‘தொன்மைமிகு தெட்சண கைலாய திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெறும் கட்டுமானப் பணிகளுக்கு தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தினால் தடை’ எனப் பொருள்படும் செய்திகள் 18.12.2015ஆம் திகதியன்றும் அதன் பின்னரும் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, தங்கள் கவலையை வெளிப்படுத்திய எண்ணற்ற மக்களுக்கு, கோணேஸ்வரம் கட்டுமானப் பணிகள் சார்ந்த உண்மைகளைக் கூறவேண்டிய கடப்பாடு காரணமாக இந்த அறிக்கையை ஊடகங்கள் வாயிலாக சமர்ப்பிக்கிறோம்.
கோணேசர் ஆலயத்தின் நிர்வாகத்தை சீராக்க வேண்டி திருகோணமலை மக்கள் சட்ட ரீதியாக எடுத்துக்கொண்ட அயராத முயற்சியினால், உயர்நீதிமன்ற நீதிபதி, மாவட்ட நீதிபதி ஆகியோரால் நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில், நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக நாம் தெரிவு செய்யப்பட்டு, 17.01.2010ஆம் திகதியன்று ஆலய நிர்வாகத்தினை பொறுப்பேற்றுக் கொண்டோம்.
ஆன்மீகத் தேடலுக்குரிய அதிர்வு பூரணமாய் அமையப்பெற்றது இப்புனிதத் தலம். இந்துக்களின் புண்ணிய பூமி. பல்லின மக்களும் பயபக்தியுடன் சேவிக்கிற சேத்திரம். எம்மை நம்பி தெரிவு செய்த மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளுக்கு உண்மையாய் இருப்பதும், நன்நெறியும் தூய்மையும் நேர்மையுமிக்க நிர்வாகக் கட்டமைப்பினை உருவாக்கி தொன்மைமிகு ஆலயத்தின் இருப்பினைக் கட்டிக்காத்து அடுத்த தலைமுறையினரிடம் முறையாகக் கையளிப்பதும் எமது தலையாய கடமை என்பதை உணர்ந்து செயலாற்றத் தொடங்கினோம்.
நாம் பொறுப்பேற்றுக் கொண்ட போது “நாட்டில் நிலவிய அரசியல் சூழ்நிலை, 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஆலய பிரதேசத்தை புனித நகராக்கக் கோரிய எமது மக்களின் வேண்டுகோளை அரசு நிராகரித்த வரலாறு, பிரட்றிக் கோட்டையில் பாதுகாப்புப் படையினரின் பிரசன்னம், ஆலயத்தின் தூய்மையை பாதிக்கும் வகையில் அண்மித்த வழித்தடத்தில் அமைக்கப்பட்ட ஐம்பதிற்கும் அதிகமான தற்காலிக் கடைகள்” போன்ற நிதர்சனங்களை கருத்தில் வைத்துக் கொண்டு, எமது ஆலய திருப்பணிகளை மிக நிதானமாக, அதே நேரத்தில் தளராத தொலைநோக்கோடு மேற்கொண்டோம்.