மகாபாரதக்கதையை வியாசர் முதல் ஜெயமோகன் வரையில் பலரும் எழுதியிருக்கின்றனர். தற்போது ஜெயமோகன் வெண்முரசு என்னும் தலைப்பில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்கங்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். அதனை ஒரு தவப்பணியாகவே மேற்கொண்டு வருவது தெரிகிறது. 2014 ஆம் ஆண்டில் விஷ்ணுபுரம் விருது விழா முடிந்து வீடு திரும்பியதும், தனது குழந்தைகளுக்கு மகா பாரதக்கதையைச் சொல்லி, அதில் வரும் பாத்திரங்களின் இயல்புகளையும் விபரித்திருக்கிறார். அவர் கதைசொல்லும் பாங்கினால் உற்சாகமடைந்த அவரது குழந்தைகள், ” அப்பா, இந்தக்கதையையே இனி எழுதுங்கள்.” என்று வேண்டுகோள் விடுத்ததும், அவர் அன்றைய தினமே மகா பாரதக்கதைக்கு வெண்முரசு என்று தலைப்பிட்டு ஒவ்வொரு பாகமும் சுமார் 500 பக்கங்கள் கொண்டிருக்கத்தக்கதாக இன்று வரையில் எழுதிக்கொண்டிருக்கிறார். நாளை மறுதினம் ஒக்டோபர் மாதம் பிறந்தால் ஜெயமோகன் எழுதும் வெண்முரசுவுக்கு வயது மூன்று ஆண்டுகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் விரும்பிய காவியம்தான் மகா பாரதம். இலங்கைப்பயணம் தொடர்பான பத்தி எழுத்தில் ஏன் மகாபாரதம் வருகிறது, ஜெயமோகன் வருகிறார் என்று வாசகர்கள் யோசிக்கக்கூடும். இலங்கையில் ஒரு காலகட்டத்தில் மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மகா பாரதக்கதையைச் சொல்லிக்கொண்டிருந்த இரத்தினம் சிவலிங்கம் என்ற இயற்பெயர்கொண்ட மாஸ்டர் சிவலிங்கம் அவர்களைத்தான் அன்று பார்ப்பதற்கு புறப்பட்டுக்கொண்டிருந்தேன்.
மட்டக்களப்பில் நண்பர் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணனுடன் அன்று காலை புறப்படுவதற்கு முன்னரே அன்றைய தினம் எங்கெங்கு செல்வது என்று தீர்மானித்துக்கொண்டேன். முதலில் சுவாமி விபுலானந்தரின் சமாதி தரிசனம், அருகிலேயே விபுலானந்த இசைக்கல்லூரிக்கு செல்லுதல், அதனையடுத்து மாஸ்டர் சிவலிங்கத்தை பார்ப்பது, ஊடகவியலாளர் சங்கீத் பணியாற்றும் ஊடகப்பள்ளிக்குச்செல்வது, கிழக்கு பல்கலைக்கழகம் மொழித்துறைத்தலைவர் – ஆய்வாளர் ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் அவர்களைச் சந்திப்பது, அடுத்து எமது கல்வி நிதியத்தின் உதவியினால் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டதாரியாகி தொழில் வாய்ப்பு பெற்றிருக்கும் பிரபாகரன் என்பவரையும், மற்றும் பேராசிரியர் செ. யோகராசாவையும் அழைத்துக்கொண்டு மதிய உணவுக்குச்செல்வது, அதனையடுத்து சுகவீனமுற்றிருக்கும் ஈழநாடு மூத்த பத்திரிகையாளர் ‘கோபு’ கோபாலரத்தினம் அவர்களிடம் சென்று சுகநலன் விசாரிப்பது, மட்டக்களப்பில் வதியும் சிறுவர் இலக்கிய எழுத்தாளரும் தமிழ்நாடு காமராஜர் பல்கலைக்கழகத்தின் இலங்கை பிரதிநிதியுமான நண்பர் ஓ. கே. குணநாதனை சந்திப்பது, மாலையில் மட்டக்களப்பு நூலக கேட்போர் கூடத்தில் நடக்கவிருக்கும் எதிர்மனசிங்கத்தின் நூல் வெளியீட்டில் கலந்துகொள்வது, அதனையடுத்து இரவு Hotel East Lagoon இல் நடைபெறவிருக்கும் மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் கூட்டத்திற்கு சமூகமளிப்பது, அதனை முடித்துக்கொண்டு, கன்னன் குடாவில் அன்று இரவு நடக்கும் கண்ணகி குளுர்த்தி கொண்டாட்டத்திற்கு செல்வது என்று நீண்ட ஒரு நிகழ்ச்சி நிரலை தயாரித்தோம்.