எனக்கு நல்லா நினைவிருக்கு….., இருவத்தஞ்சு வரியமாகுது…. தைப்பொங்கல் கழிஞ்சு மற்றநாள் மாட்டுப்பொங்கல் அண்டைக்குத்தான் எங்கடை அன்னக்குட்டியும் பிறந்தது.
“அன்னக்குட்டி…….”
ஓமோம்…. நான் அப்படித்தான் கூப்பிடுவேன்.
அன்னக்குட்டியிலையிருந்து நான் பத்து வயது மூப்பு. என்னோடை கூடப்பிறந்த பொம்பிளைபிள்ளையள் ஒருத்தரும் இல்லையே எண்டதாலையும் , அது என்ரை அம்மம்மா யாழ்ப்பாணத்திலையிருந்து ஆசையாய் வாங்கி அனுப்பிவிட்ட மாட்டின்ரை முதல் பசுக்கண்டு எண்டதாலையும், அன்னலச்சுமி எண்ட அவ பேரை வைச்சோம். என்னைப் பொறுத்தமட்டிலை, அன்னக்குட்டி எங்கடை குடும்பத்திலை ஒருத்தி. என்ரை தங்கச்சி…..!
“அன்னக்குட்டி ….. அண்ணை பள்ளிக்குடம் போட்டு வாறன்…. நீ அம்மாட்டை பால்குடிச்சிட்டு நல்லபிள்ளையா பேசாமல் இருக்கவேணும் தெரியுமோ….. துள்ளிப்பாஞ்சு விளையாடுறோமே எண்டு நினைச்சுக்கொண்டு கிணத்தடிப்பக்கம் போவுடாதை…. சரியோ…. கிணத்துக்கை ஒரு கிழவன் இருக்குது…. உன்னைப் பிடிச்சுப்போடும்….”
பள்ளிக்குடம் போகத் துவங்கிறத்துக்கு முதலெல்லாம், என்ரை அம்மாவும் இப்பிடித்தான் என்னட்டையும் அடிக்கடி சொல்லிச் சொல்லி வெருட்டிறவ….
நானும் அதுமாதிரிச் சொல்லிக்கில்லி வெருட்டி வைக்காட்டா, உது சும்மா கிடக்காது கண்டியளோ….
பள்ளிக்கூடத்தில இருக்கையுக்கையும் அன்னக்குட்டியின்ரை நினைவுதான்…..
வீட்டுக்கு வந்தாலும், நேரா கொட்டிலுக்குப் போய், பத்து நிமிசமாவது அன்னக்குட்டியோடை கதைச்சுப்போட்டுப் போனாத்தான் எனக்குப் பத்தியப்படும்….