சேதுநாடு என அழைக்கப்பெறும் இராமநாதபுரம் மாவட்டம் பெரும் புகழுடைத்தது. புவியரசராக மட்டுமின்றி, கவியரசாரகவும் சேதுநாட்டு மன்னர்கள் திகழ்ந்துள்ளனர் என்பதற்கு சுவடிகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள் எனப் பல வழிகளில் சான்றுகள் கிடைக்கின்றன. புலவரொடு கூட பிறந்தது வறுமை. வறுமையில் வாடும் புலவர்கள் தங்கள் கவித்திறமையை அரசர்களிடம்காட்டி பொருளுதவி பெற்று, வாழ்க்கையை நடத்திச்செல்வது அக்காலத்தில் இயல்பான ஒன்றாக இருந்தது. அவ்வாறு தேடிவந்த புலவர்களுக்குப் புரவலர்களாக அமைந்து, மண்ணும் பொன்னும், பொருளும் அளித்து, தமிழ்மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக, சேதுநாட்டு மன்னர்கள் திகழ்ந்துள்ளனர். அதுமட்டுமில்லாது பிற மாவட்டத்தைச் சேர்ந்த பெருமைமிக்கப் புலவர்களையும் ஆதரித்து சிறப்புச் செய்ததும் இம்மன்னர்களே. இத்தகைய பெருமைமிகு புலவர்கள் வாழ்ந்த மண்ணில் கா.கூ.வேலாயுதப்புலவரும் ஒருவர். இவர் இயற்றிய பாடல் அடிகளைத் தொகுத்து ‘திருப்பாடல் திரட்டு’ எனும் நூல் இரா.பாண்டியன் என்பவரால் வெளிவந்துள்ளது. இந்நூல் வழியாக கா.கூ.வேலாயுதப்புலவரின் வாழ்க்கை வரலாறு, தமிழ்ப்பணி அவர்தம் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் (தாலூகா) எனும் ஊரிலிருந்து 5கிலோ மீட்டர் தொலைவில் வெண்ணீர்வாய்க்கால் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரைச்சுற்றி, புலவர் பெருமான்கள் (பிசிராந்தையார், சவ்வாது புலவர், வண்ணக்களஞ்சியப் புலவர், சரவணப்பெருமாள்கவிராயர் போன்றோர்) பலர் பிறந்துள்ளனர். இவ்வூரிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில், பொசுக்குடி (பிசிர்குடி) என்னும் ஊர் தலைசிறந்த நட்புக்கு எடுத்துக்காட்டான பிசிராந்தையார் பிறந்த ஊர் ஆகும். இதனை “பிசிர் என்ற ஊரைச் சேர்ந்த ஆந்தையார் பிசிராந்தையார் என்று பெயர் பெற்றார். அவ்வூர் பாண்டி நாட்டிலுள்ள தென்பது
“ தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும்
பிசிரோன் என்ப’’
என்று கோப்பெருஞ்சோழன் கூறுதலால் அறியப்படும். இப்பொழுது அவ்வூர் இராமநாதபுரம் நாட்டில் பிசிர்க்குடியென்று வழங்கப்படுகின்றதென்பர்’’ (தமிழகம் ஊரும் பேரும், ப.101) என்ற சான்று மூலம் அறிய முடிகிறது. வெண்ணீர்வாய்க்கால் எனும் கிராமத்தில் பிறந்தவரே கா.கூ.வேலாயுதனார். பல்கலை வித்துவானாகத் திகழ்ந்த இவர் தமிழ்மொழி மீது அளவற்ற அன்புகொண்டவர்.