– – ஜானகி கார்த்திகேசன் பாலகிருஷ்ணன் – அவர்கள் கனடியத்தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்களிலொருவர். மின்பொறியியலாளராகப் பல வருடங்கள் பணியாற்றிய இவர் தற்போது கனடாவின் மாநிலங்களிலொன்றான ‘நோர்த்வெஸ்ட் டெரிடொரி’ஸிலுள்ள ‘யெல்லோ நைஃப்’ என்னுமிடத்தில் சமூக அபிவிருத்தி மற்றும் அதற்கான நிபுணத்துவ சேவையினை வழங்கும் நிறுவனமொன்றின் முதல்வராகப் பணிபுரிந்து வருகின்றார். இவர் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் டொராண்டோவின் ‘டொன்வலிப்பகுதியில் ஒண்டாரியோ மாநிலச் சட்டசபைக்கான தேர்தலிலும் நின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் மார்க்சிய அறிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரினதும் பெருமதிப்புக்குரியவராக விளங்கியவரும், யாழ் இந்துக்கல்லூரியின் அதிபர்களிலொருவராக விளங்கியவருமான அமரர் கார்த்திகேசு ‘மாஸ்ட்’டர் அவர்களின் புதல்விகளிலொருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் முகநூலில் ஐபிசி தமிழ் தொலைக்காட்சியினரால் ஒளிபரப்பப்பட்ட யாழ் நகரம் பற்றிய ஆவணப்படமொன்றில் விபரிக்கப்பட்டிருந்த யாழ் முஸ்லீம் மக்கள் வாழ்ந்த பகுதிகள் பற்றிய விபரங்கள் என்னை யாழ் முஸ்லீம் மக்கள் பற்றிய முகநூற் பதிவொன்றினை எழுதத்தூண்டின. அதில் என் மாணவப்பருவத்தில் அங்கு நான் சென்ற உணவகங்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். அம்முகநூற் பதிவின் விளைவு திருமதி ஜானகி பாலகிருஷ்ணனை யாழ் முஸ்லீம் மக்கள் பற்றிய அவரது அனுபவங்களின் அடிப்படையில் நல்லதொரு கட்டுரையினை எழுதத்தூண்டியுள்ளது. முகநூலில் சாதாரணமாக நான் எழுதிய பதிவொன்று இவ்விதமான நல்லதொரு கட்டுரையை எழுதத்தூண்டியுள்ளது உண்மையில் மகிழ்ச்சியினைத் தருகின்றது. சுவையாகத் தன் எண்ணங்களை, கருத்துகளை அவர் இக்கட்டுரையில் விபரித்திருக்கின்றார். – வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள் –
கடந்த பல வருடங்களுக்கு முன்பு “பதிவுகள்” இணைய இதழின் பிரதம ஆசிரியர் கிரிதரன் நவரத்தினம் அவர்களும் நானும் சிறீலங்கா மொறட்டுவப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் என்ற வகையிலும், ஒன்ராறியோ, கனடாவில் ஆரம்ப வாழ்கையை ‘ரொரன்ரோ’ மாநகரிலுள்ள தோன்கிலிஃப் பார்க் எனும் இடத்தில் தொடங்கியவர்கள் என்ற வகையிலும் பரிச்சயமானவர்கள். அதன் பின் அவரது சகோதரிகள் எனக்குப் பரிச்சயமானார்கள். இருப்பினும் யாழ் வண்ணார்பண்ணைவாசிகளான கிரிதரனின் தந்தையாரும் எனது தந்தையாரும் அக்காலத்தில் சகஜமான நண்பர்கள் என்பதை கிரிதரன் மூலம் அறிந்துள்ளேன். கிரிதரன் கட்டடக் கலையைப் பயின்றும், தனது கவித்துவம், எழுத்தாற்றல் என்பவற்றை முன்னெடுத்துச் சென்று முனைப்பாக, ஆனால் அமைதியாக, காத்திரமான செயற்பாடுகளுடன் அந்நாளிலிருந்தே சேவையாற்றுபவரெனவும், தனது தாய்நாட்டில் மிகவும் பற்றுள்ளவரெனவும் அவர் மேல் ஒரு தனிமரியாதை எனக்கு என்றுமுண்டு. கடந்த காலத்தில் சிறீ லங்காவில் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, மேலும் உள்நாட்டு, புலம் பெயர்ந்தோர், மற்றும் அகில உலக சேவை நிறுவனங்கள் ஆகியோரின் தம்மிடங்களை தக்க வைக்கும் முயற்சிகள், அரசியல் பொருளாதர இலாப நவடிக்கைகள் முன்னெடுக்குமென அறியாது, கிரிதரன் தனது ஆராய்ச்சி மூலம் சிறீ லங்கா போன்ற வளர்முக நாடுகளுக்குப் பொருத்தமான இயற்கையோடு சார்ந்த கட்டட முறையொன்றினைத் தனது இதழில் பதிவு செய்ததைப் படித்துப் பாராட்டியதுடன், அவ்வாறான திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டுமென முயன்றுள்ளேன். விளைவு என்னவென நான் கூறத் தேவையில்லை. அதன் பின்பாக 2003ம் ஆண்டு எனது தந்தையாரின் 25வது ஆண்டு ஞாபகார்த்த நூல் வெளியிடும் வேளையில், அவ்வறிவித்தலை தனது பதிவு இதழில் பிரசுரித்தார். இந்நாள் வரை தொடர்பு எதுவுமின்றி, எனது காலங்கடந்த ஒரு மாதத்திற்கு முன்பான முகநூல் நுழைவின் மூலம் கிரிதரனை மீண்டும் முகநூல் வாயிலாக மிக மகிழ்வுடன் சந்தித்துள்ளேன்.
இந் நீண்ட காலத்திற்குப் பின்பான சந்திப்பு, ஒரு கட்டுரையாக உருப்பெறுவதற்குக் காரணம், முகநூலில் வாசித்த கிரிதரனின் யாழ் ஐந்து சந்தி பற்றிய மனந்தொட்ட கட்டுரையே. கிரிதரன் அதுபற்றி தனது இளமைக்கால அனுபவங்களை அதிகமானோருக்குத் தெரியாத சில நுண்ணிய விபரங்களுடன் வரைந்திருந்தது, எனது மூளை உள்மனதைத் தட்டியெழுப்பி மேலும் சிலவற்றையும் தெரியப்படுத்தலாமே என்றது. அவற்றைத் தெரிவித்து அவரை விபரமான கட்டுரையை வரையுமாறு கேட்டதற்கு, கிரிதரன் ஐபீசீ காணொளித் தொடர்பினையும் அறிவித்து, ஆங்கிலத்திலானாலும் பரவாயில்லை என்னையே எழுதுமாறு கேட்டார். மிக நேர்மையான பதில், எனது மொழிப்புலமை மட்டானது. குறிப்பாக பத்திரிகை கட்டுரைக்கு ஏற்ப தரமானதல்ல. காரணம் நானொரு பொறியியலாளர், அதிகம் மொழிவளம் அவசியமில்லாத துறையில் கடமையாற்றுபவர். தமிழ் மொழயில் ஆரம்ப கல்வியினைக் கற்று, பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் கற்று, கனடாவில் நிர்ப்பந்தமாக ஆங்கிலத்தில் கடமையாற்றவது மட்டுமே.