இன்று , மார்ச் 26, அம்மாவின் நினைவு நாள். நவரத்தினம் டீச்சர் என்று அன்புடன் அவரது மாணவர்களாலும், ‘மங்கை’ என்று அவரது சிநேகிதிகளாலும் அன்புடன் அழைக்கப்பட்ட அவரது நினைவு நாள் என் சிந்தையில் அவருடன் கழித்த நாள்களை நினைவு கூர்ந்திட வைக்கின்றது. யாழ் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி, வவுனியா மகா வித்தியாலயம், அராலி இந்துக்கல்லூரி என அவர் ஆசிரியராகப் பணிபுரிந்த பாடசாலை மாணவர்களைத் தன் அன்பால், சிரிப்பால், மென்மையான அணுகுமுறையினால் கட்டிவைத்தவர் அவர். வாழ்நாளில் ஆத்திரப்பட்டுப் பேசி நான் பார்த்ததில்லை. சில சமயங்களில் குரலில் சிறிது கண்டிப்பைக் காட்ட முற்பட்டாலும் கூட அக்கண்டிப்பை அவரால் வெளிப்படுத்தவே முடிந்ததில்லை.
என் பால்யபருவத்தில் ஆரம்பத்திலிருந்து ஏழாம் வகுப்புவரை வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்த காலகட்டத்து நினைவுகள் அழியாத கோலங்கள். அதிகாலையிலேயே எழுந்து, காலைச்சாப்பாடு, மதியச்சாப்பாடு எல்லாம் தயாரித்து, மதிய உணவையும் பார்சல்களாகக் கட்டி அல்லது ‘எவர்சில்வர்’ தூக்கு பாத்திரத்திலிட்டு பாடசாலை அழைத்துச் செல்வார். குழந்தைகள் நாமும் குருமண்காட்டிலிருந்து பாடசாலைக்கு அவரணைப்பில் பின் தொடர்வோம்.
அதிகாலை நேரங்களில் ஸ்டேசன் ‘றோட்டின்’ ஒரு புறத்தே பசிய வயல்கள் காட்சியளித்தன. பச்சைக் கிளிகள், குக்குறுபான்கள், ஆலாக்கள், மைனாக்கள், காடைகள், சிட்டுக் குருவிகள், மாம்பழத்திகள், நீண்ட வாற் கொண்டை விரிச்சான் குருவிகள், நீர்க்காகங்கள், மணிப்புறாக்கள்,.. எனப்பல்வகைப்புள்ளினங்களின் மலிந்திருக்கும் வனப்பிரதேசங்கள் ஆங்காங்கே காணப்பட்டன. இயற்கையின் தாலாட்டில் எந்நேரமும் தூங்கிக் கிடக்கும் வன்னி மண்ணின் அதிகாலப்பொழுதுகளை எண்ணியதும் கூடவே அம்மாவுடன் பாடசாலைக்குச் சென்ற பருவங்கள் படர்ந்த நினைவுகள் , அவருடன் வாழ்ந்த அனுபவங்கள் சிந்தையில் படம் விரிக்கின்றன.
அவரது உலகமெல்லாம் பாடசாலையும் , குடும்பமும்தாம். அவற்றிலேயே அவர் இன்பமுற்றார். செல்லும் வழியில் அன்று வவுனியா எம்.பி.ஆகவிருந்த தா.சிவசிதம்பரத்தின் வீடிருந்தது. அதற்குப் பக்கத்தில் ஸ்டேசன் ‘றோட்டி’ல் இராமச்சந்திரன் டீச்சர் வீடிருந்தது. அவர் ஒரு மொரிஸ் மைனர் கார் வைத்திருந்தார். சில சமயங்களில் அவருடன் அவர் காரில் பாடசாலை செல்வதுண்டு.
அவ்விதமாக அதிகாலைகளில் பாடசாலை நோக்கி ஸ்டேசன் வீதி வழியாகச் செல்லும் காலைப்பொழுதுகளில் எதிர்ப்புறமாக ஒருவர் மடித்துக் கட்டிய வேட்டியும், வெறும் தோளுமாக, வேப்பங்குச்சியால் பற்களை விளக்கியபடி வருவார். பார்த்தால் அசல் என்.எஸ்.கிருஷ்ணனைப்போலவே இருப்பார். அவரைப்பார்க்கும் நேரமெல்லாம் நான் அம்மாவிடம் ‘என்.எஸ்.கிருஷ்ணன் வாறார்’ என்று கூறுவேன். ஒருநாள் அம்மா அவரிடம் ‘இவர் உங்களைப்பார்க்க என்.எஸ்.கிருஷ்ணனைப்போல இருக்குதாம் என்று கூறுகிறான்’ என்று கூறி விட்டார். அதைக்கேட்டதும் பல்லை விளக்கியபடி வந்து கொண்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனின் ‘வாயெல்லாம் பல்’. 🙂 இப்பொழுதும் நினைவில் பசுமையாக நினைவிலுள்ளது.
அவர் அன்னையாகவும், வவுனியா மகா வித்தியாலயத்தில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் என் புவியியல் ஆசிரியராகவும் விளங்கியவர். . அவ்வப்போது குட்டிக் கதைகள் சிலவற்றையும் பாடத்தின் இடை நடுவில் கூறிச் சிரிக்க வைத்து, மாணவர்களை உற்சாகப்படுத்திப் பாடத்தைத் தொடர்வார்.