‘வாணி, உன் வீடும் வளவும் அறிவேன். அக் காணி முழுவதும் கலகலப்பே அல்லவோ?’- கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தி எழுதியிருக்கும் இந்தக்கவிதை வரிகள், யாழ். மகாஜனாக்கல்லூரியை நினைவுகூருகிறது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய நண்பர் என். சண்முகலிங்கன், ” சமூக மாற்றங்களிடையும் பண்பாட்டின் செழுமையான கூறுகளைக் கைவிடாத இந்தப்புலத்தின் சிறப்பினைக்கண்டுதான் படைப்புச்சக்தியாய்ப் பண்பாடு கண்ட கலைத்தெய்வமான வாணியும் தன்வீடாக மகாஜனாவைத் தேர்ந்தெடுத்து, தென்தமிழ் யாழ் மீட்டிச் சிரித்தபடி வீற்றிருக்கிறாள். – என்று தமது கட்டுரையொன்றில் பதிவுசெய்துள்ளார். சமூக மாற்றங்களுக்கு பிரதானமாகத்திகழும் கல்வியும் கலை, இலக்கியங்களும் உருவாகும்-வளரும் ஸ்தாபனம் மகாகவி குறிப்பிடும் கலகலப்பான கலாசாலைதான்.
இலங்கையில், தமிழ் கலை,இலக்கியவளர்ச்சிக்கு ஆரோக்கியமான செழுமையைத்தந்த பாடசாலைகளின்- கல்லூரிகளின் வரிசையில் மகாஜனாவும் ஒன்று என்பதில் அபிப்பிராய பேதமிருக்காது. எனக்கு- எனது தாயகத்தில் பல பாடசாலைகளுடன் நீண்டகாலமாக தொடர்புகளிருந்தபோதிலும் மகாஜனாவுடனான உறவு சற்று வித்தியாசமானது. அதற்குக்காரணம் பலவுண்டு. 1972 ஆம் ஆண்டு ஜூலைமாதம் வெளியான மல்லிகை இதழின் முகப்பினை அலங்கரித்த படம் மகாஜனாக்கல்லூரியின் ஸ்தாபகர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களுடையது. அந்த இதழில்தான் எனது முதலாவது சிறுகதையும் வெளியாகி ஈழத்து இலக்கிய உலகிற்கு அறிமுகமானேன். ஒவ்வொருவரது வாழ்விலும் முதலாவது நிகழ்வு மறக்கமுடியாததல்லவா…?
யாழ்ப்பாணத்தில் 1975- 1986 காலப்பகுதியில் பல இலக்கியக்கூட்டங்களிலும் பேசியிருந்தபோதிலும் அந்தக்குடாநாட்டில் முதலும் – இறுதியுமாக நான் பேசிய ஒரேயொரு கல்லூரி மண்டபம் மகாஜனா மாத்திரமே. 1984 ஆம் ஆண்டு அச்சமயம் அங்கே அதிபராகவிருந்த எழுத்தாளர் த. சண்முகசுந்தரம் அவர்களின் தலைமையில் அக்கல்லூரியில் நடந்த திருமதி கோகிலா மகேந்திரனின் முரண்பாடுகளின் அறுவடை கதைத்தொகுப்பின் வெளியீட்டு விழாவில்தான் இந்த முதலும் இறுதியுமான நிகழ்வுநடந்தது.