முன்னுரை
தன்னை அறிந்து கொள்வதில் ஒரு முறையான பயிற்சியும், முயற்சியும் ஒருபுறம் இருக்க இன்னும் பல்வேறு வழிகளில் பலர் தன்னை அறிந்துகொள்ளும் தேடலில் ஈடுபடுகின்றனர். இவர்களின் தேடல் என்பது புறத்தேடல் அதாவது வெளிவுலகத் தேடல் அல்ல அகத்தேடல், அதாவது மனதளவில் தேடுதல் ஆகும். இந்த அகத்தளவு தேடலில் அவர்கள் தேடியவை கிடைத்ததன் பயன்பாட்டை அவர்கள் பாடலின் மூலம் வெளி உலக மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பொறுத்திப்பார்த்து பயன்பெறும் வண்ணம் அமைத்திருப்பார், அந்த வகையில் தாயுமானவர் தன் அகத்தேடலின் பயனை அவர் பாடலின் மூலம் எடுத்துக் கூறுவதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தன்னையறிதல்
ஆன்மீக உலகத்தில் நான் யார்? என்ற கேள்வி மிகவும் முக்கியத்துவம் உள்ள ஒன்றாகும். எத்தனையோ அணுகு முறையில் பலரும் இந்தக் கேள்வியை அணுகியுள்ளார்கள். ஆனால் இது சம்மந்தமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கூறியிருந்தாலும் அடிப்படை உண்மை ஒன்றுதான். நாம் அறிந்துகொள்ளும் செய்திகளைச் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டுமானால்,அதனை சரியான கோணத்தில் விவாதித்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் என்பதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாக உள்ளது. நமது சமுதாயத்தில் எங்கு பார்த்தாலும் பிரச்சினைகளாகத்தான் இருக்கின்றன. உலகமே ஒரு யுத்தகளமாக அமைந்துள்ளது, போராட்டமும் வன்முறையும் தலை விரித்து ஆடுகிறது. எல்லாவற்றிற்கும் மூல காரணம் இந்த நான் என்னும் உணர்வுதான். ‘நான் சொல்வதுதான் சரி, நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்கவேண்டும், என்று இந்த நான் எல்லா பிரச்சினைகளையும் கொண்டுவந்து விடுகிறது. இதுதான் அடிப்படை பிரச்சினையாக உள்ளது. இந்த நான் என்னும் உணர்வுதான் நமது செயல்களை ஊக்குவிக்கும் முக்கியமான அம்சமாகவும் உள்ளது. நமது செயல்களை நிர்ணயிக்கும் அம்சமாகவும் உள்ளது.
“தன்னைஅறி யாதுசகத் தானாய் இருந்துவிட்டால்
உன்னை அறிய அருள் உண்டோ பராபரமே”.
(தாயு. பு.க.பா.எ.289)
என்ற பாடலில் தன்னையறிந்தவருக்கே சுகம் கிடைக்கும் என்கிறார்.