2017 ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் தாரணி அகில் அவர்கள் பகிர்ந்த ஐரோப்பியப் பயணத்தொடர் (1)-(5) அனுபவம் பற்றிய கட்டுரைகளைச் சார்ந்த கருத்துக்களை பகிர முன்வந்துள்ளேன். அவரது கட்டுரைகள் கிரிதரன் அவர்கள் ஜூன் 19ம் திகதி பகிர்விற்கு அளித்த முகவுரையில் கூறியது போல் வேறு சிலர் எழுதும் பட்டும்படாத பாணியில் அல்லாமல் இவர் மிகவும் ஈடுபாடகவும், அதை அணுஅணுவாக அனுபவித்தும், மிகுந்த நகைச்சுவை கலந்தும் எழுதியது என்னைக் கவர்ந்தன. கட்டுரைகளை வாசித்த போது எவ்வாறு சுற்றுலாப் பயணத்தை அனுபவிக்க வேண்டுமெனக் கூறுவதுடன், ஒரு சுற்றுலாப் பயணக் கட்டுரையை எவ்வாறு சுவாரசியமாக எழுத வேண்டுமென ஒரு பாடம் நடாத்தியது போல் இருந்தது. அவரிடமிருந்து நான் கற்றது பல.
அதைப் பகிர்வதற்கு முன்பாக தாரணி அகில் அவர்களை எவ்வாறு சந்தித்தேன் என்பதை வாசகர்களுக்குத் தெரிவிப்பது அவசியம். எனது கட்டுரையை ‘லைக்’ பண்ணியவர்களில் அவரும் ஒருவர். முன்பு அறிமுகம் அல்லாதவர் ‘லைக்’ பண்ணுவதானால் அவரது ஆர்வம் என்னவாக இருக்குமென அவாக் கொண்டு அவரது முகநூலில் நுழைந்;தேன். அவர் ஒரு துணைப் பேராசிரியர் என அறிந்து மனமிகு மகிழ்ந்தேன். அத்துடன் அவருக்கு நல்ல நகைச்சுவை ஆர்வம் இருப்பதை அவர் பகிர்ந்திருந்த பலவகையான சுண்டல் பற்றிய கவிதையிலிருந்து அறிந்து கொண்டேன்.
முகநூலில் பலவிடயங்களையும் பார்த்தும் வாசித்தும் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஜூன் 19ம் திகதி தாரணி அகில் அவர்கள் ஐரோப்பியப் பயணத்தொடர் (5): ஒளிரும் மாய நகரம் – பாரிஸ் கண்ணில் பட்டது. நான்தான் நீண்ட கட்டுரையை எழுதிவிட்டேன் என்று நினைத்தேன். ஆனால் நீளத்தில் அவர் என்னை மடக்கிவிட்டார். இருப்பினும் வேறெதிலும் கவனம் செலுத்தாமல் என்னை வைத்திருந்த அவரது கட்டுரையை வாய் விட்டுச் சிரித்தும், சிரிப்பில் கண்ணீர் விட்டும் வாசித்து முடித்தேன். அவரது எழுத்தாற்றல் வியக்கத்தக்கது. அந்த எழுத்து நாமும் அவருடன் பயணித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.