இன்ப ஒளி பரவட்டும் இந்நாளில்!
வாசகர்கள் மற்றும் படைப்பாளிகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். சிலர் தீபாவளி சமயத்துடன் சம்பந்தப்பட்டதால் கொண்டாடக்கூடாது என்பார்கள். தீபாவளியின் அடிப்படை நோக்கம் மானுட சமுதாயத்தை மூடியிருக்கும் இருள் நீக்கி ஒளியைப்பரப்பும் நாள் என்பது. சமயத்தைத்தவிர்த்து விட்டுப் பார்த்தால், மானுடரைச் சூழ்ந்திருக்கும் இருள் நீக்கி ஒளி பாய்ச்சும் திருநாள். சமய நம்பிக்கையுள்ளவர்கள் அவ்விதம் கொண்டாடட்டும். அது அவர்கள் உரிமை. அவ்வாறில்லாதவர்கள் மானுடரை மூடியிருக்கும் இருள் நீக்கி ஒளி பாய்ச்சும் திருநாளாகக் கொண்டாடலாம். என்னைப்பொறுத்தவரையில் இந்த இரண்டாவது காரணத்தையே மையமாக வைத்து இந்நாளை அணுகுகின்றேன். நண்பர்கள் அனைவர்தம் வாழ்விவும், உறவினர்கள் அனைவர்தம் வாழ்விலும், இவ்வுலக மானுடர்கள் அனைவர்தம் வாழ்விலும் இந்நாளில் ஆரோக்கியமான சிந்தனையொளி பரவட்டும். சமுதாயத்தை மூடியிருக்கும் மடமையென்ற இருள் நீங்கட்டும்; அறிவென்னும் இரவியெழுந்து ஒளி பாய்ச்சட்டும் இந்நாளில். மானுடரைக்கொன்று குவிக்கும் போரிருள் நீங்கி பேரொளி பரவட்டும். வர்க்கம், மதம், மொழி, இனம், நாடு, வருணம் என்னும் பிரிவிருள் நீங்கி , அன்பெனுமொளி உதயமாகட்டும்.
இந்த நாள் எம் அனைவர்தம் வாழ்விலும் தவிர்க்க முடியாத இன்ப நினைவுகளை நனவிடை தோய வைத்திடும் நாள். எம்மில் பலபேர் போர்ச்சூழலுக்கு முன் பண்டிகைகள் பல கொண்டாடிக் குழந்தைப் பருவத்தைக் குடும்பத்தவருடன் கழித்தவர்கள். மறக்க முடியாத அந்நினைவுகளைச் சுமந்துகொண்டு வாழ்பவர்கள். இன்னும் சிலருக்குப் போர்ச்சூழல் அவ்வாய்ப்பினைத் தட்டிப்பறித்திருக்கக் கூடும். ஆனால் அனைவர்தம் வாழ்விலும் இந்நாளில் இன்ப ஒளி பரவட்டும். இன்ப ஒளியில் இவ்வுலகு சிறகடிக்கட்டும்; சிறக்கட்டும். நோக்கும் திசையெங்கும் நாம் வாழும் இந்நானிலம் களியொளியில் ஒளிரட்டும்.