பயணியின் பார்வையில் — அங்கம் 25: தமிழர்களுக்கு கண்ணகி அம்மன் ! சிங்களவர்களுக்கு பத்தினி தெய்யோ !!

 "கூடல்" முதலாவது மலர் மகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம் என்பன ஐதீகங்களாக போற்றப்பட்டாலும், இவற்றில் வரும் பெண்பாத்திரங்களுக்கு கோயில்கள் அமைத்து வழிபடும் மரபும் தொன்றுதொட்டு நீடிக்கிறது. இந்தக்காவியங்களில் வரும் ஆண் பாத்திரங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். மகாபாரதத்தில் குந்தி முதல் பாஞ்சாலி வரையிலும், இராமாயணத்தில் சீதையும், சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள்தான். குந்தியைத்தவிர ஏனைய மூவரும் வழிபாட்டுக்குரியவர்களாகிவிட்டனர். இலங்கையில் திரெளபதை அம்மன், கண்ணகி அம்மன், சீதை அம்மன் கோயில்கள் அமைத்து சைவத்தமிழர்களும் பௌத்த சிங்களவர்களும் வழிபடும் மரபும் தொடர்ந்து பண்பாட்டுக்கோலமாகவே மாறிவிட்டதை காணமுடிகிறது. சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் மணிமேகலையும் மக்களிடத்தில் காவியமாகியிருக்கிறாள். மணிமேகலை தமிழ்க்காப்பியம் மட்டுமல்ல, அது பவுத்த காப்பியமும்தான் என்று நிறுவுகிறார் தமிழக எழுத்தாளர் பேராசிரியர் அ. மார்க்ஸ். ( ஆதாரம்: தீராநதி 2017 ஜூன்)

கண்ணகி வழிபாடு, திரௌபதை அம்மன் வழிபாடு என்பன கிழக்கிலங்கையில் மிகவும் முக்கியத்துவமாகியிருக்கின்றன. இராவணன் சீதையை கவர்ந்து வந்து அசோகவனத்தில் சிறைவைத்தமையால் அங்கு சிங்கள மக்களால் சீதாஎலிய என்னுமிடத்தில் சீதை அம்மனும், வடமேற்கு இலங்கையில் உடப்பு மற்றும் கிழக்கிலங்கை பாண்டிருப்பில் தமிழர்களினால் திரௌபதை அம்மனும், கன்னன் குடாவில் ஶ்ரீகண்ணகி அம்மனும் குடியிருக்கிறார்கள். பாரத நாட்டில் தோன்றிய காவிய மாந்தர்களில் குறிப்பாக பெண்களுக்காக இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் வழிபாட்டு மரபை தோற்றுவித்திருப்பதின் பின்னணி விரிவான ஆய்வுக்குரியது.

மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், கன்னன்குடா நோக்கி பயணமானோம். அப்பொழுது நண்பர் ‘செங்கதிரோன்’ கோபாலகிருஷ்ணன் எனக்குத்தந்த ‘கூடல்’ சிறப்பு மலர் பல தகவல்களைச் சொன்னது. இந்தப்பயணத்தில் நண்பர் பேராசிரியர் செ. யோகராசாவும் எம்முடன் இணைந்துகொண்டார். மட்டக்களப்பு வாவியைக்கடந்து படுவான்கரையை நோக்கி நண்பரின் கார் பயணித்தது. கன்னன்குடா ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தை வந்தடையும்போது இரவு பத்துமணியும் கடந்துவிட்டது. பக்தர்கள் நிறைந்திருந்தனர். பறவைக்காவடியில் சிலர் வந்தனர். அந்தக்காட்சி அங்கிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்கச்செய்திருக்கலாம். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அக்காட்சியை பார்த்து மனதிற்குள் வருந்தினேன். தம்மை வருத்தி இப்படியும் நேர்த்திக்கடனா..?

திரௌபதை அம்மன் கோயில் முன்றல்களில் தீமிதிப்பு. உடப்பு பிரதேசத்தில் அதனை பூமிதிப்பு என்பார்கள். இரண்டு நேர்த்திக்கடன்களுமே தம்மை வருத்திக்கொள்ளும் செயல்கள்தான். பெண்தெய்வங்கள் இப்படியும் ஆண்களை பழிவாங்குகின்றனவா…? சீதையை இராமன் தீக்குளிக்கவைத்தான். பாஞ்சாலியை துச்சாதனன் துகிலுரிந்தான். கண்ணகியின் கணவனை பாண்டியன் சிரச்சேதம் செய்வித்தான்.

Continue Reading →

நினைவு கூர்வோம்: 1966 அக்டோபர் 21 எழுச்சி..! 51 வருட நிறைவு!

சாதிய தீண்டாமைக் கொடுமைக்கெதிரான புரட்சிகரக் கலை இலக்கிய படைப்புகள் மலர்ந்து இலக்கிய வரலாற்றில் அழியா இடம்பெற்றனதீண்டாமைக்கு எதிரான போராட்ட இயக்கத்தை ஆரம்பிக்கும் வகையில் 1966 -ம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (அன்று சீனச் சார்பு என அழைக்கப்பட்டது) ஓர் ஊர்வலத்தையும் பொதுக்கூட்டத்தையும் வடபிரதேசத்தில் நடாத்துவதென தீர்மானித்தது.

அதற்கமைய 1966 அக்டோபர் 21-ம் திகதி சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஊர்வலம் நடாத்துவதற்கான தயாரிப்புகளைக் கட்சி மேற்கொண்டது. ஊர்வலத்திற்கான அனுமதி பொலிசாரிடம் கோரப்பட்ட போதிலும் அனுமதி மறுக்கப்பட்டது. வடபிரதேசத்தின் சகல பகுதிகளிலிருந்தும் கட்சி வாலிப இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆதரவாளர்களும் மற்றும் முற்போக்கு எண்ணங்கொண்ட பொதுமக்களும் பெருமளவில் ஊர்வலத்தில் கலந்துகொள்ளவென சுன்னாகத்தில் திரண்டனர்.
1966 அக்டோபர் 21-ம் திகதி பிற்பகல் 5 மணியளவில் சுன்னாகம் சந்தை வளாகத்திலிருந்து ”சாதி அமைப்புத் தகரட்டும்..! சமத்துவ நீதி ஓங்கட்டும்..!!” என்ற செம்பதாகையை உயர்த்திப்பிடித்த வண்ணம் ஊர்வலம் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டது. ஊர்வலத்தின் முன்னணியில் தோழர்கள் கே. டானியல் – வீ. ஏ. கந்தசாமி – கே. ஏ. சுப்பிரமணியம் – டாக்டர் சு. வே. சீனிவாசகம் – எஸ். ரி. என் நாகரத்தினம் ஆகியோர் தலைமைகொடுத்துச் சென்றனர். அடுத்து கட்சி வாலிபர் இயக்கத்தைச் சேர்ந்த எம். ஏ. சி. இக்பால் – கு. சிவராசா – நா. யோகேந்திரநாதன் – கி. சிவஞானம் – கே. சுப்பையா ஆகியோர் அணிவகுத்துச்செல்லத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கானோர் அணியணியாக முன்னோக்கி விரைந்தனர். ஊர்வலம் பிரதான வீதியில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை அண்மித்ததும் பொலிசார் வீதிக்குக் குறுக்கே அணிவகுத்து நின்று ஊர்வலத்தைத் தடுத்தனர். ஊர்வலத்தினர் முன்னேற முயன்றபோது பொலிசாரினால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தோழர்கள் பலர் பலத்த காயங்களுக்குள்ளாகினர். அந்த இடம் போர்க்களம்போன்று காட்சியளித்தது. காயங்களுக்குள்ளான தலைமைத் தோழர்கள் சிலரை பொலிசார் இழுத்துச்சென்று பொலிஸ் நிலையத்தில் அடைத்தனர்.
இத்தனை இடர்கள் மத்தியிலும் ஊர்வலத்தினர் கலைந்துசெல்ல மறுத்து நின்றனர். நிலைமை மோசமாகுவதை உணர்ந்த பொலிஸ் உயரதிகாரிகள் முழக்கங்கள் இன்றி இருவர் – இருவர் என வரிசையாக யாழ்ப்பாணம் நோக்கிச் செல்ல அனுமதித்தனர். நீண்ட ஊர்வலமாக முன்னேறத் தொடங்கியது.

ஊர்வலம் யாழ்நகரை வந்தடையும்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். யாழ் முற்றவெளியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் டாக்டர் சு. வே. சீனிவாசகம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் நா. சண்முகதாசன் சிறப்புரையாற்றினார்.

தீண்டாமைக்கெதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்குப் புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டித் தலைமை தாங்குமென தோழர் நா. சண்முகதாசன் அறைகூவல் விடுத்தார். கே. டானியலும் உரையாற்றினார். அக்டோபர் 21 -ம் திகதி ஊர்வலம் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும் மீண்டும் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் சுன்னாகம் சந்தை வளாகத்தில் 26 – 11 – 1966 அன்று நடைபெற்றது.  தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் நா. சண்முகதாசன் – எஸ். டி. பண்டாரநாயக்கா – கே. டானியல் – வி. ஏ. கந்தசாமி – சுபைர் இளங்கீரன் உட்படப் பலர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து வடபகுதியெங்கும் பல ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன.

Continue Reading →