மகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம் என்பன ஐதீகங்களாக போற்றப்பட்டாலும், இவற்றில் வரும் பெண்பாத்திரங்களுக்கு கோயில்கள் அமைத்து வழிபடும் மரபும் தொன்றுதொட்டு நீடிக்கிறது. இந்தக்காவியங்களில் வரும் ஆண் பாத்திரங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். மகாபாரதத்தில் குந்தி முதல் பாஞ்சாலி வரையிலும், இராமாயணத்தில் சீதையும், சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள்தான். குந்தியைத்தவிர ஏனைய மூவரும் வழிபாட்டுக்குரியவர்களாகிவிட்டனர். இலங்கையில் திரெளபதை அம்மன், கண்ணகி அம்மன், சீதை அம்மன் கோயில்கள் அமைத்து சைவத்தமிழர்களும் பௌத்த சிங்களவர்களும் வழிபடும் மரபும் தொடர்ந்து பண்பாட்டுக்கோலமாகவே மாறிவிட்டதை காணமுடிகிறது. சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் மணிமேகலையும் மக்களிடத்தில் காவியமாகியிருக்கிறாள். மணிமேகலை தமிழ்க்காப்பியம் மட்டுமல்ல, அது பவுத்த காப்பியமும்தான் என்று நிறுவுகிறார் தமிழக எழுத்தாளர் பேராசிரியர் அ. மார்க்ஸ். ( ஆதாரம்: தீராநதி 2017 ஜூன்)
கண்ணகி வழிபாடு, திரௌபதை அம்மன் வழிபாடு என்பன கிழக்கிலங்கையில் மிகவும் முக்கியத்துவமாகியிருக்கின்றன. இராவணன் சீதையை கவர்ந்து வந்து அசோகவனத்தில் சிறைவைத்தமையால் அங்கு சிங்கள மக்களால் சீதாஎலிய என்னுமிடத்தில் சீதை அம்மனும், வடமேற்கு இலங்கையில் உடப்பு மற்றும் கிழக்கிலங்கை பாண்டிருப்பில் தமிழர்களினால் திரௌபதை அம்மனும், கன்னன் குடாவில் ஶ்ரீகண்ணகி அம்மனும் குடியிருக்கிறார்கள். பாரத நாட்டில் தோன்றிய காவிய மாந்தர்களில் குறிப்பாக பெண்களுக்காக இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் வழிபாட்டு மரபை தோற்றுவித்திருப்பதின் பின்னணி விரிவான ஆய்வுக்குரியது.
மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், கன்னன்குடா நோக்கி பயணமானோம். அப்பொழுது நண்பர் ‘செங்கதிரோன்’ கோபாலகிருஷ்ணன் எனக்குத்தந்த ‘கூடல்’ சிறப்பு மலர் பல தகவல்களைச் சொன்னது. இந்தப்பயணத்தில் நண்பர் பேராசிரியர் செ. யோகராசாவும் எம்முடன் இணைந்துகொண்டார். மட்டக்களப்பு வாவியைக்கடந்து படுவான்கரையை நோக்கி நண்பரின் கார் பயணித்தது. கன்னன்குடா ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தை வந்தடையும்போது இரவு பத்துமணியும் கடந்துவிட்டது. பக்தர்கள் நிறைந்திருந்தனர். பறவைக்காவடியில் சிலர் வந்தனர். அந்தக்காட்சி அங்கிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்கச்செய்திருக்கலாம். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அக்காட்சியை பார்த்து மனதிற்குள் வருந்தினேன். தம்மை வருத்தி இப்படியும் நேர்த்திக்கடனா..?
திரௌபதை அம்மன் கோயில் முன்றல்களில் தீமிதிப்பு. உடப்பு பிரதேசத்தில் அதனை பூமிதிப்பு என்பார்கள். இரண்டு நேர்த்திக்கடன்களுமே தம்மை வருத்திக்கொள்ளும் செயல்கள்தான். பெண்தெய்வங்கள் இப்படியும் ஆண்களை பழிவாங்குகின்றனவா…? சீதையை இராமன் தீக்குளிக்கவைத்தான். பாஞ்சாலியை துச்சாதனன் துகிலுரிந்தான். கண்ணகியின் கணவனை பாண்டியன் சிரச்சேதம் செய்வித்தான்.