‘தாயகம்’ (கனடா) சஞ்சிகையில் வெளியான என் ஆரம்ப காலத்து நாவல்கள்: ‘கணங்களும், குணங்களும்’, ‘வன்னி மண்’, ‘அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்’. ‘மான்ரியா’லிலிருந்து வெளியான ‘புரட்சிப்பாதை’ கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் ‘மண்ணின் குரல்’. இந்நான்கு நாவல்களும் ‘மண்ணின் குரல்’ என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் ‘குமரன் பப்ளிஷர்ஸ்’ வெளியீடாக வெளிவந்தது. ஒரு பதிவுக்காக அந்நாவல்கள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப் பிரசுரமாகும். முதலில் ‘வன்னி மண்’ நாவல் பிரசுரமாகும். அதனைத்தொடர்ந்து ஏனைய நாவல்கள் பிரசுரமாகும்.
என் பால்ய காலம் வன்னி மண்ணில் கழிந்தது. என் மனதைக்கொள்ளை கொண்ட மண். நான் முதன் முதலில் எழுதத்தொடங்கியபோது அதன் காரணமாகவே என் பெயரின் முன்னால் வ என்னும் எழுத்தைச் சேர்த்து வ.ந.கிரிதரன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். ‘வன்னி மண்’ நாவல் என் சொந்த அனுபவத்தையும், கற்பனையையும் கலந்து பின்னப்பட்டதொரு நாவல். கற்பனைப்பெயர்களை நீக்கி விட்டால் ஒரு வகையில் என் பால்ய காலத்துச் சுயசரிதை என்றும் கூடக்கூறலாம். அவ்வளவுக்கு இந்நாவல் என் சொந்த அனுபவங்களின் விளைவு என்பேன்.
‘மண்ணின் குரல்’ தொகுப்புக்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய அறிமுகக் குறிப்பு:
அறிமுகம்: திரு கிரிதரன் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி நன்கு அறிமுகமானவர். பின்னர் புலம்பெயர்ந்து கனடா சென்று தமது படைப்பாற்றலை அங்கும் தொடர்ந்து ஈழத்திலும் வெளிப்படுத்தி வந்துள்ளார். அத்துடன் நின்றுவிடவில்லை. தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தமிழர் தொழில்முறையாகவும் புலம்பெயர்ந்தும் வாழும் உலக நாடுகளிலெல்லாம் அறிமுகமானார். ஆயினும் நான்கு குறுநாவல்கள் அடங்கிய இத் தொகுதியே அன்னாரின் படைப்பாற்றலையும் எழுத்து வன்மையையும் எளிதில் அளவிடக்கூடியதாக அமைந்துள்ளது எனக்கூறலாம். அவரது எழுத்துக்களில் இயற்கையின் ஈடுபாட்டையும் வர்ணனையையும் பரந்து காணலாம். கவிஞர்களால் என்றும் இயற்கையின் அழகையும் எழிலையும் மறந்து விடமுடியாது என்றே கூறத்தோன்றுகிறது. ‘வன்னி மண் வெறும் காடுகளின், பறவைகளின் வர்ணனை மட்டுமல்ல. அந்த மண்மேல், ஈழத்து மண்மேல் அவர்கொண்ட பற்றையும் கூறும். வன்னி மண் நாவலில் மட்டும் இப்போக்கு என்று கூறுவதற்கில்லை. மற்றைய மூன்று நாவல்களிலும் கூட அவரது கவித்துவப் பார்வையைக் காணலாம். அடுத்தது, மனிதாபினமானமும், செய் நன்றி உணர்வும், தவறு நடந்தபோதும் அவரது கதை மாந்தர்களின் பச்சாதாப உணர்வு முதன்மை பெற்று நிற்பதையும் நான்குகதைகளிலும். ‘வன்னி மண் சுமணதாஸ் பாஸ், “அர்ச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலிலும் வரும் சிறுவன், டீச்சர், கணங்களும் குணங்களில் வரும் கருணாகரன் மண்ணின் குரலில் வரும் கமலா யாவரிலும் தரிசிக்கலாம்.