பரந்த உலகில் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் ஓர் அரிய முதல்வன் ஞாயிறு. அஞ்ஞாயிற்றினைத் தமிழ் இலக்கியங்கள் ஆழ்வான், இனன், உதயன், ஊழ், எரிகதிர், கதிரவன், ஒளியவன், ககேசன், காலை, தபனன், திவாகரன், தாமரை நண்பன், சூதன், சோதி, தினகரன், பகலவன், பரிதி, சூரியன், செங்கதிரோன் எனப் பல்வேறுபெயர்களில் குறிப்பிடுவதைக் காணலாம். ஞாயிற்றினை வழிபடும் வழக்கம் அதிகரித்திருப்பதற்குக் காரணம். ஆணவ இருளில் அழுந்திக் கிடக்கும் உயிர்கட்குத் தன் இன்னருள் ஒளி கொடுத்து அவ்விருளைப் போக்கி அறிவிற்கு உட்பட்ட செய்கைகளைக் கிளர்வித்து இயக்கும் இறைவனையொப்பப் புறவிருளில் மறைபட்டுக் கிடக்கும் மண்ணுயிர்த் தொகைகட்குத் தன்னொளி அளித்து கண்ணொளி விளக்கி அவற்றின் அறிவிச்சை செய்கைகளை எடுத்து இயம்புவது ஞாயிறு என்னும் பலவனே எனலாம்.
இலக்கியத்தில் ஞாயிறு
பண்டைய இலக்கியத்தில் ஞாயிறு ஒரு மகாசக்தியாகப் போற்றப்படுகிறது. அஞ்ஞாயிறு தமிழ் மக்கள் வாழ்வில் பெருமதிப்பிற்குரிய அற்புத விளக்காகத் திகழ்கிறது. வெம்மைக்கு ஞாயிறும், தண்மைக்குத் திங்களும், வண்மைக்கு வானமும் உவமிக்கப்படும் புறப்பாடல்,
“ஞாயிற்றன்ன வெந்திற லாண்மையும்
திங்களன்ன தன்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வண்மையும் மூன்றும்
உடைய தாகி” (புறம் 55: 13 – 16)
சிறக்குமாறு பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மருதனிள நாகனார் வாழ்த்துகிறார். இங்கு புலவர் ஞாயிற்றிற்கே முதலிடம் கொடுக்கிறார்.
“முந்நீர் மீ மிசை பலர் தொழத் தோன்றி
ஏமுர விளங்கிய சுடர்” (நற்றிணை 283: 6-7)
“தயங்குதிரை பெருங்கடல் உலகுதொழத் தோன்றி
வயங்குகதிர் விரிந்த உருவு கெழு மண்டிலம்” (அகம் 263:1-2)
இவை ஞாயிற்றினைப் போற்றும் சங்கப்பாடலாகும்.
சூரியனின் வெளிவட்டமாகிய பல லட்சம் பாகை (2,000,000 டிகிரி கெல்வின்) வெப்பமுள்ள ஒளிக்கதிர்ப் பாபத்தை ‘நெடுஞ்சுடர்கதிர்’ என்றும், தகதகக்கும் பரப்பினை ‘வெப்ப ஒளிப்படலம்’ என்றும் அதன் உட்புறமே ‘கனல் அகம்’ எனறும் இன்றைய அறிவியல் குறிக்கிறது. ஆனால் பண்டையத் தமிழ்ப்பாடலிலேயே கதிரவனின் உள்ளகம் கொதித்துக்கொண்டிருக்கும் அனற்கடல் என்பதைக் கன்னம் புல்லனார் எனும் புலவர்,