங்கள் தூங்கிக்கழித்துவிட்டு இரவு நேரங்களில் வெளியே புறப்பட்டோம். இறுதி ஊர்வலத்திற்குச் செல்வதை போன்ற ஒரு மிகப்பெரிய படகின் பின்னே நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அதன் ஒவ்வொரு திசைப்பகுதியிலும் நான்கு நீண்ட துடுப்புகள் இருந்தன. எனவே அதில் குறைந்த பட்சம் முப்பது மனிதர்களாவது இருக்கவேண்டும் என்று கணக்கிட்டோம். படகின் மேற்பரப்பில் ஐந்து கூம்புக்குடில்கள் மிகுந்த இடைவெளியுடன் ஒன்றொக்கொன்று தள்ளிப் போடப்பட்டிருந்தது. அவற்றின் நடுவில் திறந்தவெளியில் குளிர்காயும் தீ மூட்ட வசதியாக ஒரு அமைப்பு இருந்தது. உயர்ந்த கொடிக் கம்பங்கள் ஒவ்வொரு இறுதி முனையிலும் இருந்தன. அந்தப் படகுக்கென்று தனி நேர்த்தி இருந்தது. நீங்கள் மட்டும் இப்படிப்பட்ட ஒரு படகைச் செலுத்தும் நபர்களுள் ஒன்று என்றால் நீங்கள் கண்டிப்பாக தனித்துவம் வாய்ந்தவர்தான்.
இரவு மிகவும் சூடாகவும், மேகமூட்டத்துடனும் இருந்தபோது, ஒரு மிகப்பெரிய வளைவில் கீழ்நோக்கிய திசையில் நாங்கள் மிதந்து கொண்டிருந்தோம். பரந்து விரிந்த நதியின் கரைகளில் இருபுறமும் அடர்ந்த காடுகள் அரண் போல் தென்பட்டன. அந்த காடுகளில் எங்கேயும் இடைவெளியோ அல்லது ஏதேனும் ஒளிக் கீற்று உள்ளே நுழைவதையோ காணவே முடியாது. கைரோ நகரைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, உண்மையில் அந்த நகரை அடைந்தால் அதை எங்களால் இனம் காணமுடியுமா என்று நாங்கள் வியந்து கொண்டிருந்தோம். ஒரு டசன் வீடுகளுக்கு மேல் அங்கே இருக்க வாய்ப்பில்லை என்று நான் முன்னமே கேள்விப்பட்டிருந்ததால், ஒருக்கால் அதைத் தெரிந்து கொள்ள முடியாது போகலாம் என்று நான் கூறினேன். அதுவும் அந்த வீடுகளில் விளக்குகள் ஏற்றப்படாமல் இருந்தால், அந்த நகரைக் கடந்து செல்வது எங்களுக்கு எப்படித் தெரியும்? அந்த நகரின் அருகேதான் இரண்டு பெரிய நதிகளும் சந்திக்கின்றன என்பதால் அதை வைத்து நாம் கண்டுபிடித்துவிடலாம் என்று ஜிம் கூறினான். அவ்வாறு நதிகள் சந்திக்கும்போது ஏற்படும் மணல் குவியலை, நதியின் மத்தியில் இருக்கும் தீவின் பாதம் என்று நினைத்து அதைக் கடந்து செல்வதாக நாங்கள் தவறுதலாக நினைத்து விடக் கூடாது என்று நான் எச்சரிக்கை விடுத்தேன். இந்த விஷயம் எங்கள் இருவரையும் கவலை கொள்ள வைத்தது.
எனவே நாங்கள் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. கரையில் ஏதேனும் விளக்கு காணப்பட்டால், முதலில் தெரியும் விளக்கை நோக்கி துடுப்பு வலித்து நாங்கள் கரைசேரவேண்டும். பின்னர் அங்குள்ள எல்லோரிடமும் எனது அப்பா வணிகப்படகு ஒட்டிக் கொண்டு எங்களைத் தொடர்ந்து வருவதாகத் தெரிவிக்க வேண்டும். அவர் புதிதாகத் தொழில் தொடங்கியுள்ளதால், கைரோ எத்தனை தொலைவில் உள்ளது என்று தெரிந்து கொள்ள விரும்புவதாக அனைவரிடமும் கூறுவோம் என்று யோசனை சொன்னேன். ஜிம்முக்கு இந்த யோசனை பிடித்திருந்தது. எனவே திருப்தியாகப் புகைப்பிடித்துக் கொண்டு இருவரும் காத்திருந்தோம்.