– *’டொராண்டோ’வில் 22.10.17 அன்று நடைபெற்ற ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் ‘உலகம் பலவிதம்’ தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வில் நான் ஆற்றிய உரை –
இலக்கியம் ஒரு காலக்கண்ணாடி என்றொரு கூற்றுள்ளது. உண்மை. இலக்கியப்படைப்பொன்றினை ஆராய்ந்து பார்ப்போமாயின் பல்வேறு விடயங்களை அப்படைப்பினூடு அறிந்து கொள்ள முடியும். அப்படைப்பில் பாவிக்கப்பட்டுள்ள மொழியிலிருந்து அப்படைப்பின் காலகட்டத்தை ஆய்வொன்றின் மூலம் அறிவதற்குச் சாத்தியமுண்டு. உதாரணத்துக்குச் சங்க இலக்கியப்படைப்புகளை எடுத்துக்கொள்ளலாம். அவற்றினூடு பண்டைத்தமிழரின் வாழ்க்கை முறை, இருந்த நகர அமைப்பு, ஆட்சி முறை, நிலவிய மானுடரின் பல்வேறு விடயங்களைப் பற்றிய நம்பிக்கைகள் .. எனக்கூறிக்கொண்டே செல்லலாம். எனது இச்சிற்றுரையில் இலக்கியம் காலக்கண்ணாடி என்னும் அடிப்படையில் ம.வெ.திருஞானசம்பந்தப்பிள்ளை அவர்களின் படைப்புகளை உள்ளடக்கிய ‘உலகம் பலவிதம்’ நூலினை அணுகுவதாகும்.
அளவில் இந்நூல் பெரியது. நூலிலுள்ள அனைத்துப் படைப்புகளையும் குறுகிய காலத்தில் முழுமையாக வாசிப்பதென்பது சாத்தியமற்றதொன்று. ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் அடிப்படையில் இந்நூலை அணுகலாம். அதுவும் கூட முழு நூலைப்பற்றிய இவ்விதமானதோர் அணுகுதலுக்குரிய மாதிரி அணுகலாகவிருக்கும் என்பதால், அது என் நம்பிக்கை என்பதால் அவ்விதமே இந்நூலை அணுகுவதற்கு முடிவு செய்து, அவ்வணுகுதலின் அடிப்படையில் இலக்கியம் காலக்கண்ணாடி என்னும் கூற்றிலுள்ள உண்மை பற்றி அறிதற்குச் சிறிது முயற்சி செய்வதே என் நோக்கம்.
இதற்காக நான் இத்தொகுப்பபிலுள்ள இரு நாவல்கள் மற்றும் ஆசிரியரின் பத்திகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றின் மீது என் கவனத்தைத்திருப்பப் போகின்றேன்.
1. மதமாற்றம்
அந்நியராட்சியின் கீழ் முக்கியமானதொரு விடயமாக மதமாற்றம் இருந்ததைக் காண முடிகின்றது. பாதிரிமார்கள் மக்களை மதம் மாற்றுவதில் தீவிர முனைப்புடன் செயற்பட்டதை அறிய முடிகின்றது. பல்வேறு ஆதாயங்களுக்காக மக்கள் மதம் மாறியதையும் , பலர் மதமாற்றத்துக்கெதிராகச் செயற்பட்டதையும் ம.வெ.தி.யின் புனைகதைகளிலிருந்து காணமுடிகின்றது. அவர் இந்துக்கல்லூரியின் ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியவர். இந்து சாதனம் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர். இயல்பாகவே மதமாற்றம் என்பது அவரை மிகவும் பாதித்ததொரு விடயமாக இருந்திருக்கும். இருந்திருக்க வேண்டும். தன் எழுத்தை மதமாற்றத்துக்கெதிராக மக்களை விழிப்படைய வைப்பதற்கு அவர் பாவித்ததை அவரது புனைகதைகள் வெளிப்படுத்துகின்றன.