( வெட்ட வெட்ட தழைக்கும் வாழை மரம் போன்று காலத்துக்குக் காலம் சோதனைகள் – வேதனைகளைச் சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் புத்துயிர்ப்புடன் மலர்ந்துகொண்டிருப்பதுதான் யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகை. இலங்கையில் அதிபர் தேர்தல் அமளிகளுக்கு மத்தியில் யாழ். ஈழநாடு பிரைவேட் லிமிட்டட் நிறுவன இயக்குநரும் டான் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவருமான மூத்த ஊடகவியலாளர் எஸ். எஸ். குகநாதன், இந்த வாரம் யாழ். ஈழநாடு வார இதழை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுள்ளார். லண்டன் நாழிகை இதழ் ஆசிரியர் மாலி மகாலிங்கசிவம், அதிபர் தேர்தல் வேட்பாளர் சிவாஜிலிங்கம், ஈழநாடு ஸ்தாபக இயக்குநர் டொக்டர் சண்முகரட்ணத்தின் புதல்வர் எஸ். ரட்ணராஜன் ஆகியோருட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். முருகபூபதி எழுதி, அண்மையில் வெளியான இலங்கையில் பாரதி என்னும் ஆய்வு நூலில், முன்னைய ஈழநாடு குறித்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரை இங்கு பதிவாகின்றது. )
” கே.சி.தங்கராஜா, கே.சி.சண்முகரத்தினம் ஆகிய இரு சகோதரர்களின் உள்ளத்தில் முகிழ்த்த பிராந்தியப் பத்திரிகை ஒன்றின் உருவாக்கத்துக்கான சிந்தனை 1958 இல் யாழ்ப்பாணத்தில், கலாநிலையம் என்ற பதிப்பகமாக வித்தூன்றப்பட்டு, 1959 பெப்ரவரியில் முளைவிட்டு வாரம் இருமுறையாக “ஈழநாடு” என்ற பெயரில் வெளிவரத் தொடங்கி, நாளும் பொழுதும் உரம்பெற்று வளர்ந்து, ஈற்றில் 1961இல் முதலாவது பிராந்தியத் தமிழ்த் தினசரியாக சிலிர்த்து நிமிர்ந்தது. அன்று தொட்டு இறுதியில் யாழ் மண்ணில் தன் மூச்சை நிறுத்திக்கொள்ளும் வரை அதன் இயங்கலுக்கான போராட்டம் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததாகவே நகர்ந்துவந்துள்ளது. ஜுன் 1981இல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தையும், பூபாலசிங்கம் புத்தகசாலையையும் கொழுத்திய பேரினவாதத்தின் கண்களுக்கு ஈழநாடு காரியாலயமும் தப்பிவிடவில்லை. அதன் பின்னர் ஈழப் போராளிகளின் குண்டுத் தாக்குதலுக்கும் இலக்காகி, 1988 பெப்ரவரியில் தன்னைக் காயப்படுத்திக் கொண்டது. பின்னர் தொடர்ச்சியான பத்திரிகைச் செய்தித் தணிக்கைகள், அச்சுறுத்தல்கள், பொருளாதார நெருக்கடிகள் என்று சுற்றிச் சூழ்ந்த நிலையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.” இவ்வாறு யாழ்ப்பாணத்தில் ஈழகேசரியின் மறைவிற்குப்பின்னர் உதயமாகிய ஈழநாடு பத்திரிகையின் தோற்றத்தையும் அஸ்தமனத்தையும் லண்டனில் வதியும் நூலகர் நடராஜா செல்வராஜா ” ஈழநாடு என்றதோர் ஆலமரம்” என்னும் கட்டுரையில் உணர்வுபூர்வமாகவும் அறிவார்ந்த தளத்திலும் பதிவுசெய்துள்ளார்.