1
இங்கிலாந்தின் நிலவுடைமையிலான உற்பத்தி வரலாறு இடைக்காலத்தில் இருந்தே தொடங்குகிறது. கி.பி 1066 முதல் 1300 வரையிலான நார்மன் ஆட்சிக்காலத்திற்கு முன்பே இங்கிலாந்தில் மேனர் முறை வழக்கில் இருந்தது. மேனர் முறை என்றால் வரி செலுத்தும் நிலப்பகுதிகள் என்று பொருள். இந்நடைமுறை இங்கிலாந்தில் மட்டுமின்றி மத்திய ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா நாடுகள் அனைத்திலும் வழக்கத்தில் இருந்தது. இங்கிலாந்தில் இந்நடைமுறை எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதற்கு சரியான வரலாற்றுக் குறிப்புகள் இல்லை. ரோமானிய சாம்ராஜ்யத்தில் அடிமை ஊழியர்களால் பயிரிடப்பட்ட வில் (Vill) என்பதிலிருந்து இது தோன்றியிருக்க வேண்டும் எனவும், ஜெர்மனி நாட்டில் பயிர் செய்யப்பட்ட பிரதேசமாகிய மார்க்கில் (Mark) இருந்து இது நிலவி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இருபத்தோராம் நூற்றாண்டு வரலாற்று அறிஞர்கள் ரோமானியர், டியுடானியர் ஆகியோர்களின் முறைகளில் இருந்து இது தோன்றி இருக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். 1086 – இல் எழுதப்பட்ட டூம்ஸ்டே புத்தகத்தில் (Domesday Book) இருந்து தான் நார்மன் ஆட்சியில் மேனர் முறை இருந்து வந்ததைப் பற்றி அறியமுடிகிறது. மேனர்களில் பெரும்பகுதி திருச்சபைகளின் வசம் இருந்தன. பேராயர்கள், ஆயர்கள், பிற சமயத் தலைவர்களும் (பிரபுக்கள்) மேனர்களை அனுபவித்தார்கள். இதே காலத்தில் தமிழகத்தில் ஆட்சி செய்த இராஜராஜ சோழனின் நிர்வாகத்தில் நிலம் அதிகாரத்தின் மையமாக, அதே சமயத்தில் சற்று கூடுதல் வலுவாகக் கட்டமைக்கப்பட்டது. முதன்முதலில் நிலம் அளவிடும் முறையை அறிமுகப்படுத்திய இராஜராஜ சோழனின் இந்த அணுகுமுறை தன்னுடைய அரசின் வரி விதிப்பில் இருந்து ஒரு சிறு நிலப்பகுதியும் தப்பி விடக்கூடாது என்ற நோக்கினதாகவே இருந்திருக்கிறது.
மேனர் நிலங்களைப் பொறுத்தவரை உள்நிலம் (Inland) என்றும், வெளிநிலம் (Out land or villenegium) என்றும் பிரித்தறியப்பட்டது. உள்நிலம் பேராயர்கள், சமயத் தலைவர்கள் முதலியோர்களின் பயன்பாட்டு நிலமாகவும், வெளிநிலம் பண்ணையாளர்களின் பயன்பாட்டு நிலமாகவும் இருந்தது. பண்ணையாளர்கள் பயன் படுத்திய நிலத்தின் மீது அவர்களுக்குச் சட்டப்படியான உரிமைகள் இல்லை. ஆனால் பேராயர்கள் உள்ளிட்டவர்கள் பயன்படுத்திய நிலம் அவர்களுக்கு உரிமையுடையதாக இருந்தது. மேலும் வெளிநிலத்தை வைத்திருந்த பண்ணையாட்களை மாற்றுவதற்கான உரிமையும் அவர்களுக்கு இருந்தது. நார்மன் காலத்தின் பின்பகுதியில் பண்ணையாளர்களின் நிலங்கள் உள்நிலங்களாக மாற்றப்பட்டு பேராயர்கள் உள்ளிட்டவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. ஆட்சி அதிகாரம் அரசன் கையில் இருந்தாலும், நிலத்தின் உரிமையிலான அதிகாரம் பிரபுக்களின் கையில் இருந்ததால் அதிகாரம் மிக்கவர்களாக பிரபுக்களே இருந்தனர். இவர்களின் ஆதரவிலும், வழிப்படுத்தலிலுமே அரசன் ஆட்சி செய்திருக்கிறான்.