2012 ஆம் ஆண்டு இலங்கை சென்ற நண்பர் ஒருவரிடம் என்னிடம் கொடுத்து விடும்படி திரு.கே.எஸ்.சிவகுமாரனால் கொடுத்து விடப்பட்டிருந்த ‘கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில’ நூல் அண்மையில்தான் என் கைகளை வந்தடைந்தது. 🙂 மறக்காமல் நினைவில் வைத்திருந்து நூலை என்னிடம் சேர்ப்பித்த நண்பருக்கு நன்றி. 🙂
இது போல் இன்னுமொருவரிடமும் திரு.கே.எஸ்.சிவகுமாரன் நூல்கள் சிலவற்றைக் கொடுத்திருந்த விபரத்தை நண்பர் சில வருடங்களுக்கு முன்னர் அறியத்தந்திருந்தார். ஆனால் நூல்கள் இன்னும் என் கைகளுக்கு வந்து சேரவில்லை. 🙂
இன்னுமொருவரிடம் கொடுத்திருந்த நூல் பொதி பெற்றவர் இன்னுமொருவரிடம் கொடுத்து சிறிது காலம் தாழ்த்தியென்றாலும் வந்து சேர்ந்து விட்டது.
‘கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில’ நூல் கைக்கடக்கமானது. கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பதற்கொப்ப மிகுந்த பயன் மிக்கது. குறிப்பாக ஆவணச்சிறப்பு மிக்கது. இந்நூலில் கே.எஸ்.எஸ் அவர்கள் எழுத்தாளர்களைபற்றி, வெளிவந்த நூல்கள் பற்றி, தன்னைப் பாதித்த அண்மைக்கால நாடகங்கள், சிங்களத்திரைப்படம் பற்றி, என்று பல விடயங்களைப்பற்றி , எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
அமரர் சோமகாந்தன் தினகரன் வாரமஞ்சரியில் எழுதிய ‘காந்தன் கண்ணோட்டம்’ என்னும் பத்தி எழுத்துகள் பற்றியொரு கட்டுரை தொகுப்பிலுள்ளது. இச்சிறு கட்டுரை சோமகாந்தனின் பத்தி எழுத்துகளை விபரிப்பதுடன், பத்தி எழுத்துகள் பற்றிய கே.எஸ்.எஸ் அவர்களின் கருத்துகளையும் உள்ளடக்கியிருப்பது இதன் சிறப்பு.
‘காந்தனின் கண்ணோட்டம்’ பத்தி எழுத்துகளைப்பற்றி கே.எஸ்.எஸ் அவர்கள் பின்வருமாறு கூறுவார்:
” நான் இந்த எழுத்துகளை வெகு ஆவலுடனும், ஆர்வத்துடனும் வாசித்து வந்தேன். விளைவு: ஆனந்தம், தகவற்கள விரிவாக்கம், செயற்பாட்டுப்பயன். ஆனந்தம் ஏனெனில் தமிழ்மொழியின் சொல்வளம் பத்தி எழுத்தாளரின் கை வண்ணத்தால் பல பரிமாணங்கள் எடுப்பதை அனுபவித்து புளகாங்கிதம் நான் அடைந்தமை. தெரியாத சில விபரங்களைக்கோர்த்து அவர் தரும் பாங்கு எனது அறிவை விருத்தி செய்ய உதவியமை சொல்லப்பட வேண்டும். காந்தனின் சிந்தனைகள் செயற்பாட்டுத் தன்மை கொண்டவையாதலால், அவருடைய பத்திகளைப் படிக்கும் நான் செயலூக்கம் பெறுகின்றேன்.”