முன்னுரை.
தமிழ் இலக்கிய மரபுகளுக்கெல்லாம் தனி சிறப்பாக இருப்பது அக மரபே ஆகும். அகத்திணையில் தோழிப்பாடல்களே அதிகம். சங்க காலம் கடந்து பிற்காலத்தில் தோன்றிய நந்திக்கலம்பகத்தில் தோழியின் நிலையை அறிவதே இக் கட்டுரையாகும்.
தோழி
தோழி என்ற சொல்லை தோழூூ இ எனப் பிரித்தால் ‘இ’ என்பது பெண்பால் விகுதியைக் குறிக்கின்றது. தோளோடு தோள் நின்று உழைத்தல், தோள் கொடுத்தல் என்பன உதவுதல் என்ற பொருளில் இருந்தே தோழி என்ற சொல்லானது தோன்றியது. இகுனை, பாங்கி, சிலதி, இணங்கி, துணைவி, சேடி, சகி போன்ற சிறப்பு பெயர்களால் தோழியினை அழைக்கின்றனர்.
தோழி இல்லையேல் காதல் இல்லை, அகப்பொருளும் இல்லை என்று சுட்டும் அளவிற்கு சிறப்பைப் பெற்றுள்ளாள். தலைவியும் தோழியும் ஒட்டிப்பிறந்த கவைமகவு போன்று ஒற்றுமையுள்ளவர்கள். களவு, கற்பு என்னும் இருகோள்களிலும் தோழி இணைந்தே காணப்படுவாள். சங்க இலக்கியங்களில் தலைவி பெறும் முக்கியத்துவத்தில் தோழி பங்கு மிகப் பெரியதாக உள்ளது. தலைவி வருந்தினால் அவளைத் தேற்றுவது அவளுக்காக நற்றாயிடமும் செவிலியிடமும் அதிகப்படியாக தலைவனிடமும் வருந்துவது தோழியே. தோழியின் பண்புகளுள் சிறந்ததாகப் போற்றப்படுவது அறத்தோடு நிற்றல். தமர் வரைவு காப்பு மிகும் போது, காதல் மிகுதியாலும் நொது மலர் வரைவின் போதும், தமர் வரைவு மறுத்தபோதும், செவிலி குறிபார்க்கும் இடத்திலும், வெறியாட்டிடத்திலும், பிறர் வரை வந்த வழியிலும், அவரது வரைவு மறுத்த வழியிலும் தலைவனுக்காக துணை நிற்பவள் தோழியே.
இவ்வாறு தலைவிக்கும், தலைவனுக்கும் அறத்தோடும், தன் மனநிலையில் இருந்து வேறுபடாமல் தோழி துணை நிற்கிறாள். சில இடங்களில் தலைவனை ஆற்றுப்படுத்தும் வகையிலும், நம்பிக்கை ஊட்டும் வகையிலும் கண்டித்தும் தலைவனை உரிய நேரத்தில் தலைவியை மணந்துக் கொள்ளுமாறும் தூண்டலாகவும் தோழி விளங்குகிறாள். இது சங்க மரபு இது நந்திக்கலம்பகத்திலும் தொடர்கிறது.
நந்திக்கலம்பகம்
தமிழ்மொழியில் தோன்றிய முதல்கலம்பக நூல் நந்திக்கலம்பகம். ஆரசர் மீது பாடப்பட்ட கலம்பக நூலுக்கு நந்தி கலம்பகம் ஒன்றே சான்றாக உள்ளது. இந்நூலை இயற்றிய புலவரின் வரலாறு கிடைக்கவில்லை. நந்திக்கலம்பகத்தின் பாட்டுடை தலைவன் பல்லவக்குலத்தை சார்ந்த மன்னன் நந்திவர்மன் ஆவான். இவனை முன்றாம் நந்தி வர்மன் என்றும் வரலாறுகள் கூறுகின்றன.