பயணியின் பார்வையில் – அங்கம் 21: கதைசொல்லிக்கலைஞர் மாஸ்டர் சிவலிங்கம் எமக்குச் சொன்ன நனவிடை தோய்தல் கதை

மாஸ்டர் சிவலிங்கம் மகாபாரதக்கதையை வியாசர் முதல் ஜெயமோகன் வரையில் பலரும் எழுதியிருக்கின்றனர். தற்போது ஜெயமோகன் வெண்முரசு என்னும் தலைப்பில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்கங்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். அதனை ஒரு தவப்பணியாகவே மேற்கொண்டு வருவது தெரிகிறது. 2014 ஆம் ஆண்டில் விஷ்ணுபுரம் விருது விழா முடிந்து வீடு திரும்பியதும், தனது குழந்தைகளுக்கு மகா பாரதக்கதையைச் சொல்லி, அதில் வரும் பாத்திரங்களின் இயல்புகளையும் விபரித்திருக்கிறார். அவர் கதைசொல்லும் பாங்கினால் உற்சாகமடைந்த அவரது குழந்தைகள், ” அப்பா, இந்தக்கதையையே இனி எழுதுங்கள்.” என்று வேண்டுகோள் விடுத்ததும், அவர் அன்றைய தினமே மகா பாரதக்கதைக்கு வெண்முரசு என்று தலைப்பிட்டு ஒவ்வொரு பாகமும் சுமார் 500 பக்கங்கள் கொண்டிருக்கத்தக்கதாக இன்று வரையில் எழுதிக்கொண்டிருக்கிறார். நாளை மறுதினம் ஒக்டோபர் மாதம் பிறந்தால் ஜெயமோகன் எழுதும் வெண்முரசுவுக்கு வயது மூன்று ஆண்டுகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் விரும்பிய காவியம்தான் மகா பாரதம். இலங்கைப்பயணம் தொடர்பான பத்தி எழுத்தில் ஏன் மகாபாரதம் வருகிறது, ஜெயமோகன் வருகிறார் என்று வாசகர்கள் யோசிக்கக்கூடும். இலங்கையில் ஒரு காலகட்டத்தில் மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மகா பாரதக்கதையைச் சொல்லிக்கொண்டிருந்த இரத்தினம் சிவலிங்கம் என்ற இயற்பெயர்கொண்ட மாஸ்டர் சிவலிங்கம் அவர்களைத்தான் அன்று பார்ப்பதற்கு புறப்பட்டுக்கொண்டிருந்தேன்.

மட்டக்களப்பில் நண்பர் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணனுடன் அன்று காலை புறப்படுவதற்கு முன்னரே அன்றைய தினம் எங்கெங்கு செல்வது என்று தீர்மானித்துக்கொண்டேன். முதலில் சுவாமி விபுலானந்தரின் சமாதி தரிசனம், அருகிலேயே விபுலானந்த இசைக்கல்லூரிக்கு செல்லுதல், அதனையடுத்து மாஸ்டர் சிவலிங்கத்தை பார்ப்பது, ஊடகவியலாளர் சங்கீத் பணியாற்றும் ஊடகப்பள்ளிக்குச்செல்வது, கிழக்கு பல்கலைக்கழகம் மொழித்துறைத்தலைவர் – ஆய்வாளர் ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் அவர்களைச் சந்திப்பது, அடுத்து எமது கல்வி நிதியத்தின் உதவியினால் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டதாரியாகி தொழில் வாய்ப்பு பெற்றிருக்கும் பிரபாகரன் என்பவரையும், மற்றும் பேராசிரியர் செ. யோகராசாவையும் அழைத்துக்கொண்டு மதிய உணவுக்குச்செல்வது, அதனையடுத்து சுகவீனமுற்றிருக்கும் ஈழநாடு மூத்த பத்திரிகையாளர் ‘கோபு’ கோபாலரத்தினம் அவர்களிடம் சென்று சுகநலன் விசாரிப்பது, மட்டக்களப்பில் வதியும் சிறுவர் இலக்கிய எழுத்தாளரும் தமிழ்நாடு காமராஜர் பல்கலைக்கழகத்தின் இலங்கை பிரதிநிதியுமான நண்பர் ஓ. கே. குணநாதனை சந்திப்பது, மாலையில் மட்டக்களப்பு நூலக கேட்போர் கூடத்தில் நடக்கவிருக்கும் எதிர்மனசிங்கத்தின் நூல் வெளியீட்டில் கலந்துகொள்வது, அதனையடுத்து இரவு Hotel East Lagoon இல் நடைபெறவிருக்கும் மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் கூட்டத்திற்கு சமூகமளிப்பது, அதனை முடித்துக்கொண்டு, கன்னன் குடாவில் அன்று இரவு நடக்கும் கண்ணகி குளுர்த்தி கொண்டாட்டத்திற்கு செல்வது என்று நீண்ட ஒரு நிகழ்ச்சி நிரலை தயாரித்தோம்.

Continue Reading →

எதிர்வினை: யுகதர்மம் – நிர்மலாவின் மொழிபெயர்ப்பு

- மு.நித்தியானந்தன்பேர்டோல்ட் பிரெக்ட் என்ற ஜெர்மன் நாடகாசிரியரின் The exception and the Rule என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நாடகத்தை, தமிழில் யுகதர்மம் என்ற தலைப்பில் இலங்கை அவைக்காற்று கலைக்கழகம் 9.12.1979 இல் யாழ் வீரசிங்;கம் மண்டபத்தில் மேடையேற்றியது. இந்த நாடக மேடையேற்றத்தின் போது, இந்நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் நிர்மலா நித்தியானந்தன் என்றும் இந்நாடகத்தில் இடம் பெறும் பாடல்களை மொழிபெயர்த்தவர் ச.வாசுதேவன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நாடகம் இலங்கையில் 29 மேடையேற்றங்களைக் கண்டுள்ளது. இந்த நாடகம் அரங்கேறி 38 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், ‘யுகதர்மம் – நாடகமும் பதிவுகளும்’ என்ற தலைப்பில் அந்நாடகத்தை அச்சிட்டு, இவ்வாண்டு வெளியிட்டிருக்கிறார் நாடகநெறியாளர் க. பாலேந்திரா. அந்த நூலில் நாடக நெறியாளரின் தொகுப்புரையில் பாலேந்திரா தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்ச்சைக்குரியதாகும்.

அவர் இந்நூலின் தொகுப்புரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

‘எனது நண்பன், கவிஞன் ச. வாசுதேவனிடம் இந்த நாடகத்தைக் கொடுத்து மொழிபெயர்க்கச் சொன்னேன்… வாசுதேவனே முதலில் முழு நாடகத்தினையும் மொழிபெயர்த்துத் தந்தார்… நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ‘யுகதர்மம்’ நாடகத்தயாரிப்பின்போது நிர்மலா நித்தியானந்தன் பிரதியைச் செம்மைப்படுத்தினார்.. முதலில் நாடக மேடையேற்றத்தின்போது, தமிழாக்கம் நிர்மலா நித்தியானந்தன் என்றும் பாடல்கள் மட்டுமே வாசுதேவன் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த நாடகத்தை வாசுதேவன் முதலில் மொழிபெயர்த்தமையை மு.நித்தியானந்தன் எமது சுவிஸ் நாடக விழா (1994) மலரில் பதிவு செய்துள்ளார். தமிழ் மொழியாக்கம் வாசுதேவன் – நிர்மலா என்பதே சரியானது’ என்று எழுதுகிறார் பாலேந்திரா.

இந்த நாடகத்தை முதலில் வாசுதேவன் மொழிபெயர்த்தார் என்றும், அந்த நாடகப் பிரதியை நிர்மலா செம்மைப்படுத்திக் கொடுத்தவர் மட்டுமே என்றும் வாசுதேவன் மறைந்து 24 ஆண்டுகள் கழித்துக் கூறுகிறார் பாலேந்திரா. இந்த நாடகத்தை வாசுதேவன் முதலில் மொழிபெயர்த்துத் தந்ததை சுவிஸ் நாடக விழா (1994) மலரில் நான் பதிவு செய்திருப்பதாக பாலேந்திரா குறிப்பிட்டிருக்கிறார். க.பாலேந்திரா ஆதாரம் காட்டும் சுவிஸ் நாடக விழா மலர்க்கட்டுரையில் ‘யுகதர்மம்’ என்ற நாடக மொழியாக்கம் பற்றிக் குறிப்பிட்ட பகுதியைக் கீழே தருகிறேன்.

Continue Reading →