சமூக ஊடகங்களில் வேண்டியதெல்லாம் ஒரு ‘பிம்பம்’ மட்டுமே; அதுவே பிறரைப் பெரிதும் கவர்கிறது. உள்ளடக்கத்தைவிட, உருவம்தான் அங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. சமூக ஊடகங்களில் பதியப்படும் இலக்கியங்கள் பொதுவாகப் பலரது கவனத்தைப் பெறுவதில்லை; பகிரப்படுவதில்லை; ஒருசில வரிகளுக்கப்பால் படிக்கப்படுவதுமில்லை. அரிதாகக் கிடைக்கும் விருப்புக் குறிகள்கூட (likes), பெரும்பாலும் படிக்கப்படாமலே கிடைக்கப்பெறுவன. எனவே, படிக்கப்படா இலக்கியங்களையும் இலக்கிய விமர்சனங்களையும் சமூக ஊடகங்களில் பதிவுசெய்து என்ன பயன்? அன்றாடம் அவற்றில் இடம்பெற்றுவரும் சுயபுராணங்களுடன், கடிபாடுகளும், கிசுகிசுக்களும், வசைகளும், வக்கிரங்களும் மட்டும்தானா இலக்கியம்? இந்நாளைய இலக்கியக்காரர் சிலரது மனக் கவலை, இது! ஒருவகையில், நியாயமான கவலையுங்கூட!
ஒத்த விருப்புக்களையும் பின்னணிகளையும் கொண்ட பாவனையாளர்கள் தம்மை இணைத்து, தமக்கிடையே பகிர்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கும் சமூக வலைத் தளங்களை சமூக ஊடகங்கள் என்பர். இன்னொரு வகையில் கூறுவதாயின், சமூக ஊடகங்கள் என்பன பாவனையாளர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களைத் தாங்கிவரும் இணையத் தளங்கள் எனலாம். மிகப் பிரபலமானவை என Facebook, Facebook Messenger, Instagram, WhatsApp, Google+, Myspace, LinkedIn, Pinterest, Snapchat, Tumblr, Twitter, Viber, VK, WeChat, Weibo, Baidu Tieba, Wikia போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள், தமிழ்மொழிப் பாவனையாளர்கள் பெருவிருப்புடன் ஊறித்திளைப்பது முகநூல் எனப்படும் Facebook ஆகும். இணைய இணைப்பினைக் கொண்ட ஒரு கணினியில், ஒருவர் தாம் விரும்பிய உள்ளடக்கங்களைத் தாமே உருவாக்கி, அவற்றை உலகுடன் பகிர்ந்துகொள்ளச் சமூக ஊடகங்கள் உதவுகின்றன. இவ்வூடகங்கள் பிறருடன் நெருக்கமான ஊடாட்டங்களை மேற்கொள்ளும் வாய்ப்பினை வழங்கக்கூடிய சாதனங்களாக இருப்பதனால்தான், பலரும் இவற்றைப் பெரிதும் விரும்புகின்றனர். இலக்கியப் பரப்பிலும் இவை கால் பதிக்கத் தவறவில்லை. படைப்பாளிகள் பலரும் தமது மூலப் படைப்புக்களை இப்போது சமூக ஊடகங்கள் வழியாகப் பகிர்ந்து கொள்கின்றனர். இது இலக்கியத்தின் பாரம்பரிய வடிவத்தில் மட்டுமன்றி, அதன் கருத்துருவாக்கத்திலும் கணிசமான மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது.
சமூக ஊடகங்களிலிருந்து இலக்கியப் படைப்புக்களைப் படிக்கும் வாசகர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் பல்கிப்பெருகி வருகின்றது. படைப்பாளிகள் வாசகர்களோடு உடனுக்குடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்த முடிவதால் கிடைக்கும் பலாபலன்கள் பெரிதும் சிலாகிக்கப்படுகின்றன. முன்னர் எப்போதுமில்லாத வகையில், தாம் வாசகர்களுக்கு மிகக் கிட்ட நெருங்கியிருப்பதாகப் படைப்பாளிகள் உணர்கின்றனர். வாசகர்களிடமிருந்து உடனுக்குடன் கிடைக்கும் காத்திரமான பின்னூட்டங்கள் தமக்கு உற்சாகமளிப்பதாகக் கூறுகின்றனர். அவை வாசகர்களின் நாடித் துடிப்பை உணர்ந்தறிய உதவுவதுடன், அவற்றிற்கேற்ப தமது படைப்புக்களை அவ்வப்போது இற்றைப்படுத்தி மாற்றியமைக்கவும், புத்தாக்கம் செய்யவும், செவ்விதாக்கம் செய்யவும், இதனால் தமது எழுத்தாற்றலை மென்மேலும் மேம்படுத்தவும் முடிவதாகக் குறிப்பிடுகின்றனர். இந்த நேரடித் தொடர்பாடலாலும் உறவாடலாலும் படைப்பாளிக்கும் வாசகர்களுக்கும் இடையே இருந்துவந்த பாரம்பரியத் தடைச்சுவர் தற்போது தகர்ந்துவிட்டதாகக் கருதும் இவர்கள், பாரிய செலவுகளேதுமின்றித் தமது படைப்புக்களை வாசகர்களுக்கு எடுத்துச் செல்லச் சமூக ஊடகங்கள் உதவுவதாகத் தெரிவிக்கின்றனர். காத்திரமான விமர்சனங்கள், கருத்தாடல்கள் என்பன ஊடாக, வாசகனும் படைப்பாளியும் கூட்டாக இணைந்து படைப்பின் தரத்தை மேம்படுத்த முடிகின்றது என்றும், ’நான் என்றிருப்பதைவிட நாம் என்றிருப்பது எப்போதும் ஒருபடி உயர்ந்ததுதானே’ என்றும் இவர்கள் கருதுகின்றனர்!