இன்று உலக மகளிர் தினம். ஆணும் பெண்ணும் சரிநிகர்சமானமாக வாழும் வாழ்க்கையும், அனைத்துத் தரப்பினருமே சரிநிகர்சமானமாக வாழும் வாழ்க்கையுமே சமூகப்பிரக்ஞை மிக்க மனிதர்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாக இருக்கமுடியும். அதேசமயம், எப்போதுமே சிலர் பாதிக்கப்பட்டவர்களாகவே தம்மை முன்னிறுத்திக்கொள்வார்கள். Playing the victim card. அதைச் செய்யும் ஆண்களும் உண்டு. அது எனக்குப் பிடிக்காத விஷயம். அதேபோல், மாற்றுத்திறனாளிகளையும், அவர்கள் பிரச்சினைகளையும் முன்னிலைப்படுத்தும் மக்கள் இயக்கங்கள், பெண்கள் இயக்கங்கள் குறைவு என்பதும் வருத்தத்திற்குரிய உண்மை.
THE AGE OF ABILITY என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் மார்ச் 5ஆம் தேதி பகிரப்பட்ட ஒரு காணொளி உரையை பதிவுகள் இணையதள ஆசிரியர் கிரிதரன் நவரத்தினம் முகநூலில் தன் டைம்-லைனில் பதிவேற்றியுள்ளார். NORA ZEMERA என்ற BHUTAN நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான, இளம்பெண்ணின்(பாகிஸ்தானிய தேசிய தொலைக் காட்சியில் நிகழ்ச்சித்தொகுப்பாளராக இயங்கிவரும் இவர் ஃபேஸ்புக்கிலும் இருக்கிறார் என்று நினைக் கிறேன்) இந்த உரையை மகளிர்தினமான இன்று என்னால் முடிந்த அளவு மொழிபெயர்த்து வெளியிடுவது அவசியம் என்று தோன்றியது. அத்தனை எழுச்சிமிக்க உரை இது. _ லதா ராமகிருஷ்ணன்
நீங்கள் என் இயலாமையைப் பார்க்கிறீர்கள். நான் என் திறமையைப் பார்க்கிறேன். நீங்கள் என்னை ஊனமுற்றோர் என்றழைக்கிறீர்கள். நான் என்னை மாற்றுத்திறனாளி என்று அழைக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நேரலாம். அவை உங்களை உடைந்துபோகச் செய்கின்றன; உருக்குலையச் செய்கின்றன. ஆனால், அவையே உங்களை உங்களுடைய ஆகச்சிறந்த பாங்கில் வார்த்தெடுக்கின்றன; வடிவமைக்கின்றன. என் வாழ்க்கையிலும் அப்படியொரு சம்பவம் நடந்தது. எனக்குப்பதினெட்டு வயதாகும்பொது என் திருமணம் நடந்தது. எனக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று என் தந்தை விரும்பினார். நான் அவரிடம் சொன்னதெல்லாம் இதுதான்: நான் திருமணம் செய்துகொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்குமானால் நான் அப்படியே ஆகட்டும்.”. அந்தத் திருமணம் ஒருபோதும் மகிழ்ச்சியானதாக இருந்ததில்லை.
திருமணமாகி இரண்டுவருடங்களே ஆகியிருந்தபோது நான் ஒரு கார் விபத்தில் சிக்கிக்கொண்டேன். எப்படியோ என் கணவர் தூங்கிவிட்டார். கார் ஒரு ஆழ்பள்ளத்தில் விழுந்துவிட்டது. அவர் எப்படியோ சமாளித்து காரிலிருந்து குதித்துத் தன்னைக் காப்பாற்றிக்கொண்டுவிட்டார். அவர் தப்பித்ததில் எனக்கு மகிழ்ச்சியே.
ஆனால், நான் காரிலேயே இருக்கும்படியாகியது. எனக்கு ஏராளமான காயங்கள் ஏற்பட்டன. நீண்ட பட்டியல் அது. கேட்டு பீதியடைந்துவிடாதீர்கள். மணிக்கட்டில் எலும்புமுறிவு, தோள்பட்டை எலும்பும், கழுத்துப்பட்டை எலும்பும் முறிந்துவிட்டன. என்னுடைய விலா எலும்புக்கூடு முழுவதுமாக நொறுங்கிவிட்டது.
இவ்வாறு இடுப்பு எலும்புக்கூடு முழுவதுமாக நொறுங்கிவிட்டதால் என் நுரையீரல்களும் கல்லீரலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. என்னால் மூச்சுவிட முடியவில்லை. சிறுநீரை அடக்கிக்கொண்டு உரிய நேரத்தில் வெளியேற்றும் கட்டுப்பாட்டை என் சிறுநீரகங்கள் அறவே இழந்துவிட்டன. முதுகுத் தண்டுவடத்தில் மூன்று எலும்புகள் முழுவதுமாக நொறுங்கிவிட்டன. அதன் விளைவாக நான் அதற்குப் பிறகான வாழ்க்கையில் இயங்கவே இயலாதவளானேன்.