தமிழரின் தொன்மைமிக்க வாழ்வியல் முறையினை எடுத்துரைக்கும் பகுதி தொல்காப்பியப் பொருளதிகாரமாகும். தமிழர்கள் மலைகளில் வாழ்ந்து உடைமைகளைப் பேணிக்காக்கக் காடுசார்ந்த பகுதியில் வாழ்ந்து பின்பு நாகரிக வளர்ச்சியடைந்து நிலமும் நீரும் வளமும் பெருகி இருந்த வயல்சார் மருதநிலத்தில் வாழ்ந்து, வாணிகம் பொருட்டு கடல்சார்ந்த நெய்தல் பகுதியில் குடியேறி ஒப்பற்ற வாழ்க்கை முறையினை வாழ்ந்து வந்தனர். மேலும் அவர்கள் மலைச்சாரல் பகுதிகளிலும், அழகிய புல்வெளி சார்ந்த காடுகளும் வறட்சியுற்ற போது பாலை என்ற நிலம் உருவானது. அங்கும் மக்கள் வாழ்ந்து வந்தனர். அவ்வாழ்க்கை முறையினை உணர்ந்த தொல்காப்பியர் அக வாழ்க்கை மற்றும் புறவாழ்க்கை என இரண்டாகப் பகுத்துள்ளார். அதில் ‘அகம்’ காதல் சார்ந்த வாழ்க்கையினையும்,‘புறம்’ நாடு சார்ந்த போர், வீரம் போன்ற வாழ்வியல் சூழலையும் எடுத்துரைத்துள்ளது. தொல்காப்பியர் திணையை ஒழுக்கம் என்னும் பொருளில் கையாண்டு அக ஒழுக்கம் ஏழினையும் புறஒழுக்கம் ஏழினையும் பிரித்தறிகின்றார்.
இதனை,
“கைக்கிளை முதலா ஏழ் பெருந்திணையும்
முற்கிளந்த தனவே முறைவயினான்”1
என்ற நூற்பாவில் சுட்டுகிறார். அதாவது கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என அகத்திணைகள் ஏழு என்கிறார். இத்திணைகளின் நெறிமுறைகளைப் பொருளதிகாரத்தின் அகத்திணையியல் முதல் நூற்பாவில் (தொல்.அகத்.நூ.1)கூறப்பட்டுள்ளது. இதற்கு இளம்பூரணர்,“திணையாவது கைக்கிளை முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணையென்பன. அவை முறைமையினான் மேற்சொல்லப்பட்டன என்றவாறு”2 என்பார். அதாவது இந்நூற்பாவில் கைக்கிளை முதலா ஏழ்பெருந்திணையும் அகத்திணை என்றும் அவற்றின் முறையே என்பதற்கு புறமாகிய பாடாண், வஞ்சி, வெட்சி, வாகை, உழிஞை, தும்பை, காஞ்சி என்றும் புறத்திணை ஏழும் சேர்ந்து பதினான்கு திணை என வரையறுக்கிறார் இளம்பூரணர். பேராசிரியர்,“கைக்கிளை முதற் பெருந்திணையிறுவாய். எழும் முன்னர்க் கிளக்கப்பட்டன”3 என்பார். மேலும் நச்சினார்க்கினியர்,“கைக்கிளை முதலா எழுபெருந்திணையும் கைக்கிளை முதலாக முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணையென்ற எழு நிலனும், முறைநெறி வகையின் – அவற்றிற்கு முறைமை வழியிற் புறமென அடைத்த வெட்சி முதற் பாடாண் பகுதியீறாகிய எழுபகுதியோடே கூட்ட, முற்கிளந்தனவே-முன்னர்க் கிளக்கப்பட்டனவேயாகச் செய்யுட்குறுப்பாய் நிற்கும்”4 என்பர். இளம்பூரணர் நூற்பாவில் வரும் “முறைமையினான்” என்ற பாடத்தை மாற்றி “முறை நெறிவகையின்” என பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் பாடங் கொண்டுள்ளனர். இத்திணை என்னும் உறுப்பு செய்யுட்குரிய உறுப்பாக அமைந்துள்ளது. ஒரு செய்யுளில் முதல், கரு, உரிப்பொருள் மூன்று சேர்ந்து வந்தால் தான் அச்செய்யுள் அகப்பாட்டுறுப்பாக அமையும் என்பது தொல்காப்பியரின் திணைக்கோட்பாடாகும். இத்திணைக் கோட்பாடு செய்யுளில் பாடப்பெறும் ஒழுகலாறுகளை அகமும் புறமும் எனப் பாகுப்படுத்தி அறிவதற்கான கருவியாகும்.
Continue Reading →