‘டொராண்டோவில்’ நடைபெற்ற ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் ‘உலகம் பலவிதம்’ தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
(22.10.2017) அன்று ‘டொராண்டோவில்’ நடைபெற்ற ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் ‘உலகம் பலவிதம்’ தொகுப்பு நூல் வெளியீட்டிற்குச் சென்றிருந்தேன். சிறப்பாக நடைபெற்றது. இது பற்றிப்பின்னர் விரிவானதொரு பதிவிடுவேன். எழுத்தாளர் அருண்மொழிவர்மன் வரவேற்புரையினையும், நிகழ்வின் முடிவில் நன்றியுரையும் வழங்கினார். கவிஞரும், பேராசிரியருமான சேரன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கிச் சிறப்பாக நிகழ்வினை நிர்வகித்து நடாத்தினார். நிகழ்வில் பேராசிரியர் நா.சுப்பிரமணியன், க.சண்முகலிங்கன், கலாநிதி மைதிலி தயாநிதி, ஆ.சிவநேசச்செல்வன், எழுத்தாளர் வ.ந.கிரிதரன் மற்றும் எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் ஆகியோர் உரைநிகழ்த்தினர். யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் நூலகம் நிறுவனம் ஆகிவற்றின் கூட்டு முயற்சியாக நடைபெற்ற இந்நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது. நிகழ்வின் வெற்றிக்கு பிறேமச்சந்திரா, அருண்மொழிவர்மன், தயாநிதி, மற்றும் புவனேந்திரன் திருநாவுக்கரசு ஆகியோர் உறுதுணையாக விளங்கியதை நிகழ்வில் காணக்கூடியதாகவிருந்தது.
நிகழ்வில் யாழ் இந்துக்கல்லூரியின் கலையரசி 2017 நிகழ்வில் எஞ்சிய பணத்தை (2000 கனடிய டாலர்களுக்கும் அதிகமான தொகை) யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சார்பில் புவனேந்திரன் திருநாவுக்கரசு நூலகம் நிறுவனத்துக்கு வழங்கினார். நூலகம் சார்பில் அருண்மொழிவர்மன் மற்றும் நக்கீரன் ஆகியோர் அப்பணத்தினைப் பெற்றுக்கொண்டனர். உண்மையில் யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தைப்பாராட்டத்தான் வேண்டும். இவ்விதமானதொரு தொகுப்பு நூலினை வெளியிட்டதற்கும், நூலக அமைப்புக்கு நிதி வழங்கியதற்கும்.
நூலின் பதிப்பாசிரியராகவிருப்பவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் ஆவார். பழைய பிரதிகளை வாசித்துத் தொகுப்பதில் அவர் எவ்வளவு சிரமங்களை அடைந்திருப்பார் என்பதை அறிய முடிகின்றது. அவரது பணியும் பாராட்டுதற்குரியது.