ஆய்வு: வெண்ணீர்வாய்க்கால் கா.கூ.வேலாயுதப்புலவர்

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?சேதுநாடு என அழைக்கப்பெறும் இராமநாதபுரம் மாவட்டம் பெரும் புகழுடைத்தது. புவியரசராக மட்டுமின்றி, கவியரசாரகவும் சேதுநாட்டு மன்னர்கள் திகழ்ந்துள்ளனர் என்பதற்கு சுவடிகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள் எனப் பல வழிகளில் சான்றுகள் கிடைக்கின்றன. புலவரொடு கூட பிறந்தது வறுமை. வறுமையில் வாடும் புலவர்கள் தங்கள் கவித்திறமையை அரசர்களிடம்காட்டி பொருளுதவி பெற்று, வாழ்க்கையை நடத்திச்செல்வது அக்காலத்தில் இயல்பான ஒன்றாக இருந்தது. அவ்வாறு தேடிவந்த புலவர்களுக்குப் புரவலர்களாக அமைந்து, மண்ணும் பொன்னும், பொருளும் அளித்து, தமிழ்மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக, சேதுநாட்டு மன்னர்கள் திகழ்ந்துள்ளனர். அதுமட்டுமில்லாது பிற மாவட்டத்தைச் சேர்ந்த பெருமைமிக்கப் புலவர்களையும் ஆதரித்து சிறப்புச் செய்ததும் இம்மன்னர்களே. இத்தகைய பெருமைமிகு புலவர்கள் வாழ்ந்த மண்ணில் கா.கூ.வேலாயுதப்புலவரும் ஒருவர். இவர் இயற்றிய பாடல் அடிகளைத் தொகுத்து ‘திருப்பாடல் திரட்டு’ எனும் நூல் இரா.பாண்டியன் என்பவரால் வெளிவந்துள்ளது. இந்நூல் வழியாக கா.கூ.வேலாயுதப்புலவரின் வாழ்க்கை வரலாறு, தமிழ்ப்பணி அவர்தம் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் (தாலூகா) எனும் ஊரிலிருந்து 5கிலோ மீட்டர் தொலைவில் வெண்ணீர்வாய்க்கால் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரைச்சுற்றி, புலவர் பெருமான்கள் (பிசிராந்தையார், சவ்வாது புலவர், வண்ணக்களஞ்சியப் புலவர், சரவணப்பெருமாள்கவிராயர் போன்றோர்) பலர் பிறந்துள்ளனர். இவ்வூரிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில், பொசுக்குடி (பிசிர்குடி) என்னும் ஊர் தலைசிறந்த நட்புக்கு எடுத்துக்காட்டான பிசிராந்தையார் பிறந்த ஊர் ஆகும். இதனை “பிசிர் என்ற ஊரைச் சேர்ந்த ஆந்தையார் பிசிராந்தையார் என்று பெயர் பெற்றார். அவ்வூர் பாண்டி நாட்டிலுள்ள தென்பது

“ தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும்
பிசிரோன் என்ப’’

என்று கோப்பெருஞ்சோழன் கூறுதலால் அறியப்படும். இப்பொழுது அவ்வூர் இராமநாதபுரம் நாட்டில் பிசிர்க்குடியென்று வழங்கப்படுகின்றதென்பர்’’ (தமிழகம் ஊரும் பேரும், ப.101) என்ற சான்று மூலம் அறிய முடிகிறது. வெண்ணீர்வாய்க்கால் எனும் கிராமத்தில் பிறந்தவரே கா.கூ.வேலாயுதனார். பல்கலை வித்துவானாகத் திகழ்ந்த இவர் தமிழ்மொழி மீது அளவற்ற அன்புகொண்டவர்.

Continue Reading →

சிறுகதை: மெய்ப்பொருள்

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -லிஃப்ட் இல்லாத மாடிப்படிகளில் ஏறி மூன்றாவது தட்டுக்கு வந்து கோலிங் பெல்லை ஒலித்தபோது வழக்கம்போல அப்பாதான் கதவைத் திறந்தார். இதை அவளுக்காக மனமுவந்து செய்யும் ஒரு உதவிபோல இதற்காகவே காத்துக்கொண்டிருப்பவர்போல பெல் ஒலித்த மாத்திரத்திலேயே கதவைத் திறந்து கண்களால் இரக்கமாகச் சிரித்துக்கொண்டு தோன்றுவார். அவருக்கு இதயத்திலிருந்து சுரந்து வரும் இந்த இரக்கத்தை தவிர வேறு எதையும் தரமுடியவில்லை. குடும்பத்தில் மூத்தவளாகப் பிறந்த இந்தப் பெண் நாற்பது வயதாகியும் இன்னும் ஒருத்தனுக்கு வாழ்க்கைப்படாமல் தன் குடும்பத்துக்காக உழைத்துப் போடுகிறாளே என அப்பா இரக்கப்படுவது போலிருக்கும்.

அலுவலகத்தில் நாள்முழுவதும் காய்ந்த அலுப்பு… பஸ் நெரிசல்களில் நசுங்கிய சினம்… மாடிப்படிகளில் ஏறிவந்த களைப்பு எல்லாம் அப்பாவின் முகத்திலுள்ள கருணையைக் கண்டதும் பறந்துவிடும். அவர் முகதரிசனத்தைப் பெற்றுக்கொண்டே வீட்டினுள் நுழையும்போது ஒரு புத்துணர்சி கிடைக்கும்.

உள்ளே வந்ததும் கதவை ஓசைப்படாது சாத்திவிட்டு வந்து அப்பா கதிரையில் அமர்ந்துகொள்வார். நாள் முழுவதும் அந்தக் கதிரையே அவருக்குத் தஞ்சம். அதனால்தான் அதற்கு ‘அப்பாவின் கதிரை’ எனப் பெயர் வந்தது. வெளிக்கேட்காது அடங்கிப்போகும் குரலில் அடிக்கடி செருமுவார். யாருடனும் பேசுவது குறைவு. அப்படி இருந்தவாறே எத்தனை விடயங்களுக்காகக் கவலைப்படுகிறாரோ? வரிசையாகப் பெற்றெடுத்த ஐந்து பெண்களுக்கும் உரிய காலத்தில் கல்யாணம் செய்துவைக்க முடியவில்லையே என்ற கவலையில் தோய்ந்து… அவரது முகம் எப்போதும் மன்னிப்புக் கோருவது போன்றதொரு பாவனையில் மாறிப்போய்விட்டது.

அறையுட் சென்று மேஜையிற் கைப்பையைப் போட்டாள். செருப்பை ஒரு பக்கம் கழற்றிவிட்டு கட்டிலில் நீட்டி நிமிர்ந்து படுத்தாள். அது டபிள் பெட். இரவில் அந்தக் கட்டிலில் தங்கைகளில் ஒருத்தி சேர்ந்து பகிர்ந்துகொள்வாள்.

அம்பிகா பக்கத்தில் படுத்தாளென்றால் தொல்லைதான். உறக்கம் வரும்வரை அலுப்புக் கொடுப்பாள். வயதுக்குரிய பக்குவம் இல்லாதவள்போல சிறு பிள்ளைமாதிரி விளையாடும் பெண். இந்த வயதிலும் விளையாட்டும் வேடிக்கையும் இவளுக்கு வேண்டியிருக்கிறது. இப் பூவுலகில் முப்பத்தைந்து வருடங்களைக் கழித்த பெருமை இவளுக்கு உண்டு. அப்பாவுக்கு மூன்றாவது செல்வம்.

Continue Reading →