வாசிப்பும், யோசிப்பும் 334: அஞர், ஆரஞர் மற்றும் பேரஞர் பற்றிய புரிதல்!

ஆரஞர்அண்மையில் ‘டொராண்டோ’வில் நடைபெற்ற எழுத்தாளர் பா.அ.ஜயகரனின் சிறுகதைத்தொகுதியிலுரையாற்றிய முனைவர் மைதிலி தயாநிதி trauma  என்னும் ஆங்கிலச் சொல்லுக்குரிய சரியான சொல் தெரியவில்லை எனச் சபையினரைப்பார்த்துக் கேட்டபோது மேடையில் வீற்றிருந்த கவிஞர் சேரன் அவர்கள் அஞர் என்றார். அஞர் என்றதும்தான் நினைவுக்கு வருகின்றது சேரனின் அண்மையில் வெளியான கவிதைப்புத்தகத்தின் பெயரும் கூட அஞர் என்பதுதான். உண்மையில் முனைவர் சேரனின் கருத்துப்படி அஞர் என்பதற்கான அவரது விளக்கம் இணையத்தில் காணப்பட்ட குறிப்பொன்றிலுள்ளது (“முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு ஆற்ற ஒண்ணா அஞர்” – சேரன்). அக்குறிப்பிலுள்ள அவரது அஞர் பற்றிய விளக்கம் வருமாறு:

“பெருந்துயரம், ஆறாத காயம், ஆற்ற முடியாத மனவடு, உளவடு என்பவற்றைக் குறிக்கும் பழைய தமிழ்ச் சொல் அஞர். எடுத்துக்காட்டாக, ‘ஊங்கு (மிக்க) அஞர் நிலையே’ என நற்றிணையிலும் (30.10), ‘ஆர உண்டு பேரஞர் போக்கி’ எனப்பொருநராற்றுப்படையிலும்(88), ‘கோடா மரைப்பின் நடுங்கஞர்’ எனக் குறளிலும் இந்தச் சொல் பயின்று வருகிறது. Trauma என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சொல்லாக இதனைப் பயன்படுத்தலாம் என்பது என் எண்ணம்.”

இதன்படி அஞர் என்றால் “பெருந்துயரம், ஆறாத காயம், ஆற்ற முடியாத மனவடு, உளவடு.” உண்மையில் அஞர் என்றால் பெருந்துயரம் அல்ல; துயரம் என்பதே சரியாக எனக்குப்படுகின்றது. ‘ஊங்கு அஞர்’ என்னும்போது துயரம் பெருந்துயரமாகின்றது.  பெரிய அஞர் (பேரஞர்) என்னும்போது துயரம் பெருந்துயரமாகின்றது. நடுங்கஞர் என்னும் சொல்லிலும் நடுங்கும் என்னும் சொல்லுடன் அஞர் சேரும்போதே நடுங்கஞர் ஆகின்றது.

அண்மைக்காலத்து அகராதிகளில் அஞர் பற்றிய விளக்கங்கள் எதுவுமில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளியான அகராதிகளிலெல்லாம் அஞர் என்னும் சொல்லும் இடம் பெற்றுள்ளதை அவதானிக்கலாம். உதாரணத்துக்கு  ‘யாழ்ப்பாணம் மேலைப்புலோலி வித்துவான் அறிஞர் நா.கதிரவேற்பிள்ளை’யின் அகராதியைப்பார்த்தால் (சாரதா பதிப்பக வெளியீடு) அஞர் பற்றிய விளக்கம் இவ்வாறுள்ளது:  “அறிவிலார், துன்பம், வருத்தம்”

இதிலிருந்து அஞர் என்பது துன்பம், வருத்தம் என்னும் பொருளிலும், ‘அறிவிலார்’ என்னும் பொருளிலும் பாவிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. ஆனால் அஞர் என்னும் சொல்லுடன் ஊங்கு, பெரிய என்னும் சொற்கள் சேரும்போது மட்டுமே அஞர் ( துயரம் ) பெருந்துயரமாகின்றது. ஆனால் பெருந்துயரத்தை விபரிக்கவும் இன்னுமொரு பழந்தமிழ்ச்சொல்லுண்டு. அது அஞர் அல்ல ஆரஞர் (பெருந்துன்பம்).

சிலப்பதிகாரத்தில் தேவந்தி வரலாறு என்னும் பகுதியில் அச்சொல் காணப்படுகின்றது. சிலப்பதிகாரத்தில் வேறிடங்களிலும் இச்சொல் இருக்கலாம். இதுவே என் கண்களில் முதலில் பட்டது. சங்க இலக்கியங்களில் அஞர் தாராளமாகவே பல பாடல்களில் பாவிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.

Continue Reading →

காலமும் கணங்களும் தோழர் வி.பொன்னம்பலம் 25 ஆவது நினைவு தினம் மார்ச் 05 (1930-1994)

அமரர் வி.பொன்னம்பலம்

” பனைமரத்துப்பாளை எல்லாம் நில மட்டத்தில் வெளியாகியிருந்தால், சாதி பேசும் உயர்குடிமக்களும் கள்ளுச்சீவியிருப்பார்கள்”  இவ்வாறு சுவாரஸ்யமாகவும் கருத்தாழத்துடனும் பேசவல்ல ஒருவர் எம்மத்தியிலிருந்தார். சிறந்த பேச்சாளர் மொழிபெயர்ப்பாளர். கல்வித்துறையில் பலருக்கும் கலங்கரைவிளக்கமாக ஒளிதந்த ஆசான். கொள்கைப்பற்றாளர். பதவிகளுக்காக சோரம்போகாதவர். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவே மரணிக்கும்வரையில் குரல் கொடுத்தவர். மாற்றுக்கருத்துள்ளவர்களையும் அரவணைத்தவர்.  இவ்வாறு பல சிறப்பியல்புகளையும் கொண்டிருந்த ஆளுமையுள்ள தலைவர் தோழர் வி. பொன்னம்பலம் பற்றி தெரிந்திருப்பவர்கள் இன்றும் எம்மிடையே இருக்கிறார்கள். வடபுலத்தில் அளவெட்டி கிராமத்தில் 1930 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18 ஆம் திகதி வல்லிபுரம் – பொன்னம்மா தம்பதியரின் புதல்வராகப்பிறந்து, அனைவராலும் வி. பி. என அழைக்கப்பட்ட தோழர் வி. பொன்னம்பலம் அவர்கள்,  1985 ஆம் ஆண்டின் பிற்கூறில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தார். தனது அரசியல் ஆசானும் அதிபருமான ஒறேற்றர் சுப்பிரமணியம் அவர்களின் நினைவரங்க நிகழ்வில்  (1994 – மார்ச் 05 ஆம் திகதி) உரையாற்றும்வேளையில், “அனைவரிடமிருந்தும் விடைபெறுகின்றேன்” எனச்சொல்லி நிரந்தரமாக விடைபெற்றார்.

பல வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் நள்ளிரவு. உறக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். தொலைபேசி அழைப்பு வந்து திடுக்கிட்டு விழித்தேன். மறுமுனையில் கனடாவிலிருந்து மறைந்த தோழர் வி.பொன்னம்பலத்தின் மகன் நமுனகுலன். தோழர் வி.பி. யின் மறைவுச்செய்தி அறிந்து யார் மூலம் அனுதாபம் சொல்வது எனத்தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த எனக்கு, நமுனகுலனின் அழைப்பு சிலிர்ப்பைத்தந்தது. “அப்பாவின் நினைவாக ஒரு மலரைத்தயாரிக்கின்றோம். நீங்களும் ஒரு கட்டுரை தரவேண்டும்.” என்றார்.

தெணியானின் தம்பி நவம் எனது தொலைபேசி இலக்கம் தந்ததாகவும் சொன்னார். எனது கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்து கட்டுரை அனுப்புவதாகச் சொன்னேன். எங்கள் வீட்டுக்கு கணினி உறவினராகாத காலம். அதனால் மின்னஞ்சலும் இல்லை. மறுநாளே கட்டுரையை தபாலில் அனுப்பிவிட்டேன். மற்றுமொரு நாள் மாலைவேளையில் வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. சென்று பார்த்தேன். தபால்சேவகர் ஒரு பெரிய பார்சலை தந்துவிட்டுப்போனார். திறந்து பார்த்தேன். பொன் மலர் பிரதிகள். சுமார் ஐம்பது இருக்கும். புலம்பெயர் வாழ்வில் என்னை விந்தையில் ஆழ்த்திய சம்பவமாக அந்தப் பிரதிகள் தாமதமின்றி எனக்குக்கிட்டியதைக்குறிப்பிடலாம். பொதுவாக என்ன நடக்குமென்றால்!? என்னிடம் ஆக்கம் கேட்பார்கள். எழுதி அனுப்புவேன். கேட்டவர்களுக்குக் கிடைக்கும். பயன்படுத்துவார்கள். அதன் பிறகு பிரதி அனுப்ப மறந்துவிடுவார்கள். அல்லது பலதடவை தொடர்புகொண்டபின்னர் அனுப்புவார்கள். இதுவிடயத்தில் யாரும் யாரையும் குற்றம் சொல்லமுடியாது. காரணம் தபால்கட்டணம்தான். ஆனால், நமுனகுலன் இந்த விடயத்தில் என்னை ஏமாறச்செய்து ஒரு பிரதி அல்ல 50 பிரதிகள் அனுப்பி ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார்.

அவுஸ்திரேலியாவில் வதியும் வி.பி.யின் ஆதரவாளர்கள் , அவரது முன்னாள் மாணவர்கள் , அவரை நன்கு தெரிந்தவர்கள் சிலருக்கு அந்தப்பிரதிகளை விநியோகித்தேன். தோழருடன் நன்கு பழகிய அரசியல் தலைவர்கள் , கல்விமான்கள் , இலக்கியவாதிகள் பத்திரிகையாளர்கள் சமூகப்பணியாளர்கள் பலர் பொன்மலரில் எழுதியிருந்தனர். எண்பது கட்டுரைகள் அம்மலரில் வெளியாகியிருந்தன. தோழர் பொன்னம்பலத்தின் வாழ்வும் பணியும் ஊடாக வெளிப்பட்ட முன்னுதாரணமான அருங்குணங்கள் அவற்றில் பதிவாகியிருந்தன. மலருக்கு நயப்புரை எழுதி மெல்பன் தமிழ் வானொலி நிகழ்ச்சியொன்றுக்கு பொன்மலர் பிரதியுடன் அனுப்பிவைத்தேன். ஆனால்,  அந்த நயப்புரையை அந்த வானொலி ஒலிபரப்பிற்கு ஏற்கவில்லை. சம்பந்தப்பட்டவரை நேரில் சந்தித்துக்கேட்டபொழுது, அரசியல் சார்ந்த நூல்,  மலர் விமர்சனங்களை தங்கள் வானொலி ஒலிபரப்பாது என்று சொன்னார். எனக்கு அவரது பதில் திருப்தியளிக்கவில்லை. அவர் அன்றைய சூழ்நிலையின் கைதி என்பது மாத்திரம் புலனாகியது.

Continue Reading →

கவிதை: எப்போதோ அப்போது

- தம்பா (நோர்வே) -கடவுளை
எப்போதும் தேடியதுமில்லை
கடவுளை
எப்போதும் நிந்தித்ததுமில்லை.

எப்போது
சினகூகனுக்குள் புகுந்து
கத்தியால் குத்திக் கிழிக்கப்படுகிறதோ
அப்போது
நான் யூதனாக உணர்கிறேன்
எப்போது மசூதிகளுக்குள்
இயந்திர துப்பாக்கிகள் துவம்சம் செய்கிறதோ
அப்போது
நான் இசுலாமியனாக உணர்கிறேன்.
எப்போது
தேவாலயங்களின் மீது
விமான குண்டுகள் வீழ்கிறதோ
அப்போது
நான் கிறிஸ்த்தவனாக உணர்கிறேன்.
எப்போது
கோவில்களை பீரங்கிகள்
மிதித்து சிதிலங்களாக்குகிறதோ
அப்போது
நான் இந்துவாக உணர்கிறேன்.
எப்போது
விகாரைகளை தற்கொலை குண்டுகள்
அழித்து போடுகிறதோ
அப்போது
நான் பௌவுத்தனாக உணர்கிறேன்.

Continue Reading →

ஆய்வு: சென்ரியு கவிதைகளின் உள்ளடக்கங்கள்

ஆய்வு: சென்ரியு கவிதைகளின் உள்ளடக்கம்.மானுடத்தை அடிப்படையாக கொண்டு படைக்கப்படுவது சென்ரியு. ஹைக்கூவிலிருந்து தோற்றம் பெற்ற புதிய இலக்கிய வகையான சென்ரியு, ஹைக்கூவின் இயற்கை, ஜென்தத்துவம், உயர்ந்த நடை, குறிக்கோள் போன்ற கட்டுப்பாடுகளை துறந்து சுதந்திரமாக செயல்படும் போக்கினைக் கொண்டிருக்கின்றது. ஹைக்கூவும் சென்ரியுவும் மூன்றடிகளை உடைய கவிதைகளாக இருப்பினும் கருத்தளவில் இரண்டும் வெவ்வேறானவை. மானுடத்தினை நடைமுறையில் மனிதன் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டு வெளிப்படையாகப் படைக்கப்படுகின்ற சென்ரியுவின் இத்தகையத் தன்மையே பிற கவிதை இலக்கியங்களிலிருந்து சென்ரியு கவிதை வேறுபடக் காரணமாகின்றது. சென்ரியுவின் உள்ளடக்கங்களாக உண்மையை உரைத்தல், அங்கதம், நகைச்சுவை, வேடிக்கை, விடுகதை, பொன்மொழி ஆகியவற்றை இக்கட்டுரையின் வாயிலாக விரிவாக காணலாம்.

உண்மையை உரைத்தல்
சென்ரியு கவிதைகள் உண்மையினை வெளிப்படையாக உள்ளபடியே உரைத்திடும் கவிதை இலக்கியமாகும். மானுட நடத்தைகளை பாடுபொருளாகக் கொண்டு உண்மைத்தன்மையுடன் சென்ரியு படைக்கப்படுவதால் கற்பனை, வர்ணனை ஆகியவற்றிற்கு இடம் தராது கூறவந்த செய்தியை வெளிப்படையாக உண்மைத்தன்மையுடன் எடுத்துக்கூறும் தன்மைக் கொண்டது. இதனை, 

‘பேச்சாளரின் பேருரை
கேட்டுக்கொண்டே இருக்கலாம்
நல்ல உறக்கம் வரும் வரை ‘1

என்னும் கவிதை வரிகள் அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. இன்றைய காலக்கட்டத்தில் பேச்சாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நற்சிந்தனைகளுடன் மக்களை மகிழ்விக்கும் வகையில் பேசுவதில்லை என்பதனை இக்கவிதை வரிகள் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

Continue Reading →

ஆய்வு: தமிழ் இலக்கியச் செய்யுட்களைப் பாரதக்கதையோடு தொடர்புபடுத்தும் முறைமை

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -இவர் பாஞ்சால நாட்டரசன் யாகசேனனின் மகள் பாஞ்சாலி எனவும் குறிக்கப்படுவாள்; இவளைப் பஞ்ச கன்னியரில் ஒருத்தி என்றும் கூறுவர்; அகலிகை, திரெளபதி, சீதை, தாரை, மண்டோதரி என்பவர்கள் பஞ்ச கன்னியர்களாகக் கூறப்படுகிறார்கள். இவள் யாகசேனன் வளர்த்த வேள்வித் தீயினில் தோன்றியவள். இவள் முற்பிறப்பில் நளாயினி என்னும் பெயர் உடையவளாக இருந்து மெளத்கல்ய முனிவரைக் கணவராகப் பெற்றிருந்தாள். அவர் மெளத்கல்ய முனிவர் நளாயினியின் கற்புடைமையைச் சோதித்தறிய விருப்பம் கொண்டார். குட்ட வியாதி கொண்டவர் போல் நடந்தும் நளாயினியின் கற்புடைமையைக் கண்ட முனிவர் மனம் மகிழ்ந்து உனக்கு வேண்டியது என்ன? என்று கேட்க, அவள் நின் நீங்காத அன்பே வேண்டும் என்று கேட்டாள். நளாயினி இப்பிறப்பு முடிந்து இறந்தாள். பின் இந்திரசேனை என்னும் பெயருடன் மறு பிறப்பை அடைந்து மெளத்கல்ய முனிவரையே சார்ந்தாள். அவர் இல்வாழ்வைத் துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். எனவே, இந்திரைசேனையின் கருத்திற்கு இணங்காமல் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யும்படி கூறினார் சிவபெருமான். சிவபெருமான் இவள் முன் தோன்றி அருள் செய்தபோது, ‘எனக்குக் கணவனைத் தருவீராக’ என்று ஐந்து முறை வேண்டினாள். இவர் முற்பிறப்பில் இவள் தன் கணவனின் ஐந்து வடிவங்களோடு இன்பம் நுகர்ந்தமையைக் கருத்தில் கொண்டு அவ்வாறே ஆகுக என்றார்; சிவபெருமானால் பிலத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திரர்கள் ஐவரையும் பார்த்து ‘நீவிர் இந்திர சேனைக்குக் கணவர் ஆகுங்கள்’ என்றார். அவ்வாறே அந்த ஐவரும் நிலவுலகத்தில் பாண்டவர்களாகப் பிறந்து திரெளபதியைத் திருமணம் செய்தார்கள் என்று ஒரு புராதனக்கதை கூறப்படுகிறது. இக்கதை முற்பிறப்புடன் தொடர்புபடுத்திக் கூறப்படுவதாகும்.

யாகசேனன் நடத்திய சுயம்வரத்தில் அர்ச்சுனனால் வெற்றிபெற்றுக் கொண்டுவரப்பட்ட திரெளபதி குந்தியின் கட்டளைப்படி ஐவரையும் மணக்க வேண்டியவளானாள். அப்போது வியாசர் திரெளபதியின் முற்பிறப்பை யாகசேனனிடம் எடுத்துச்சொல்லி இத்திருமணத்தை நடத்துக என்றார். தெளமிய முனிவர் தருமனுக்கு முறைப்படி திருமணச்சடங்குகளை நடத்திப் பின் முறைப்படி மற்றைய நால்வருக்கும் திருமணம் நடந்தது. பாண்டவர்கள் செய்த இராசசூய வேள்விக்கு வந்திருந்த துரியோதனனை இவள் இகழ்ந்து நகைத்தற்காக அவன் சினங்கொண்டான். துரியோதனன் பாண்டவர்களைச் சூதாட்டத்திற்கு அழைத்து அவர்களின் நாடு நகரங்களை இழக்கச் செய்து அடிமைப்படுத்தினான். அவன் திரெளபதியைத் தன்தொடையின்மீது அமரச்சொல்லியும் தன்னைக் கணவராக ஏற்றுக்கொள்ளும்படியும் துன்புறுத்தினான். திரெளபதி மறுத்ததால், அவன் துச்சாதனனை ஏவி அவளது துகிலை உரியச் சொன்னான். கிருட்டிணன் அருள்பெற்றுத் துகில் வளரப்பெற்றாள். மறுபடியும் சூதாடி அடிமையிலிருந்து விடுபட்டுச் சபதங்கள் பல செய்து அவள் பாண்டவருடன் வனவாசம் சென்றாள்.

வனவாசத்தின் இறுதியாண்டில் மறைந்து வாழ்வதற்காக விராடநாட்டினைப் பாண்டவர்கள் அடைந்தனர். விராடன் மனைவி சுதேட்டிணைக்கு வண்ணமகளாக விரதசாரிணி என்ற பெயரில் திரெளபதி மறைந்து வாழ்ந்தாள். கீசகன் என்பவன் இவளை அடைய முற்பட்டபோது வீமன் (பீமன்) அவனை வதம்செய்து கொன்றான். பாண்டவர்கள் வெளிப்பட்டுத் தங்கள் உரிமைகளுக்காகப் பாரதப்போரில் ஈடுபட்டுத் துரியோதனனை அழித்தனர். அவன் அழிவிற்குப் பின்னரே தன்னுடைய அவிழ்ந்த கூந்தலைத் திரெளபதி முடிந்து கொண்டாள். திரெளபதிக்கும் பாண்டவர்களுக்கும் தோன்றிய குழந்தைகள் உபபாண்டவர்கள் எனக் குறிக்கப்பட்டனர். தருமனுக்குப் பிரதிவிந்தனும் பீமனுக்குச் சுருதசோமனும் அர்ச்சுனனுக்குச் சுருதகீர்த்தியும் நகுலனுக்குச் சதாநீகனும் சகாதேவனுக்கு சுருதசேனனும் பிறந்தனர். பாரதப்போரின் முடிவில் உபபாண்டவர்களைப் பாண்டவர்கள் எனத் தவறுதலாகக் கருதி அசுவத்தாமன் கொன்றான். திரெளபதியைத் திரெளபதியம்மன் என்ற பெயரில் கருநாடகத்திலும் தமிழ்நாட்டிலும் தெய்வமாக வணங் கப்படுகிறாள். கும்பகோணத்தில் உள்ள திரெளபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் சிலையும் அரவான் சிலையும் இருக்கின்றன. சில இடங்களில் விழாவின் போது தீமிதித்தல் முக்கிய நிகழ்ச்சியாக இடம்பெறுகிறது (பாலுசாமி, 2009: 607 – 608).

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 333: குயுக்தி கேள்வி -பதில் பகுதியை உருவாக்கியவர் யார்? எழுத்தாளர் அ.ந.கந்தசாமியா? பத்திரிகையாளர் எஸ்.டி.சிவநாயகமா?

அ.ந.ககுயுக்தி கேள்வி -பதில் பகுதியை உருவாக்கியவர் யார்? எழுத்தாளர் அ.ந.கந்தசாமியா? பத்திரிகையாளர் எஸ்.டி.சிவநாயகமா?  எனது அ.ந.க பற்றிய முகநூற் பதிவொன்று சம்பந்தமாகக் கருத்துத்தெரிவித்திருந்த எழுத்தாளர் வடகோவை வரதராஜன் அவர்கள் 'ஒரு சந்தேகம் .குயுக்தியார் எஸ் டி சிவநாயகம் இல்லையா ?' என்றொரு கேள்வி கேட்டிருந்தார்.குயுக்தி கேள்வி -பதில் பகுதியை உருவாக்கியவர் யார்? எழுத்தாளர் அ.ந.கந்தசாமியா? பத்திரிகையாளர் எஸ்.டி.சிவநாயகமா?

எனது அ.ந.க பற்றிய முகநூற் பதிவொன்று சம்பந்தமாகக் கருத்துத்தெரிவித்திருந்த எழுத்தாளர் வடகோவை வரதராஜன் அவர்கள் ‘ஒரு சந்தேகம் .குயுக்தியார் எஸ் டி சிவநாயகம் இல்லையா ?’ என்றொரு கேள்வி கேட்டிருந்தார்.

அக்டோபர் 1961 ‘மரகதம்’ சஞ்சிகையில் வெளியான, ராம்- ரஹீம் எழுதிய ‘ஒட்டிப்பிறவாத இரட்டையர் அ.ந.க – எஸ்.பொ’ என்னும் தலைப்பில் வெளியான கட்டுரையில் அ.ந.கந்தசாமியே குயுக்தியார் கேள்வி – பதில் பகுதியை உருவாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எஸ்.டி.சிவநாயகம் சுதந்திரனின் ஆசிரியராக இருந்த காலகட்டம் 1952 – 1961. ஆனால் அ.ந.க.வின் நானா வெளியான காலகட்டத்தில் (4-11-1951) ‘கேட்டுப்பாருங்கள் குயுக்தி’ என்னும் கேள்வி பதில் சுதந்திரனில் வெளியாகியுள்ளது.

இதிலிருந்து எஸ்.டி,சிவநாயகம் குயுக்தி கேள்வி-பதில் பகுதியை ஆரம்பித்திருக்கச் சாத்தியமில்லை. அவர் ஆசிரியராக விளங்கிய காலகட்டத்தில் அப்பகுதியைத் தொடர்ந்திருக்கவே சாத்தியமுண்டு. இதன்படி அ.ந.கந்தசாமியே குயுக்தி கேள்வி – பதில் பகுதியைச் சுதந்திரன் பத்திரிகையில் உருவாக்கியவராகயிருக்க வேண்டும்.

அ.ந.க சுதந்திரனிலிருந்த காலகட்டத்தில் கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல் மொழிபெயர்ப்பு , புத்தகவிமர்சனம் மற்றும் குயுக்தி பதில் எனப்பன்முகப் பங்களிப்பு செய்துள்ளார். அது பற்றி அ.ந.க.வின் சுதந்திரன் காலகட்டம் என்னும் தலைப்பிலான ஆய்வு செய்யப்படுவது முக்கியம்.  4.11.1951 சுதந்திரனில் வெளியான குயுக்தி பதில்களுக்கான மற்றும் மரகதம் சஞ்சிகையில் வெளியான கட்டுரைக்கான சான்றுகள் கீழே. இங்குள்ள சுதந்திரன் குயுக்தி கேள்வி-பதில் பகுதியில் வாசகர் ஒருவர் அ.ந.க.வின் நானா பற்றியும் கேள்வியொன்றினைக் கேட்டுள்ளதை அவதானியுங்கள்

Continue Reading →

காலங்கள் செய்யும் கோலங்கள்

முருகபூபதிதொழில் நுட்ப வளர்ச்சியினால் நன்மைகளும் தீமைகளும் ஏற்படுவதை அவதானித்துவருகின்றோம். கால மாற்றம் நமக்களித்த வரப்பிரசாதங்கள் அநேகம். அதேசமயம் அந்த வரப்பிரசாதங்களை புரிந்துகொள்ளமுடியாமலும் அனுபவிக்கமுடியாமல் திணறுபவர்களையும் அன்றாடம் காணமுடிகிறது. நான் வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் வெள்ளீய அச்சு எழுத்துக்கள் கோர்க்கப்பட்டு, பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுத்தான் பத்திரிகைகள் வெளியாகின. அச்சுக்கூடங்களும் கொம்பசிட்டர் என்ற அச்சுக்கோப்பாளர்ளை நம்பித்தான் இயங்கின. சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், எழுத்தாளர் விந்தன் ஆகியோர் தமது வாழ்வை அச்சுக்கூடத்தின் கொம்பசிட்டர்களாகத்தான் தொடங்கினார்கள். ஜெயகாந்தன் அச்சுக்கூடங்களில் ஒப்புநோக்காளராக (Proof Reader) இருந்தவர்.  

1988 இற்குப்பின்னர் வீரகேசரி அச்சுக்கூடத்தில் திடீரென்று எதிர்பாராத மாற்றங்கள் நேர்ந்து, பல அச்சுக்கோப்பாளர்கள் தொழிலை இழக்கநேரிட்டது. கணினியின் அறிமுகம் அவர்களை அங்கிருந்து அந்நியப்படுத்தியது. அச்சமயத்தில் நான் அவுஸ்திரேலியாவிலிருந்து அங்கு தொழிலை இழந்தவர்களுக்காக வருந்தினேன். அவர்களுக்கு தெரிந்த ஒரே தொழில் அச்சுக்கோர்ப்பதுதான். திடுதிப்பென அவர்கள் தொழிலை இழந்தபோது மிகவும் சிரமப்பட்டார்கள். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறதல்லவா? சிலர் வெளிநாடுகளுக்கு பறந்தனர். சிலர் வேறு தொழில்களுக்கு சென்றனர். சுமார் பதினொரு வருடங்களின் பின்னர் இலங்கை திரும்பி, குறிப்பிட்ட அச்சக்கோப்பாளர்களின் நிலையை ஆராய்ந்தேன். ஒருவர் எழுதும் ஆற்றலும் விளையாட்டுத்துறை பற்றிய தகவல்களும் தெரிந்தவராயிருந்தமையால், வீரகேசரி ஆசிரியபீடத்திலேயே விளையாட்டுத்துறை நிருபராகியிருந்தார்.

மற்றும் ஒருவருக்கு ஒளிப்படத்துறையில் அனுபவம் இருந்தமையால், தொடர்ந்து திருமணங்கள் மற்றும் பிறந்த தினக்கொண்டாட்டங்களுக்குச்சென்று படம்பிடித்து வாழ்க்கையை ஓட்டினார். பின்னாளில் சொந்தமாகவே ஒரு ஸ்ரூடியோவை அமைத்துக்கொண்டதுடன், வீடியோ தொழில் நுட்பத்திலும் தேர்ச்சிபெற்றார். அத்துடன் நில்லாமல், தனது மகளை கணினி தொழில் நுட்ப பயிற்சிகளுக்கு அனுப்பி, தேர்ந்த பக்க வடிவமைப்பாளராக்கிவிட்டார். அந்த யுவதி கொழும்பில் ஒரு பிரபல அச்சகத்தில் தனது பணியை மிகவும் சிறப்பாக தொடருகின்றார். பல எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் இதழ்களையும் அழகாக வடிவமைக்கின்றார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 332: ‘ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்’ என்னும் அனோஜன் பாலகிருஷ்ணனின் கட்டுரை பற்றி…

அனோஜன் பாலகிருஷ்ணன்‘ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்’ என்னுமொரு கட்டுரையை அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதியிருக்கின்றார் (https://www.jeyamohan.in/119092… ) அதனை எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைப்பதிவில் மறுபிரசுரம் செய்து தட்டிக்கொடுத்திருக்கின்றார். இளம் எழுத்தாளரைத் தட்டிக்கொடுத்து ஆதரிப்பது நல்ல விடயமே. அக்கட்டுரையின் ஆரம்பத்தில் அவர் எழுதிய பின்வரும் கருத்துகளைக் கவனியுங்கள்:

“தனிப்பட்ட வாழ்கையில் அலைக்கழிப்பும் துயரம் நிறைந்த அனுபவமும் இருந்தால் நல்ல இலக்கியம் பிறக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. டால்ஸ்டாய், ஜெயமோகன்,ஷோபாசக்தி, மிலன் குந்தேரா, ஹனீப் குரேஷி வரை அதற்கான முன்னோடிகள் இருக்கிறார்கள்தான்.”

ஷோபாசக்தி, ஜெயமோகன் ஆகியோர் தமிழ் இலக்கிய உலகில் முக்கிய படைப்பாளிகள். ஆனால் அவர்களை டால்ஸ்டாயுடன் ஒரே தட்டில் வைத்து ஒப்பிட முடியுமா? சிறிது அதிகமாகத்தெரியவில்லையா?

இலக்கியமென்பது அலைக்கழிப்பு உள்ளவர்களாலும் . அவ்விதமில்லாதவர்களாலும் படைக்க முடியும். அவர்களை வரிசைப்படுத்துகையில் அவர்களது படைப்புகளின் சிறப்பின் அடிப்படையில் குறிப்பிடுவதே சிறந்தது. வெகுசனப்பத்திரிகையில் பல்வேறு வாழ்க்கைப்போராட்டங்களில் சிக்கி,உழைப்புக்காக மர்மக்கதைகள்படைக்கும் எழுத்தாளர் ஒருவரையும் டால்ஸ்டாய்க்குப் பக்கத்தில் வைத்து இவ்விதமான கூற்றின் அடிப்படையில் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?

தனிப்பட்ட வாழ்க்கையில் அலைகழிப்பும் துயரமும் நிறைந்த அனுபவமும் இருந்தால் நல்ல இலக்கியம் பிறக்கும் என்பதை மட்டும் காரணமாக வைத்து இவ்விதமாக ஒப்பிட முடியுமா? இதனை வாசிக்கும் ஒருவருக்குக் கட்டுரையாளர் இந்த ஒரு விடயத்துக்காக மட்டும் இவ்விதமொரு வரிசையைச் சுட்டிக்காட்டுகின்றார் என்பது புலப்படாது. டால்ஸ்டாய் என்னும் படைப்பாளியின் படைப்புகளூக்கு ஈடாக ஏனைய படைப்பாளிகளும் ஒப்பிடப்பட்டிருக்கின்றார்கள் என்றுதான் புலப்படும்.

Continue Reading →

வாடிக்கையாகிவிட்ட பாலியல் வன்முறை – வெட்கக்கேடு!

வாடிக்கையாகிவிட்ட பாலியல் வன்முறை – வெட்கக்கேடு!பொள்ளாச்சியில் பல வருடங்களாக நடந்துவந்திருப்பதாகத் தற்போது அம்பலமாகியிருக்கும் பாலியல் வன்முறைச் செய்தி அளிக்கும் அதிர்ச்சியும், ஆதங்க மும் சொல்லுக்கப்பாலானவை. நாளும் நாளிதழ்களில் 4 வயதுப் பெண்குழந்தை முதல் பல்வேறு வயதுகளிலான பெண்கள் இவ்வாறு வன்முறைக்கு ஆளாகும் செய்திகளைப் படிக்கவேண்டியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு கடலூர் பக்கத்தில் கல்லூரிகளுக்குப் புதிதாகச் சேரும் மாணவிகளை அந்தக் கல்லூரிகளின் சீனியர் மாணவிகளைக் கொண்டே சினிமா, ஹோட்டல் என்று சுதந்திர வாழ்க்கையை அறிமுகப்படுத்துவதாய் பொறியில் சிக்கவைத்து, சிகரெட், போதைமருந்து போன்ற பழக்கங்களுக்கு உட்படுத்தி, பின், விபச்சாரத்தில் தள்ளிவிடும் நாசகார கும்பலொன்று பற்றிய செய்தி வந்தது. ஆனால், இத்தகைய செய்தி வெளிவந்தால் கல்லூரியின் பெயர் கெட்டுவிடும் என்று இத்தகைய செய்திகளை மறுப்பதும், முடக்குவதுமே பெரும்பாலான கல்லூரி நிர்வாகங்களின் அணுகுமுறை யாக இருந்தது; இருந்துவருகிறது. கல்லூரிகளில் இத்தகைய சமூகச் சீர்கேடுகளிருந்து மாணாக்கர்களைப் பாதுகாக்க ஏதேனும் விழிப்புணர்வூட்டல் சார் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா தெரியவில்லை. படித்த பெண்கள், படிக்காத பெண்கள் என்று எல்லோரும் பாதிப்புக்காளாகும் இத்தகைய அக்கிரமங்களை அனைத்து ஒலி-ஒளி ஊடகங்களும் தங்கள் அரசியல் பிறவேறு சார்புகளுக்கு அப்பால் தோலுரித்துக்காட்டுவது அவசியம். அதேசமயம், ஒவ்வொரு சேனலும் தங்கள் செய்தி சேனலில் பெண்விடுதலையைப் போற்றிக் கொண்டே தங்கள் எண்டர்டெயின்மெண்ட் சேனலில் மிக மிகப் பிற்போக்கான பெண் பிம்பங்களை சீரியல்களிலும், விளம்பரங்களிலும் முன்வைத்துக்கொண்டேயிருப்பது தடுக்கப்படவேண்டும்.

இணையதளங்களில் இன்று 10 செகண்ட் போர்னோ படங்களுக்கு இருக்கும் வரவேற்பும், அதற்கான காணொளிகள் எப்படியெப்படியெல்லாம் தயாரிக்கப் படுகின்றன என்பதும் அதிர்ச்சியூட்டுகிறது. இந்தவிதமாய் பணம் ஈட்டுவதற்காகவே அப்பாவிச் சிறுமிகள், அநாதரவான பெண்களை – பரிச்சயமானவர்கள், உறவுக் காரர்கள் என பலதரப்பினரும் ஏமாற்றுவதும், அச்சுறுத்துவதும் நடக்கிறது என்பதை செய்தித்தாள்களில் நாளும் வரும் இத்தகைய தகவல்கள் புலப்படுத்துகின்றன. முன்பெல்லாம் காதலித்து ஏமாற்றுவது என்றால் கல்யாணம் செய்துகொள்ளாமல் போய்விடுவது என்பதாக மட்டுமே இருந்தது. இப்பொழுது காதல் என்ற பெயரில் வேறு என்னவெல்லாமோ நடக்கிறது. இது குறித்த sensitization வளரிளம்பருவத்தினருக்குக் கிடைக்க பள்ளி, கல்லூரி, சமூகவெளிகளில் வழிவகை செய்யப்படுகிறதா என்று தெரியவில்லை.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 331: அஞ்சலி; அறிவுலகை ஆட்டி வைத்த அறிஞர்கள் மூவர்! நினைவு கூர்வோம்!;வவுனியா விக்கியின் மின்னஞ்சலொன்று!;சிங்கள விமர்சனம்!

அஞ்சலிஅண்மையில்  நியூசீலாந்தில் இரு மசூதிகளில் தொழுகைகளில் ஈடுபட்டிருந்த அப்பாவிப் பொதுமக்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொன்றதுடன், அதனை இணையத்தில் நேரடி ஒளிபரப்பும் செய்திருக்கின்றான் நிறவெறி பிடித்த ஆஸ்திரேலிய வெறியனொருவன். எல்லா மதங்களிலும், மொழிகளிலும், இனங்களிலும் வெறியர்களிருக்கின்றார்கள். அதற்காக அவ்வெறியர்களின் இன, மத மற்றும் மொழி மக்களை ஒட்டுமொத்தமாகக் குற்றஞ்சாட்டுவதா? அதுதான் முஸ்லிம் மக்கள் விடயத்தில் நடந்துள்ளது. இவ்விதமான தொடுக்கப்படும் வன்முறைகள் கண்டு அஞ்சி விடாமல், தலை நிமிர்ந்து தம் நம்பிக்கைகளின் வழி பெருமையுடன் தொடர்ந்து பயணிப்பதே இவ்வெறியர்களுக்குக் கொடுக்கப்படும் தகுந்த பதிலடியாகும்.

இன்றைய தாக்குதல்களில் பலியாகிய மற்றும் காயமடைந்த முஸ்லிம் மக்கள அனைவருக்கும் எமது அஞ்சலி! அவர்களையிழந்து வாடும் உற்றார், உறவினர்கள் & நண்பர்கள் அனைவருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்.


முகநூலும், எழுத்தாளர்களும்!

பொதுவாக தமிழ் இலக்கிய உலகிலுள்ள வளர்ந்த, இளம் எழுத்தாளர்களின் நிலை அல்லது செயற்பாடுகள் ஒருவரையொருவர் அங்கீகரிப்பதும், தூக்கி விடுவதுமாகவிருக்கும். இதனை நாம் ‘முதுகு சொறிதல்’ என்போம் . 🙂 இவ்விதமான அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்கள் என்பவர்கள் பலருடன் உரையாடுகையில் அல்லது இவர்களது நேர்காணல்களில் முகநூல் பற்றிய பதிலொன்று பெரும்பாலும் ஒரே கருத்துள்ளதாக அமைந்திருப்பதைக் காண்கின்றேன். அவர்கள் கூறுவார்கள்: ‘முகநூலா நான் அப்பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை. அது வெட்டிப்பேச்சு பேசுபவர்களின் இடம். அங்கு இலக்கியம் படைக்க முடியாது.’

முகநூல் மேய்தல்

இவர்கள்  ஏன் முகநூலைக் கண்டு பயப்படுகின்றார்கள்? அடிப்படைக்காரணம்: அச்சூடகங்களில் இவர்கள் எழுதும் எதற்கும் இவர்களுக்கெதிரான எதிர்வினைகள் உடனடியாக வெளியாவதில்லை. வெளிவருகையிலும் எல்லாம் வெளியாவதில்லை. தணிக்கைக்குள்ளாகியே வெளியாவதுண்டு. எனவே இவர்களது கூற்றுகளுக்கு, நிலைப்பாடுகளுக்கு எதிரான எதிர்வினைகள் அதிகம் வெளிவராத நிலையில் இவர்களது இடம் தக்க வைத்துக்கொள்ளப்படுகின்றது. ஆனால் முகநூலில் இதற்கான சாத்தியங்களில்லை. இவர்களது படைப்புகளுக்கு, அல்லது கூற்றுகளுக்கான எதிர்வினைகள் உடனடியாகவே பதியப்படுகின்றன. ஆதரவான, எதிரான எதிர்வினைகள் அனைத்துமே உடனடியாகவே  முகநூலில் புரியப்படுகின்றன. ஒருவேளை அவற்றின் காரம் காரணமாக அப்படியானவர்களைத் தடை செய்தாலும், அவ்விதம் எதிர்வினை புரிபவர்கள் தம் எதிர்வினைகளைத் தம் பக்கத்தில் தொடர்வார்கள். ஆக ஒருபோதுமே உடனடியாக எழும் எதிர்வினைகளைத் தடுப்பதென்பது சாத்தியமிலை. இதனால்தான் இதுவரை அச்சூடகங்களில் முடி சூடா மன்னர்களாகக் கோலோச்சிக்கொண்டிருந்தவர்களுக்குத் தம் ஆட்சியினை ஆட்டங்காண வைத்து விடுகின்றது முகநூல் என்பதால்தான் முகநூல் பக்கமே வர நடுங்குகின்றார்கள். இலக்கிய உலகில் ஆஸ்தானப் படைப்பாளிகளாகத் தொடர்வதற்கு, எவ்விதக் கேள்விகளுமற்றுத் தொடர்வதற்கு முகநூல் தடையாக இருக்கின்றது என்பதால்தான் இவர்களுக்கு முகநூல் வேப்பங்காயாகக் கசக்கின்றது. ஒன்றைக் கவனிக்கவேண்டும்.

Continue Reading →