– எழுத்தாளர் கோமகனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் இணைய இதழ் ‘நடு’. இம்மாத ‘நடு’ இதழில் கவிஞர் திருமாவளவனைப்பற்றிய எனது நனவிடை தோய்தற் கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரை கீழே. –
எழுத்தாளர் திருமாவளவனை நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது அவரது உள்ளத்தைக் கவரும் புன்னகையுடன் கூடிய முகம். கனடாவில் அவ்வப்போது கலை, இலக்கிய நிகழ்வுகளில் சந்திக்கும்போது என்னுடன் கலை, இலக்கியம் பற்றி உரையாடும் மிகச்சிலரில் எழுத்தாளர் திருமாவளவனும் ஒருவர். சில சமயங்களில் நான் அவரது கவிதைகள் சிலவற்றை விமர்சிக்கையில், அவற்றை ஒருவித புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டு தன் பதிற் கருத்தினை முன் வைக்கும் அவரது பாங்கு என்னைக் கவர்ந்ததொன்று. அவரைப்பற்றி எண்ணியதுமே அவருடன் சந்தித்த, உரையாடிய காட்சிகள் விரிகின்றன. அவரது எழுத்துகள் குறிப்பாகக் கவிதைகள் பற்றிய எண்ணங்கள் சிறகடிக்கின்றன.
புகலிடத் தமிழ்க்கவிஞர்களில் திருமாவளவன் முக்கியமானவர் மட்டுமல்லர் தனித்துவமானவரும் கூட. பொதுவாக நாடறிந்த கவிஞர்களெல்லாரும் அரச அடக்குமுறைகளைப்பற்றி, அரச மனித உரிமை மீறல்களைப்பற்றியே தம் கவனத்தைத்திருப்பியிருந்த சமயம், சிலர் மதில் மேற் பூனைகளாக உருமாறியிருந்த சமயம், அக்காலகட்டத்தில் அரச மனித உரிமை மீறல்களுக்கெதிராகத் தன் குரலை உயர்த்தி முன் வைத்த அதே சமயம் , விடுதலைப்புலிகளையும் துணிந்து விமர்சனத்துக்குள்ளாக்கியவர் அவர். விடுதலைப்போராட்டத்தில் அரச அடக்குமுறைகளுக்கெதிராக மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமென்று ஏனையவர்களெல்லாரும் அடக்கி வாசித்துக்கொண்டிருக்கையில் , திருமாவளவனின் குரல் தனித்தொலிக்கின்றது. அதுவே அவரது கவிதைகள் ஏனையவர்களின் கவிதைகளிலிருந்து வேறுபடுவதற்கு முக்கிய காரணம்.
திருமாவளவனின் கவிதைகள் இழந்த மண்ணைப்பற்றிய கழிவிரக்கத்தை வெளிப்படுத்துவன. இலங்கை அரசின் கொடிய அடக்குமுறைகளுக்கெதிரான எதிர்க்குரலாக ஒலித்தன. புகலிடத் தமிழர்களின் சமூக, பொருளியல் நெருக்கடிகளைப்பேசின. அதே சமயம் அக்காலகட்டத்தில் தேசிய விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தின. ஏனைய கவிஞர்கள் பலரிடமிருந்து கவிஞர் திருமாவளவன் வேறுபடும் இரண்டு முக்கிய விடயங்களாக அவரது விடுதலைப்புலிகளின் குழந்தைப்போராளிகள் பற்றிய கடும் விமர்சனத்தையும், புகலிடத்தமிழர்களின் நெருக்கடி மிகுந்த வாழ்வினை வெளிப்படுத்தும் போக்கினையும் குறிப்பிடலாம். உதாரணத்துக்குத் திருமாவளவனின் ‘நச்சுக்கொடி’ மற்றும் ‘ஷத்திரியம்’ ஆகிய இரு கவிதைகளையும் சிறிது நோக்குவோம்.
‘நச்சுக்கொடி’
“அழு பெண்ணே அழு.
உன் ஒப்பாரியில்
ஏழு கடல்தாண்டி
எழுகிறது
என் செவியில்.”
“கண்மூடி விழிக்கு முன்னெழுந்த
கணப்பொழுதுள்
களத்தில் பாய்ந்து
வெடித்துச் சிதறி
காற்றில் கலந்து விட்டான்
உன் பாலன்.
கட்டிப்புரண்டு
கதறி அழுகின்றாய்
நீ